மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஏர் இந்தியா ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா?

ஏர் இந்தியா ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா?

தனியார்மயமாகவுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தனது பங்கு விற்பனையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ளதால் இந்நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடன் சுமையிலிருந்து மீள ஏர் இந்தியாவின் சொத்துகளில் ரூ.500 கோடி அளவுக்கு விற்பனை செய்ய கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமானால் அதில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அவர்களிடையே இருந்தது. ஏர் இந்தியாவை வாங்கும் தனியார் நிறுவனம் அதன் பழைய ஊழியர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு புதிதாகப் பணி நியமனம் செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியாவின் பங்கு விற்பனையில் புதிய விதிமுறை ஒன்றை அரசு நிர்ணயிக்க உள்ளது. அதன்படி, ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்ட பிறகு அதன் ஊழியர்களை ஓர் ஆண்டுக்குப் பணிநீக்கம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையைச் சேர்க்கவுள்ளது. அதன் பின்னர் அந்த ஊழியர்களுக்குச் சில சலுகைகள் வழங்கி விருப்ப ஓய்வு பெறச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆகும். மேலும், ஏர் இந்தியா ஊழியர்களின் சராசரி வயது 55. எனவே, இந்த நடவடிக்கையால் அந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட், ஏர் இந்தியா சாட்ஸ், ஏல்லியன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா இன்ஜினீயரின் சர்வைசஸ் ஆகிய ஐந்து கிளை நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், ஏர் இந்தியாவில் மொத்தம் 22,000 பேருக்கு மேல் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon