மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் சவால்!

சிறப்புக் கட்டுரை: இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் சவால்!

அ.குமரேசன்

சொட்டு மருந்து எப்போது வந்ததோ அப்போதிருந்துதான் போலியோ பரவியது என்று யாராவது சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வோம்? அப்படி எடுத்துக்கொள்ளத்தக்க ஒன்றுதான், “எப்போது இடஒதுக்கீடு என்று வந்ததோ அப்போதிருந்துதான் சாதிப் பாகுபாடுகள் முன்னுக்கு வந்தன” என்ற வாதம். சாதி ஒரு சமூக அடையாளமாக மட்டுமில்லாமல், ஏற்றத்தாழ்வின் அடித்தளமாகவும் இருந்தது, இன்றும் இருக்கிறது என்ற உண்மையை மறைப்பது, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகிய இடஒதுக்கீடு கொள்கைக்கு இந்த மண்ணில் இடமே இல்லாமல் செய்ய வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்போரது ஒரு தந்திரமும்கூட. அவர்களது வாதம் சரிதானோ என்று எண்ணவைப்பது போல அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலும் பல சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோர், “எங்களைப் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு தெருவுக்கு வருகிற செய்திகள் நம் வீடுகளுக்கு வருகின்றன.

அதேபோல், “நாங்கள் மொத்தமாக மதம் மாறிவிடுவோம்” என்ற எச்சரிக்கையோடும் சில சமூகப் பிரிவுகள் அறிவிப்பதையும், அதிகார பீடத்தினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும் காண்கிறோம். “இந்துவாகப் பிறந்த நான் இந்துவாக இறக்க மாட்டேன்” என்று முழங்கிய டாக்டர் அம்பேத்கர், தமது வாழ்வின் இறுதி அத்தியாயத்தில், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து புத்த மதத்துக்கு மாறினார். வைதீக மதம் நிறுவியிருந்த மானுட அவமானப் பாகுபாடுகளுக்கு எதிராக, அன்று கௌதம புத்தர் தொடங்கிய இயக்கத்துக்கான காரணங்கள் 2,600 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்வதைத்தான் அம்பேத்கர் இயக்கம் எடுத்துக்காட்டியது. சமணம், சீக்கியம் ஆகிய சமயங்களின் பிறப்பு எடுத்துக்காட்டுவதும் அதைத்தான்.

வாழைப்பழத்தில் ஏற்றப்படும் துருப்பிடித்த ஊசி

அப்படி எடுத்துக்காட்டிய பிறகும் அந்தக் காரணங்களை ஒழிப்பதற்கு மாறாக, மதமாற்ற முயற்சிகளை, “ஆசை காட்டி, பணம் கொடுத்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடக்குமுறைகளால் பயமுறுத்தி மதமாற்றம் செய்யப்படுகிறது” என்று வாழைப்பழத்தில் துருப்பிடித்த ஊசியை ஏற்றுகிறவர்கள் ஏற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எனக்கு அந்தப் பெரிய மனிதர்களைப் பற்றிய விமர்சனத்தைவிட, அந்தக் கூற்றை உண்மையென்று நம்பி, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை எதிரிகளாகப் பார்க்கிற இளைய தலைமுறைகள் பற்றிய துயரம்தான் எப்போதும் மேலோங்கும். தட்டுத்தடுமாறி முன்னேறத் துடிக்கிற சமுதாயத்தின் எதிர்காலம் இவர்கள் கையில் சிக்கினால் என்ன ஆகும் என்ற துயரம் அது.

லிங்காயத்து மரபின் பின்னணி என்ன?

தங்களைப் பிற்படுத்தப்பட்ட சாதியினராக அறிவிக்கக் கோருதல், பிற மதத்துக்கு மாறப்போவதாக எச்சரித்தல் ஆகிய செய்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கர்நாடகத்தின் கிட்டத்தட்ட 18 விழுக்காடு அளவுக்கு இருக்கிற லிங்காயத்து மக்களின் போராட்டம். தங்களைத் தனி மதமாகவே அறிவிக்க வேண்டுமென்பது அவர்களுடைய கோரிக்கை. தாங்கள் இந்துவல்ல; தனியொரு மதம்தான் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அது ஏதோ மரபுவழி வந்த, கடவுள் நம்பிக்கை போன்றதல்ல. மரபுகளை உடைத்துப் புறப்பட்டு ஒரு சமூக இயக்கமாக உருவெடுத்த ஒரு கொள்கை அது.

900 ஆண்டுகளுக்கு முன்பு, பிராமணக் குடும்பத்தில் பிறந்து, பிராமணியக் கொடுமைகளை எதிர்த்து மக்களைத் திரட்டிய போராளி பசவண்ணா. வேதம் உள்ளிட்ட சமய நூல்களை ஆழ்ந்து படித்த அவர், அவை மனிதர்கள்மீது சுமத்திய பாகுபாடுகளை மறுத்து முன்வைத்த சீர்திருத்தக் கருத்துகளையும் மாற்று சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கட்டமைத்த சமூக வாழ்க்கை முறைதான் லிங்காயத்து. மேலோட்டமாகப் பார்த்தால், இந்துக்களின் ஒரு தெய்வமான சிவனின் சின்னமான லிங்கத்தைத்தான் இவர்களும் வணங்குகிறார்கள், அவர்களைப் போலவே திருநீறு பூசிக்கொள்கிறார்கள். பிறகு எப்படி தங்களை இந்து அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும் என்ற குழப்பம் ஏற்படும். ஆனால் லிங்காயத்துகள் வழிபடும் லிங்கம் ஆணாதிக்கத்தின் பாலியல் உறவுக் குறியீடாக உருவகப்படுத்தப்பட்ட லிங்கமல்ல. அவர்கள் வழிபடுவது பசவண்ணா தனது பரப்புரைகள் வழியாக எடுத்துச் சென்ற இஷ்ட லிங்கம். அது மனதில் உறைவது.

அதே வேதங்களின் வழியாகச் சமூக ஏற்றத்தாழ்வுகளை வலிமையாகக் கெட்டிப்படுத்த முயன்ற ஆதிசங்கரரின் போதனைகளைத் தடுக்கும் கேடயமானார் பசவண்ணா. இதற்காக அன்றைய காலச்சூரி மன்னரால் தண்டிக்கப்பட்டார். வைதீகவாதிகளால் புழுதிவாரித் தூற்றப்பட்டார். குறிப்பிட்ட சமூக மக்கள் எதிரே வந்தால் தெருவே தீட்டாகிவிடும், அவர்கள் தங்களது எச்சிலைத் தெருவில் துப்பக் கூடாது, ஒரு மண் சட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டுதான் வெளியே வர வேண்டும், அதிலேதான் துப்ப வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த ஒடுக்குமுறைகளைத் தனது பக்திப் பாடல்களாலும், பயமில்லாப் பேச்சுகளாலும் தட்டிக்கேட்டவர் பசவண்ணா. அவரது பொருளாதார அறிவையும் நேர்மையையும் கண்டு அரண்மனையில் நிதியமைச்சர் பொறுப்பை அளித்தவர்தான் மன்னர் பிஜ்ஜாலா. ஆனால், அந்த நிதி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அடித்தட்டு மக்களின் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, குடியிருப்பு போன்றவற்றுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வைதீகவாதிகள் ஆத்திரத்தோடு சொல்லிக்காட்டியதைத் தொடர்ந்து, ‘வர்ணப் புனிதம்’ காக்க அமைச்சர் பதவியை பசவண்ணாவிடமிருந்து மன்னர் பறித்துக்கொண்டார்.

பிறப்பல்ல, நடத்தையே தகுதி

அரண்மனைப் பதவியிலிருந்து விடுதலை கிடைத்ததும் முழு முனைப்போடு சமூக மாற்றத்துக்கான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் பசவண்ணா. ஒருவரது சமூகத் தகுதியைத் தீர்மானிப்பது பிறப்பல்ல, அவரது நடத்தைதான் என்று அறிவித்தார். அவரது இயக்கத்தில் இணைந்தவர்கள் சரணர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிறப்பால் ஒருவர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவரானாலும், சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் சரணர்களோடு சமமாக இணைய முடியும். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மட்டுமல்ல, பாலினப் பாகுபாடுகளுக்கும் முடிவுகட்ட முனைந்தது பசவண்ணாவின் சரணர் இயக்கம். அந்த மாற்றங்களுக்கான கருவியாக பசவண்ணா கையில் எடுத்துக்கொண்டது பக்தி வழிதான்.

பிற்காலத்தில் பல மடங்கு முற்போக்காகவும் தீவிரமாகவும் எழுந்த பல சமூகத் சீர்திருத்த இயக்கங்களுக்கு பசவண்ணாவின் இயக்கம் ஒரு முன்னோடி என்றால் மிகையில்லை. அவருக்குப் பிறகு வந்தவர்களால் சரணர்கள் ஒரு சமூகக் குழுவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்கள். சீர்திருத்தங்களுக்குப் புறம்பான சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாகுபாடுகளும் ஊடுருவின என்ற விமர்சனத்தையும் வரலாற்றாய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். தலைவர்கள் முன்வைக்கிற சித்தாந்தங்களையும் லட்சியங்களையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு வெறும் சிலைகளாய், சித்திரங்களாய், வழிபாட்டு உருவங்களாய் தடம் மாறுகிற வரலாற்றுச் சோகம் பல இயக்கங்களின் மீதும் படிந்துபோவதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.

லிங்காயத்து மக்களின் வரலாற்றுத் தொடக்கத்தை ஆய்வுபூர்வமாக நினைவூட்டுவதற்கும் பலர் வந்துகொண்டுதான் இருந்தார்கள். அவர்களிடையே இருந்துகொண்டே அதைச் செய்தவர்களும் உண்டு. வெளியே இருந்துகொண்டு, முற்போக்கான மாற்றங்களுக்குத் துணையாக நின்றவர்களும் உண்டு. பேராசிரியர் எம்.எம்.கல்பூர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் உள்ளிட்டோர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். அந்த இருவரையுமே சுட்டுக்கொன்றவர்கள் எந்த வகை?

லிங்காயத்துகள் தங்களைத் தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த கோரிக்கையைக் கர்நாடக மாநிலத்தின் சித்தராமையா அரசு இன்று ஏற்றுள்ளது. மாநில சிறுபான்மையினர் சட்டப்பிரிவின் கீழ் இதற்கான ஒப்புதலை அளிக்க அவரது அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய அரசு இதற்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்பதால், மோடி அரசின் முடிவுக்கு சித்தராமையா அரசு தனது முடிவை அனுப்புகிறது. மத்திய ஆட்சியில் இருக்கிற பாரதிய ஜனதா கட்சிக்கு இதன் மூலம் ‘செக்’ வைத்திருக்கிறார் சித்தராமையா என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், மாநில அரசின் முடிவை மத்திய அரசு ஏற்றாலும் சிக்கல், ஏற்காவிட்டாலும் சிக்கல் என்ற நிலைமை ஏற்பட்டிருப்பதையும் - அடுத்து என்ன ‘மூவ்’ நடைபெறும் என்ற சுவையான எதிர்பார்ப்புடன் - அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மாநிலத்தில் செல்வாக்குள்ள பாஜக தலைவர் எடியூரப்பா ஒரு லிங்காயத்து என்பதையும் அவர்கள் கவனப்படுத்துகிறார்கள்.

இதற்கு ஆதி சைவர்கள் மகாசபை என்ற அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. லிங்காயத்துகள் என்போர் ஆதி சைவர்களோடு இணைந்த பிரிவுதான். ஆதி சைவர்களிடமிருந்து லிங்காயத்துகளைப் பிரித்து எப்படித் தனி மதமாக அறிவிக்க முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். லிங்காயத்துகளை ஆதி சைவர்களோடு இணைத்தது பிற்காலத்திய ஏற்பாடு, அதைத் தாங்கள் எப்படி ஏற்க முடியும் என்று தனி மதக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்கள் வாதிடுகிறார்கள். மாநில அரசின் அறிவிப்பை அவர்கள் வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். அப்படிக் கொண்டாடுகிறவர்கள் மீது, ஆதி சைவர் வட்டத்திலிருந்தோ, இந்து என்ற பெரிய வேலியிலிருந்தோ வெளியேறுவதை ஏற்காதவர்கள் ஆங்காங்கே தாக்குதல் தொடுக்கிறார்கள்.

லிங்காயத்துகளின் கோரிக்கையை ஆராய்வதற்காக என அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட குழு அதை ஏற்கலாம் என்று பரிந்துரைத்த அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறது மாநில அமைச்சரவை. கடந்த ஜனவரியில்தான் குழு தனது அறிக்கையை அளித்தது. அதை இவ்வளவு விரைவாக அரசு ஏற்றதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று பாஜகவினர் மட்டுமல்லர்; ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் மட்டுமல்லர், கட்சி சாராத அரசியல்/சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள். வாக்கு வங்கி அரசியல்தான் இது என்கிறார்கள்.

(இதற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறதா? அரசியல் என்றால் அது எத்தகைய அரசியல்? இந்த முடிவின் தாக்கங்கள் எப்படி இருக்கும்? – நாளை...)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon