மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சென்னை கலைக் கண்காட்சி: யாருக்குச் சிலை வைப்பது?

சென்னை கலைக் கண்காட்சி: யாருக்குச் சிலை வைப்பது?

மதரா

சென்னைக் கவின்கலைக் கல்லூரியில் சிற்பத் துறையில் முதுகலை இறுதி ஆண்டு படித்துவருபவர் மாணவர் தாளமுத்து. எந்த உருவத்தையும் தனது கைகளினால் சிற்பமாக மாற்றிவிடக்கூடிய தாளமுத்துவுக்குக் குதிரைகளைச் சிற்பமாக்குவதில் அலாதி ஈடுபாடு.

குதிரைச் சிற்பம் என்றால் நிற்பது போன்றோ, நடப்பது போன்றோ, ஆக்ரோஷமாக ஓடுவது போன்றோ நமது மனதில் ஒரு சித்திரம் உடனடியாகத் தோன்றி மறையலாம். அந்த மாதிரியான சிற்பங்களை நாம் பல நேரங்களில் பார்த்திருப்போம். தாளமுத்துவின் குதிரைகள் வேறு ரகம். குதிரை தூங்குவது, தலைகீழாக நிற்பது, குட்டி போடுவது என அதன் வாழ்வில் கவனிக்கத் தவறிய பல நிகழ்வுகளை நுட்பமாகக் கவனித்துக் கலை படைப்பாக்கியுள்ளார்.

உதாரணமாக, குதிரை குட்டியை ஈனும் காட்சி. குதிரை பிரசவ காலத்தில் வலியுடன் தனது குட்டியை ஈனும் காட்சியைப் புகைப்படமாக இணையத்தில் தேடினாலும் கிடைப்பது கடினம். குதிரையின் கால்கள் பின்னியிருப்பதையும் குட்டி வெளிவருவதையும் தத்ரூபமாகச் செதுக்கிக் குதிரையின் வலியைப் பார்வையாளர்களுக்கும் கடத்தியுள்ளார் தாளமுத்து. இணையத்தில் இது தொடர்பான வீடியோக்களைப் பார்த்து அதை உள்வாங்கி இந்தச் சிற்பத்தை படைத்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால், நாம் இப்போது பேச வருவது இந்தக் குதிரைச் சிற்பத்தைப் பற்றி அல்ல. தாளமுத்துவின் கலை நோக்கைப் பற்றி.

வளர்ந்துவரும் சிற்பியான தாளமுத்துவின் எண்ணவோட்டத்தில், கலையைப் பார்க்கின்ற விதத்தில் நேர்மறையான பல பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது தற்போது சென்னை - பெசன்ட் நகர் ஸ்பேஸஸில் நடைபெற்று வரும் கலைக் கண்காட்சி. இக்கண்காட்சி ஒரு கலைஞனாகத் தனக்குள் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களும், சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களுமாக 33 பேர் இணைந்து அமைத்துள்ள இந்தக் கண்காட்சியின் நோக்கம் பின்னணி குறித்து நேற்றே நாம் நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். எந்த வகையில் தனக்கு அந்தக் கண்காட்சி முக்கியமானதாக அமைந்தது என்பது பற்றியும் தனது படைப்புகள் குறித்தும் தாளமுத்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

“மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை அமைத்தது எங்களது கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராய் சௌத்ரிதான். இப்போது நாம் அந்தச் சிலையை வடிப்போம் என்றால், அந்த வேலையை நமக்குத் தெரிந்த கலை மூலம் செய்தால் என்னவாக அது வரும் என்பது கண்காட்சியின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. ஒவ்வொருவரும் ஓவியம், வீடியோ என்று தங்களுக்கான மீடியத்தைத் தேர்வு செய்தபோது ஒரு சிற்பத் துறை மாணவனாக நான் ஒரு சிற்பம் செய்வது எனத் தீர்மானித்துக்கொண்டேன். மாணவர்களுடனும் பொறுப்பாளர் ஓவியர் கிருஷ்ணப்ரியாவுடனும் கண்காட்சிக்கான விவாதத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டேன்” என்று கூறினார்.

பேசிக்கொண்டே தாளமுத்து அரங்கின் வலது ஓரத்திற்குச் சென்றார். அங்கே மேடைக்கு அருகில் ஒரு பெண்ணின் மார்பளவு சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

யார் இந்தப் பெண் என நமக்குள் கேள்வி எழுந்த கணத்தில் தாளமுத்துவிடமிருந்து அதற்கான பதில் வந்தது. “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிராக்குகளின் நடுவே உள்ள மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலை செய்துவரும் ரேவதி அக்காவைத்தான் நான் சிற்பமாகச் செதுக்கியுள்ளேன்” என்று அவர் கூறியபோது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதிலிருந்து மீள்வதற்குள் அவரே அதன் காரணங்கள் குறித்தும் பேசத் தொடங்கினார். “யாராலும் எந்த வேலையையும் செய்துவிட முடியும் என்றாலும் குறிப்பிட்ட சில வேலையை மட்டும் எல்லோராலும் செய்துவிட முடியாது. அதில் முக்கியமானது மலம் அள்ளுவது. நமது வீட்டில் உள்ள கழிவறையில் அடைப்பு ஏற்பட்டால் நாம்தான் அதைப் பயன்படுத்தியிருந்தாலும், நாமே அதைச் சரிசெய்ய முயலாமல் வேறு ஆள் பார்க்க நகர்ந்து விடுகிறோம். ரயில் நிலையத்தில் யாரோ ஒருவரது மலத்தை அள்ளும் அந்தப் பெண்களின் வலி கொடுமையானது. பொதுவாகத் தலைவர்களுக்குத்தான் நாம் சிலை வைத்துப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பார்க்கின்ற ஆனால் கவனிக்க மறுக்கின்ற இவர்களுக்குச் சிலை வைத்தால் என்ன என்று யோசித்தேன். அதன் விளைவாகவே இதை உருவாக்கினேன்” என்று கூறினார்.

உழைப்பைக் கலையாக மாற்றுவதில் உள்ள சிக்கல்

இந்தச் சிலை செய்யும்போதே அது சில விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. “சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற இச்செயலை செய்யப் பணிக்கப்படுகின்ற இவர்களைக் கலை என்று கூறிக்கொண்டு சிலையாகச் செய்து காட்சிக்கு வைக்கிறீர்கள். அந்த நபரோ, அந்த நபர்களைச் சார்ந்தவர்களோ, அவரது குடும்பத்தினரோ இதைப் பார்க்க நேர்ந்தால் என்ன மாதிரியான மனநிலையில் அதை எதிர்கொள்வார்கள்? உதாரணத்துக்கு எனது அம்மாதான் ரேவதி என்றால் மற்றவர்கள் முகம் சுளிக்கின்ற வேலையைச் செய்கிறவர் என்று நீங்கள் காண்பித்துக்கொடுக்கும்போது என் மனநிலை என்னவாக இருக்கும்?” என்று கமல் என்ற மாணவர் தாளமுத்துவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணப்ரியா தொடக்க நிகழ்வில் பேசும்போது, “அத்தகைய கேள்வி குறிப்பிட்ட இந்த படைப்பிற்கானதாக மட்டுமல்லாமல் உழைப்பை முன்னிறுத்தி நடத்தப்படுகின்ற இந்தக் கண்காட்சியையே கேள்விக்குட்படுத்துவதாகவும் இருக்கிறது. அதற்கான பதில் எங்களிடத்தில் இல்லை” என்று நேர்மையோடு தன் கருத்தை முன்வைத்தார்.

சம்பந்தப்பட்டவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள் என்னும் கமலின் கேள்விக்குத் தாளமுத்து ஒரு பதிலைக் கொடுத்துள்ளார். அதுவும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. “ரயில் நிலையத்தில் அனுமதி வாங்கி டிராக்கின் கீழ் இறங்கி அங்கு சுத்தம் செய்துகொண்டிருந்தவர்களைச் சந்தித்துப் பேசினேன். என் விருப்பம் குறித்து சொன்னேன். அவர்களுக்கு மிகவும் சந்தோஷம். பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிடும் மக்கள் கூட்டத்தில் நான் சந்தித்துப் பேசியதே தங்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்ததாகக் கூறினார்கள். அவர்களது பணிச்சூழல், இதற்குள் தள்ளப்பட்ட விதம், மற்ற வேலைகள் மறுக்கப்படுவது என அவர்களது அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். குப்பைகளை அகற்றுதல் போன்ற எளிதான வேலை என்று கூறித்தான் இவர்களை இந்த வேலைக்குள் அழைத்துவருகின்றனர். ஆனால், கொடுமையான வேலைகள் தரப்படுகின்றன. காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு வந்துவிட்டால் ஓய்வு என்பதே கிடையாது. மொத்தத்தில் ஒரு மணி நேரம்தான் ஓய்வு. இதில் மேற்பார்வையாளர்களின் நெருக்கடி வேறு” என்று அவர்களுடைய வாழ்வின் போராட்டத்தைத் தாளமுத்து விவரித்தார்

அவர்களில் ரேவதி அக்காவை மட்டும் ஃபைபரில் சிலையாக வடித்த தாளமுத்து அதை அவர்களிடம் கொண்டுசென்று காண்பித்தபோது பிரமித்துப்போனார்களாம். “நான் எதிர்பார்க்காத பிரமிப்பு அதுஎங்களையும் பெரிய மனுஷங்களுக்கு வைக்கிற மாதிரி சிலை செய்திருக்கிறீர்களே என்று கூறினார்கள். ரேவதியைப் போன்று எங்களையும் சிலை செய்ய மாட்டீர்களா என மற்ற அக்காக்களும் கேட்டனர். நான் அவர்கள் எல்லோரையும் போர்ட்ரைட்டாக வரைந்து காட்டினேன். அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த முயற்சியை ரேவதி அக்கா போன்றோர் அங்கீகாரமாகப் பார்க்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களையும் நான் வரைந்த போர்ட்ரைட்களையும் இங்குக் காட்சிக்கு வைத்துள்ளேன். மலம் என்றால் அருவருப்பாகப் பார்க்கிறோம். ஆனால், அதை அவர்கள் தூக்கிச் சுமக்கிறார்கள். எனவேதான் எனது இந்த போர்ட்ரைட் ஓவியங்களைத் தொகுத்து அமைத்துள்ள இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே மலத்தைப் படம் எடுத்து வைத்துள்ளேன். இதுவே கமலுக்கு நான் கூறும் பதில்” என்று தாளமுத்து பதிவு செய்தார்.

இந்தச் சிற்பத்தைக் கொச்சியில் நடைபெற்ற கண்காட்சியிலும் இங்கும் மட்டும் அவர் காட்சிக்கு வைக்கவில்லை. அதற்கும் முன் அவர் வைத்த இடம்தான் முக்கியமானது. எந்த ரயில் நிலையத்தில் ரேவதி அக்கா வேலை செய்கிறாரோ அதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் தினமும் வந்து செல்லும் அந்த நிலையத்தில் டிராக்குகளின் இடையில் மலம் அள்ளிக்கொண்டிருந்த ரேவதி அக்காவை நிமிர்ந்துகூடப் பார்க்க நேரம் இல்லாமல் சென்ற ஜனத்திரள் ஒரு நிமிடம் நின்று அது யாருடைய சிலை என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலைப் பெற்றுச் சென்றது.

காவலர்களும் ஏன் இந்தக் கூட்டம் என்று விசாரித்துள்ளனர். விஷயத்தைக் கூறியதும் முருகன் என்ற காவல் துறை அதிகாரி காட்சி முடிகின்ற வரையில் அவர்கள் கூடவே நின்றுகொண்டாராம். “தம்பி இந்தி பேசுற போலீஸ்காரர்களும் நிறைய பேர் இருக்காங்க. நான் அந்தப் பக்கம் போயிட்டேன்னா ஏன் எதுக்கு நிற்கிறீங்கன்னு உங்களை போகச் சொல்லிருவாங்க. உங்களாலேயும் அவங்கட்ட விளக்கிச் சொல்ல முடியாது” என்று கூறி பல மணி நேரமாக அவர்களுடனே நின்றுள்ளார்.

சிலைகள் குறித்து இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெரிய சர்ச்சைகள் எல்லாம் கிளம்பிக்கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு கலைஞனுக்கே உரிய முறையில் தாளமுத்து அதற்கு எதிர்வினை ஆற்றியிருப்பதாகவும் இதைப் பார்க்கலாம். இவரது மற்றொரு படைப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை கவின் கலைக் கல்லூரிதான் செங்கல்லின் தரப்படுத்தப்பட்ட அளவான 4.5 x 9 அளவை வடிவமைத்தது என மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தொடக்க நிகழ்வில் பேசியபோது கூறியிருந்தார். அந்தச் செங்கல்லின் மாதிரியை வடிவமைத்துக் காட்சிப்படுத்தியுள்ளார் தாளமுத்து. “எங்களது கல்லூரி தொழிலாளர்களுக்கான பள்ளியாகவே ஆரம்பத்தில் இருந்தது. உள்ளேயே ஒரு செங்கல் சூளையும் இருந்துள்ளது. அங்குள்ள ஒரு செங்கல்லை ரப்பர் மோல்டு எடுத்து இதைச் செய்தேன்” என அதன் உருவாக்கம் குறித்தும் தாளமுத்து பேசினார்.

தனது கலை யாரைப் பற்றிப் பேச வேண்டும், யாருக்காக நிற்க வேண்டும் என்ற தெளிவை ஓர் இளம் கலைஞனுக்குள் ஏற்படுத்தி அதை வளர்த்தெடுக்கும் இந்தக் கலைச் செயல்பாடுகளின் சங்கமமாக இந்தக் கண்காட்சி இருக்கிறது. அது ஏற்படுத்தியுள்ள விவாதமும் கவனிக்கத்தக்கது. இந்த விவாதம் தாளமுத்து போன்ற கலைஞர்களால் இனிவரும் காலங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று நம்பலாம். அந்த விவாதம் கலைக்கும் சமகாலத்துக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலான உறவை மேலும் தெளிவுபடுத்துவதாக அமையக்கூடும்.

(கண்காட்சி குறித்தும் மற்ற மாணவர்களின் படைப்புகள், அனுபவங்கள் குறித்தும் நாளைக் காலை 7 மணிப் பதிப்பில்)

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon