மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தயாரிப்பாளர்களுக்கு எதிராக அபிராமி ராமநாதன் தலைமையில் அணி!

தயாரிப்பாளர்களுக்கு எதிராக அபிராமி ராமநாதன் தலைமையில் அணி!

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த வாரமே வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு தியேட்டரிலும் 15 சதவிகித அளவுக்குக்கூட மக்கள் வருவதில்லை எனக் கூறுகிறார்கள் தியேட்டர்காரர்கள்.

ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த நான்கு வாரங்களாகப் புதிய படங்கள் வராத காரணத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வரவேயில்லை. மார்ச் 16ஆம் தேதி முதல் தியேட்டர்காரர்களே அரசை எதிர்த்துப் போராட்டம் என அறிவித்தார்கள். ஆனால், அரசு தரப்பில் கெடுபிடி எழுந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர்களே திடீரென வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொண்ட சம்பவமும் நடந்தது.

டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்தை எதிர்த்துதான் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது. வருங்காலங்களில் டிஜிட்டல் சேவைக்கான விபிஎப் (VPF-Visual Projection Fee) கட்டணங்களைச் செலுத்த மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரக் காலமாக வேறு வழியில்லாமல் தியேட்டர்காரர்களே அதை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி, தியேட்டர்காரர்கள்தான் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் பேசி அதைச் சரிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தைத் தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கியுள்ளது.

நேற்று (27.03.18) மாலை தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் மீண்டும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. காலை முதல் அதற்கான எந்த ஏற்பாடுகளும் இரு தரப்பிலிருந்தும் செய்யப்படவில்லை. எனவே, கூட்டமும் நடைபெறவில்லை. நேற்று இறுதி முடிவு எட்டினால் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்படும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்துவந்த நிலையில் கூட்டமே நடக்கவில்லை. அதே வேளையில் அரசின் ஆதரவு பெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அபிராமி ராமநாதன் தலைமையில் கூட்டணி ஒன்றை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசின் துணையோடு ஃபைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி உள்ள பாஸ்கர் தி ராஸ்கல், டிக் டிக் டிக் ஆகிய இரு படங்களையும் விலைக்கு வாங்கி ரிலீஸ் செய்துவிட்டால் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தத்தை முறியடித்து விடலாம் என வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ‘காலா’ வந்துவிட்டால் தயாரிப்பாளர்கள் சங்கம் பலவீனமாகிவிடும் என அபிராமி ராமநாதன் வேலை திட்டத்தை அறிந்த தயாரிப்பாளர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இந்த யோசனையின் தாக்கத்தால் இப்போது வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி உள்ளதாகத் தெரிகிறது

அரவிந்தசாமி நடித்து நீண்ட நாள்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் பாஸ்கர் தி ராஸ்கல், ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் ஆகிய இரண்டு படங்களின் தமிழ்நாடு உரிமையை விநியோகஸ்தர்கள் துணையுடன் வாங்கி வெளியிடும் முயற்சியில் அபிராமி ராமநாதன் ஈடுபட்டுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் குற்றம்சுமத்தத் தொடங்கி உள்ளனர்.

சென்ற வாரம் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முதல் ஆளாக வந்தவர் அபிராமி ராமநாதன்.

சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு கூறுவதாகக் கூறிச் சென்றவர்கள், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் உடனடியாகக் காலையில் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவித்தனர். அங்கே நிர்வாகிகளிடம் கலந்து பேச வேண்டும் என ஏன் கூறவில்லை என தனித் திரையரங்கு உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் அபிராமி ராமநாதனை நோக்கி கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

‘எல்லா காலகட்டத்திலும் திரைத்துறை வேலைநிறுத்தங்களைச் சீர்குலைக்கும் வகையில் அபிராமி ராமநாதன் சுயநலத்துடன் செயல்படுகிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு சங்கப் போராட்டத்தை முறியடிக்க முயற்சிக்கும் அபிராமி ராமநாதன் தியேட்டரில் தமிழ்ப் படங்களே திரையிட முடியாதபடி முடிவு எடுக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் மூத்த தயாரிப்பாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

சிறு படத் தயாரிப்பாளர்கள் போன்று தனித் திரையரங்குகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தவர்கள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் பிரச்சினை வெடிக்கலாம் என்பதே இன்றைய நிலை.

- இராம்

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon