மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

அரையாண்டுக் கடன் ரூ.2.88 லட்சம் கோடி!

அரையாண்டுக் கடன் ரூ.2.88 லட்சம் கோடி!

2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியா ரூ.2.88 லட்சம் கோடியைக் கடனாகப் பெறும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய அரசு 2017-18 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது வரும் நிதியாண்டுக்கான அரையாண்டில் சற்று குறைவான அளவிலேயே கடன் வாங்கும். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா ரூ.3.72 லட்சம் கோடி கடன் பெற்றிருந்தது. 2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியா ரூ.2.88 லட்சம் கோடி கடன் பெற வேண்டியிருக்கும். இந்தக் கடனைப் பெறுவது உள்நாட்டுக் கடன் சந்தைகளால் எளிதாகும். குறுகிய காலத்தில் இந்தக் கடன் பெறப்படும்.

இந்தக் கடன் தொகையை 12 நிறுவனங்களிடம் ரூ.12,000 கோடி அளவில் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் முதல் அரையாண்டுக்கான மதிப்பில் 47.56 சதவிகிதத்தைக் கடனாகப் பெற வேண்டியுள்ளது. வழக்கமாக முதல் அரையாண்டுக்கான பட்ஜெட்டில் 60 சதவிகிதத்தைக் கடனாகப் பெற வேண்டியிருக்கும். இந்த முறை குறைந்துள்ளது” என்றார். 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.6.06 லட்சம் கோடி வரையில் கடன் பெற இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அறிவித்திருந்தார். 2017-18 நிதியாண்டில் கடன் இலக்கு ரூ.5.8 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இலக்கைத் தாண்டி மொத்தம் ரூ.6 லட்சம் கோடி கடன் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon