மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

போலீஸார் சீருடையுடன் கோயிலுக்குள் நுழையத் தடை!

போலீஸார் சீருடையுடன் கோயிலுக்குள் நுழையத் தடை!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் போலீஸார் காக்கி சீருடையுடன் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் போலீஸாருக்கு குர்தா மற்றும் வேஷ்டி சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில். உலகம் முழுவதும் இருந்து பெரும்பாலான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் கோயிலின் பாதுகாப்புக் கருதி, மூன்று ஷிப்ட்டுகளில் காவலர்கள் கோயிலில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாரணாசி ஐஜி தீபக் ரத்தன் கூறுகையில், ”கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் போலீஸார் முன்னிலையில் சங்கடமாக உணர்கிறார்கள். ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள், இதைத் தொந்தரவாக உணர்கிறார்கள். மேலும், இதுகுறித்து புகார்களும் வந்துள்ளன. அதனால் பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் போலீஸாருக்கு காக்கி சீருடைக்குப் பதிலாக, மஞ்சள் கலர் குர்தாவும் வேஷ்டியும் சீருடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முதல் இந்தத் திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

வழக்கமாகச் சட்டம் ஒழுங்கு கடமை போலீஸ் சீருடையில் இருக்க வேண்டும். ஆனால் விஐபி பாதுகாப்பு கடமையின்போது சாதாரண உடை அணியும்படி கேட்கிறார்கள்.

வழிபாட்டுக்குப் பால் மற்றும் இதர பொருள்களைப் பயன்படுத்துவதால், போலீஸாரின் சீருடையும் அழுக்குப்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்களால் அடிக்கடி சீருடையை மாற்றவும் முடியாது. இதுவும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

குர்தா, வேஷ்டி அல்லாமல், கோயிலுக்கு ஏற்றாற்போல் எந்த உடை வேண்டுமானாலும் அணியலாம். மேலும், தாங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon