மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

நியூட்ரினோ ஒரு மாயமான்!

நியூட்ரினோ ஒரு மாயமான்!

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களும் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அப்பகுதியில் சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படாது எனச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்ததன் பேரில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தப்படும் தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய பாஜக அரசு அராஜகமாக அனுமதியளித்து இருப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

“மக்களிடம் கருத்து கேட்காமல், சுற்றுப்புறச்சூழல் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடிய, பாதுகாப்பற்ற ஒரு திட்டத்துக்கு மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருப்பதும், முல்லை பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளுக்கும் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் தண்ணீரை இந்தத் திட்டத்துக்காக எடுத்துக்கொள்ள அனுமதித்து இருப்பதையும் சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகவே கருதுகிறேன்” என்று குற்றம்சாட்டியுள்ள அவர், “அதிமுக அரசு வழக்கம் போல தமிழ்நாட்டு நலனைக் காலடியில் போட்டு மிதித்துக்கொண்டு, வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இதற்குத் தமிழக மக்களிடம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“இத்திட்டத்துக்குத் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது. அதை முதலமைச்சர் முன்கூட்டியே உறுதிசெய்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்ட அவர், “எந்தவொரு திட்டமும் மக்களுக்குப் பாதுகாப்பானதா என்பதுதான் முதல் கேள்வி. ‘வளர்ச்சி’ என்ற ஒற்றைப்புள்ளியை ‘மாயமான்’ போலக்காட்டி, மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் வேட்டு வைக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதை அதிமுக அரசும் தட்டிக்கேட்காமல் இருப்பது சிறிதும் சகித்துக்கொள்ள முடியாத, பொறுப்பற்ற செயலாகவே அமைந்திருக்கிறது” என்றும் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

“ஆகவே, மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்திருக்கின்ற சுற்றுப்புறச்சூழல் அனுமதியை எதிர்த்து, அதிமுக அரசு தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்றும், “அதில் உரிய உத்தரவைப் பெறும்வரை திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையைத் தடைசெய்ய வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon