மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மன்றத்தினருக்கே முக்கியத்துவம்: ரஜினி உத்தரவு!

மன்றத்தினருக்கே முக்கியத்துவம்: ரஜினி உத்தரவு!

“நாம 32 மாடி பில்டிங் கட்டிக்கிட்டிருக்கோம். அஸ்திவாரம் பலமா இருக்கணும். இங்க ஒவ்வொரு செங்கல்லும் நமக்கு முக்கியம்”என்று அண்மையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் குறிப்பிட்டார் ரஜினிகாந்த். அவர் 32 மாடி என்று குறிப்பிட்டது தமிழகத்தின் 32 மாவட்டங்களை; பில்டிங் என்று சொன்னது தனது கட்சியை; செங்கல் என்று குறிப்பிட்டது மன்றத்து உறுப்பினர்களை.

இப்படியான நிலையில் ரஜினி அண்மையில் இமயமலை சென்றிருந்தபோது ரஜினி மக்கள் மன்றத்தில் முதன்முறையாக பதவிச் சண்டை என்று வெடித்து செய்திகளில் பரபரப்பாக அடிபட்டது திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றம்.

இம்மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட சீனியர் மன்றத்துக்காரரான தம்புராஜ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மாவட்டப் பொறுப்பாளரான ஸ்பின்னிங் மில் ஓனரான அரவிந்த் என்பவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் சேர்த்துப் பார்ப்பார் என்று மன்றத்தில் இருந்து அறிவிப்பு வந்தது. இதையடுத்து தம்புராஜுக்கு ஆதரவாக மாவட்டத்தின் நிர்வாகிகள் ஒன்று திரண்டதாகச் செய்திகள் வந்தன.

இதுதொடர்பாக மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில், பதவிச் சண்டையில் கலகலக்கும் ரஜினி மன்றம் என்ற தலைப்பில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம்.

இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி, மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கத்தையும் சுதாகரையும் இமயமலையில் இருந்தே அழைத்து விசாரித்துள்ளார் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருக்கு போன் போட்ட ரஜினி, “எத்தனை மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிச்சிருக்கீங்க? சில மாவட்டங்களில் சரியான ஆட்களை போடவில்லைன்னு தொடர்ந்து எனக்குப் புகார் வந்துட்டுதான் இருக்கு. நான் முன்னாடியே உங்ககிட்ட என்ன சொன்னேன்... எந்த பிரச்சினையும் வராமல் நம்ம மன்ற நிர்வாகிகளுக்கு முன்னுரிமை கொடுத்துதானே நிர்வாகிகளை நியமிக்கச் சொன்னேன். மன்றத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஆட்களைப் பொறுப்பில் போட்டு முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்க... நான் இங்கே வந்துட்டாலும் என்னால் நிம்மதியா இருக்க முடியலை. என்கூட இருக்கும் ஆட்களோட நம்பரை தேடிப்பிடிச்சு போன் பண்ணிட்டுதான் இருக்காங்க. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க...” என்று கோபத்துடன் பேசியதாகச் சொல்கிறார்கள்.

அதற்கு சுதாகர், “மன்றத்தில் இருக்கிறவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு சொன்னேன். ஆனால், ராஜூ மகாலிங்கம்தான் மன்றத்தைத் தாண்டியவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு சொன்னாரு. உங்ககிட்ட பேசிக்கிறதா அவருதான் சொன்னாரு...” என்று சொன்னாராம். “நான் ராஜூகிட்ட பேசுறேன்...” என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டாராம் ரஜினி.

ஆனால், ராஜூவிடம் ரஜினி பேசவில்லையாம். ரஜினியோடு வந்த நண்பர் ஒருவரை விட்டுப் பேச வைத்திருக்கிறார். ரஜினியுடன் பயணம் மேற்கொண்டு இருக்கும் நண்பர் ராஜூவுக்கு போனில் பேசியிருக்கிறார்.

“நிர்வாகிகள் நியமனத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து போன் வந்துட்டே இருக்கு. தலைவர் ரொம்பவும் வருத்தப்படுறாரு. உங்களை நம்பித்தானே எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு வந்தாரு. மன்றத்துல இருக்கிறவங்களை ஒரேயடியாக ஒதுக்குவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? தலைவரோட பேஸ்மெண்ட் என்பதே அவரோட ரசிகர்கள்தானே... நிர்வாகிகள் நியமனத்துல மன்றத்தில் இருக்கிறவங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க. தலைவர் எங்ககிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. அவரு உங்ககிட்ட பேசுவாரு. அதுக்கு முன்னாடி இதை உங்ககிட்ட சொல்லணும்னுதான் நான் போன் பண்ணினேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ராஜூ, “சிலருக்கு அந்தப் பகுதிகளில் நல்ல பேரே இல்லை. அதனால்தான் பல பகுதிகளில் நிர்வாகிகள் நியமனத்தில், மன்றத்தில் இருக்கிறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியலை... இருந்தாலும் அதையும் தாண்டி எவ்வளவு செய்ய முடியுமோ செஞ்சி இருக்கோம்...” என்று சொல்லி இருக்கிறார்.

ரஜினி சென்னை வந்து சேர்ந்த பிறகும் இது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. “நான் அரசியலுக்கு வர்றதுக்கு அடிப்படையே ரசிகர்கள்தான். அவங்க சாபத்துக்கு ஆளாகி எந்த விஷயமும் செய்யத் தேவையில்லை” என்பதே ரஜினியின் ஒற்றை உத்தரவாம்!

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon