மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

நாடாளுமன்றத்தில் அதிமுக: காவிரிக் கரைக்காரனின் நேரடி அனுபவம்!

நாடாளுமன்றத்தில் அதிமுக: காவிரிக் கரைக்காரனின் நேரடி அனுபவம்!

ஜி.கே.முரளிதரன்

நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் அவையை நடத்த விடுவதில்லை என்ற செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. எம்.பிக்கள் எல்லோரும் அதிமுக மப்ளரோடு சபாநாயகியம்மாவைச் சுற்றி நின்றுகொண்டு கோஷம் போடுவதும் அந்தம்மா சிநேகமாகச் சிரித்துக்கொண்டே ‘கோ டு யுவர் சீட்’ என்று தொடர்ந்து சொல்வதும் அங்கு நிஜமாகவே என்னதான் நடக்கிறது என்று பார்த்தேயாக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்காக டெல்லி சென்றிருக்கையில், என் அருமை நண்பர் ஒருவர், “நான் பார்லிமென்ட் பார்க்கப் போறேன். நீங்களும் வருவதானால் உங்கள் பெயரையும் சொல்லிவிடுகிறேன். ஒரு ஐடி மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மொபைல்போனை ரூமிலோ அல்லது காரிலோ வைத்துவிடுங்கள். பத்து மணிக்குப் போறோம். ரெடியாகிடுங்க” என்று உரிமைக் குரலோடு சொல்லிவிட்டுப் போனார்.

காவிரிப் பிரச்சினையில் நம் மாநிலப் பிரதிநிதிகள் உண்மையாகவே உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களா என்று பார்க்கும் முடிவுடன் அவருடன் இணைந்துகொண்டேன்.

மொபைல்போனை வைத்துவிட்டு வந்ததால் படம் பிடிக்க முடியவில்லை. ஆறு இடங்களில் அவிழ்த்துப் பார்க்காத குறையாகச் சோதனை செய்கிறார்கள். இவ்வளவு எச்சரிக்கையா இருந்தும் எப்படி நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே துப்பாக்கியோடு தீவிரவாதிகளால் நுழைய முடிகிறது என துணுக்குற்றபடியே தேசப்பிதா காந்தியடிகளின் சிலை இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

எல்லாப் பத்திரிகையாளர்களும் அங்கே கேமராக்களோடு நின்றிருந்தார்கள்.

ஏழெட்டு அதிமுக எம்.பிக்கள் ஹார்ஸ் ஷு ஃபார்மேஷனில் அட்டென்ஷனாக நின்றுகொண்டு கோஷம் போட ஆரம்பித்தார்கள்...

மத்திய அரசே மத்திய அரசே... காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு...

வேண்டும் வேண்டும்... தண்ணீர் வேண்டும்... என்ற இரண்டு கோஷங்களையும் சிரித்துக்கொண்டே ஜாலியாக முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

எல்லாம் ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தாங்க…

ஒரு பெண் எம்.பியிடம் (காஞ்சிபுரம் மரகதம் குமரவேல் என்று பின்னர் அறிந்துகொண்டேன்) “என்னங்க பத்து பேர்கூட இல்ல... மொத்தம் எம்.பிங்க நாற்பத்தி ஒன்பது பேராச்சுங்களே?” என்று கேட்டேன்.

“நீங்க எந்த ஊரு? பிரஸ்ஸா?” என்றார்.

“இல்லைங்கம்மா நான் திருச்சி. இங்க ஒரு செக்ரட்டரிய பாக்க வந்தேன். பிரஸ்ஸெல்லாம் இல்லீங்க” என்றேன்.

அப்பாடா எனப் பெருமூச்சோடு சொன்னார். “இதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தாங்க... நீங்க அடிக்கிறா மாதிரி அடிங்க... நாங்க அழுவுறா மாதிரி நடிக்கிறோம்ங்கற கதைதான் இங்க நடக்குது” என்றார்.

“சரிங்க திமுககாரங்க யாரும் வர்லிங்களா?” என்றேன்.

“அவங்க நாலஞ்சு பேர் ஆர்எஸ்ல (ராஜ்ய சபா) இருக்காங்க, அவங்க வந்தா ரொம்ப டாமினேஷன் பண்ணி அட்ராசிட்டி பண்ணுவாங்க. என்னமோ தெரியல அவங்கதான் வந்து ரொம்ப கத்துவாங்கனு பார்த்தா முதல்நாள் வந்ததோட சரி. அதுக்கப்பறம் ஊஹூம்...” என்று திமுகவைச் சிறுமைப்படுத்திய மகிழ்ச்சியில், “சரிங்க நீங்க மேலே போங்க” என்று பார்வையாளர் பகுதியில் அமர வழிகாட்டி அனுப்பிவைத்தார்.

மேலே உப்பரிகையிலிருந்து கீழே பார்க்கையில் நம் அன்புத் தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலை கம்பீரமாகத் தெரிந்தது. வட்ட வடிவமான மண்டபத்தில் நான்கு சிலைகள் என்ற அமைப்பில் நாற்பத்தி எட்டுச் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கின்றன.

அதற்குள் காவலர்கள் அவசரப்படுத்தவே பார்வையாளர் பகுதியில் அமரும் வரிசையில் இணைந்தோம். இங்கும் நான்கு இடங்களில் உடலைத் தடவினார்கள். செக்கிங்காம்... பாவிகள் என் பையில் கவச குண்டலம்போல எப்போதும் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் போட்டோவைக்கூட எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

நாடாளுமன்றக் காட்சிகள்

உள்ளே போய் அமர்ந்து நான்கு நிமிடத்துக்கெல்லாம் சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் வந்து அமர்ந்தார். நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் இருவர்தான் சீனியர்களில் சீக்கிரம் வந்திருந்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமர்வு நடப்பதால் இருக்கைகள் காலியாகக் கிடந்தன. முலாயம் சிங் ஒருவர் மட்டுமே இருந்தார். அட அவருக்குப் பக்கத்தில் நம்ம தம்பிதுரை உட்கார்ந்திருந்தார்.

வெளியே அதிமுக எம்.பிக்கள் ஐம்பது பேரில் ஆறேழு பேர் அதுவும் ஓர் ஈடுபாடு இல்லாமல் சிரித்துக்கொண்டே கோஷம் போடுகிறார்களே, இவரும் வந்து நின்றிருந்தால் இவருக்குப் பயப்பட்டாவது ஓர் அஞ்சாறு பேர் வந்திருப்பார்களே என ஆதங்கப்பட்டேன்.

என் ஆதங்கத்துக்குக் காரணமிருக்கிறது.

அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் என ஐந்து நிமிடங்கள் கத்திய பின் ஆந்திராவின் சந்திரபாபு கட்சியினரும் தெலங்கானாவின் சந்திரசேகர் ராவ் கட்சியினரும் இணைந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இரு வேறு கட்சிகளாக இருந்தாலும் அவர்களிடம் ஒரு டெடிகேஷன் இருந்தது. மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகளில்கூடத் தமிழக எம்.பிக்கள் ஒன்றுகூட மாட்டேன்கிறார்களே என்று கவலைப்பட்டேன்.

தம்பிதுரை சென்ட்ரல் ஹாலுக்கு வந்தால் கேட்டே தீருவது என நினைத்துக்கொண்டே காலரியில் முன்வரிசையில் அமர்ந்துகொண்டேன். சபாநாயகியம்மாள் அமர்ந்த அடுத்த நொடியே அதிமுக, டிடிபி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக கத்த, பொறுக்க முடியாத சபாநாயகியம்மாள் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து எழுந்து சென்றார்.

தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு விஸ்தீரணமாகத்தெரியும் சபை நேரில் பார்க்கும்போது பொசுக்கென்று இருக்கிறது. இருப்பது இல்லாதது என எதைக் காட்டினாலும் ரொம்பப் பெரிசாகக் காட்டுவதுதான் தொலைக்காட்சியின் வேலை என உணர்ந்து கொண்டேன்.

வட்ட வடிவக் கட்டடத்தின் பின்பக்கம் ராஜ்ய சபா செயல்பட்டு வருகிறது. சென்ட்ரல் ஹாலுக்குப் போகும் வழியில் ராஜ்ய சபாவிலிருந்து வெளியே வந்த, அன்னை இந்திரா காந்தியின் அன்புத் தோழியும் நேரு குடும்பத்துக்கு மிகுந்த நம்பிக்கைக்குரியவருமான பஞ்சாப் பெண் சிங்கம் அம்மா அம்பிகா சோனி அவர்களைப் பார்த்து வணங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வாழ்த்துகளைப் பெற்றேன்.

பின்னாலேயே வந்துகொண்டிருந்த திருச்சி சிவா, “என்ன சார் மீட்டிங் போகாம இங்க இருக்கீங்க?” என்று தோழமையோடு விசாரித்துக்கொண்டே கடந்து போனார்.

சென்ட்ரல் ஹாலுக்குப் போய் லெமன் டீ அருந்தினேன். ஒரு கெட்டில் நிறையக் கொடுத்து வெறும் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். இதில் மட்டும்தான் வயிறும் மனசும் நிறைந்தது.

முகத்தில் தெரியாத அகம்

நான் எதிர்பார்த்தது போலவே தம்பிதுரை வந்தார்.

வணக்கம் சொல்லிவிட்டு, “நீங்க ஏங்கண்ணே ஆர்ப்பாட்டத்துல கலந்துக்கல?” எனக் கேட்டேன். எந்த பதிலும் சொல்லாமல் ஒரு பத்து செகண்ட் என் முகத்தைப் பார்த்தார். நகர்ந்துவிட்டார்.

நானும் அவர் முகத்தை உற்றுப் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொன்னவன் தம்பிதுரையைப் பார்த்தால் தற்கொலை செய்துகொள்வான்.

அவர் என்ன நினைத்திருப்பார் என இந்த நிமிடம் வரை என்னால் யூகிக்க முடியவில்லை. மூப்பனார் ஆயிரம் முறை பெட்டர்.

டீ குடித்துவிட்டு காமராஜரின் சிலை இருந்த இடம் நோக்கிப் போனேன்.

பாபு ஜெகஜீவன்ராம், ஒய்.பி.சவான், ஏ.ஜி.கோபாலன் சிலைகளுடன் பெருந்தலைவர் சிலை இருந்தது. தமிழக அரசியல் தலைவர்களில் கம்பீரமாக வலம்வந்தவர் நம் பெருந்தலைவர் காமராஜர். மீதமிருந்த மூன்று தலைவர்களும் ராஜ கம்பீரமாகப் பத்தடி உயரத்தில் பரந்து விரிந்து நிற்க, காமராஜரின் சிலை மட்டும் அவர் சர்க்கரை வியாதிக்காரராக இருந்தால் எப்படி மெலிந்திருப்பாரோ அப்படி இளைத்துப்போய் நிற்கிறது.

வடக்கத்திக்காரர்களுக்குத்தான் தெரியாது, அக்கறையில்லை. தமிழகத்திலிருந்து சென்ற காங்கிரஸின் மதிப்பு மிகுந்த செல்வாக்கு மிகுந்த மந்திரிகளோ அல்லது நாடாளுமன்ற அங்கத்தினர்களோ இந்தக் குறையைச் சுட்டிக்காட்டிக் களைந்திருக்கலாம்.

இவர்களுக்கு இதிலெல்லாம் எப்போதுமே அக்கறை இல்லை என்பதால்தான் காங்கிரஸ் இங்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக இளைத்துப் போனது என நினைக்கிறேன். இது காமராஜர் சிலை கொடுத்த சாபமாகக்கூட இருக்கக்கூடும் என்று நொந்துகொண்டே வெளியே வந்தேன்.

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு:

ஜி.கே.முரளிதரன் கலை, இலக்கிய ஆர்வலர். நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் பல மேடை நாடகங்களில் நடித்தவர். ஃபேஸ்புக்கில் காங்கிரஸ் கட்சியின் துடிப்பான படைப்பாளர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாயப் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon