மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புப் பார்வை: தமிழகம் பாலைவனம் ஆகிவிடாமல் இருக்க…

சிறப்புப் பார்வை: தமிழகம் பாலைவனம் ஆகிவிடாமல் இருக்க…

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ஈரோடு திமுக மாநாட்டில் பேசியதன் சுருக்கம்.

ஹார்மன் கோட்பாடு, ஹெல்சிங்கி கொள்கை ஆகியவை சர்வதேச நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன. இருதரப்பும் பேச்சுவார்த்தை, சமரசம், சமாதானம், விசாரணை, சம்மதம், பின் நீதிமன்ற முடிவு அல்லது இருதரப்பும் ஒப்புக்கொள்கின்ற அமைதியான வேறு வழிகளைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கோட்பாடு.

1966இல் ஆகஸ்டு 20 அன்று ஹெல்சிங்கியில் நடைபெற்ற நதிநீர் மாநாட்டில் ஐ.நா. மன்றமும், சட்ட வல்லுநர்களும் கலந்துகொண்டு நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க முக்கிய முடிவுகளை எடுத்தனர். அவை:

1. நதிநீர் வடிநிலப் பகுதி உள்ள ஆறுகள், ஏரிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும்.

2. உடன்பாடு, பாத்தியம், பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நதிநீர்ப் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும்.

3. ஆறுகள் பாயும் அனைத்துப் படுகைப் பகுதிகளுக்கும் ஆற்றின் மீது உரிமை உண்டு.

4. நீர்ப் பகிர்வுக்கு உண்மையான விவரங்களைக் கொண்டு தீர்வு மேற்கொள்ள வேண்டும்.

5. ஒரு நாட்டின் உரிமையில் மற்ற நாடு குறுக்கீடு செய்யக் கூடாது.

நதிகள் இணைப்புத் திட்டம்

நதிகள் தேசியமயமாக்கல், நதிகள் இணைப்பு குறித்து நான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த 2012 பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் தங்களுக்கு அக்கறை இருப்பதாகக் கூறிவரும் மத்திய அரசு இதுவரை அதற்கான ஈடுபாட்டைக் காட்டவில்லை.

நதிநீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த நதிநீர் இணைப்புக்கான சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். அக்குழுவுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலைமை வகிக்க வேண்டும். குழுவில் மத்திய நீர்வளத் துறை செயலர், மத்திய வனம் – சுற்றுச்சூழல் துறை செயலர், மத்திய நீர் வள ஆணையச் செயலர், தேசிய நீர் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – செயலர் உள்பட 15 பேர் இடம்பெற வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு கூடி திட்ட அமலாக்கம் பற்றிய முடிவுகளை ஆராய வேண்டும். ஆண்டுக்கு இருமுறை அதன் அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய வேண்டும். நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும்போது பல கட்டங்களில் திட்டமிடுவது, அமல்படுத்துவது, நிறைவேற்றுவது ஆகிய பணிகளை சிறப்புக் குழு மேற்கொள்ள வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்தப் பரிந்துரைகளை ஓராண்டாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே உடனே நிறைவேற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

நதிகள் இணைப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு, ஆந்திரம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் எதிர்த்தன.

தமிழகத்தில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டின் முதல் நதிகள் இணைப்புத் திட்டமாக இருக்கும்.

இந்த நதிகள் இணைப்புத் திட்டம் செயல்வடிவம் பெற்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கு வழியமைக்கும் வகையில் கனடியன் அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்படும் நீர், மணிமுத்தாறு கால்வாய் வழியாக, சாத்தான்குளம், திசையன்விளை சென்றடையும். கேரளத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகள் இணைக்கப்பட்டால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகள் பாசன வசதி பெறும். கங்கை – காவிரி நதிகளுடன் தாமிரபரணி வரை இணைத்து கேரளத்தில் ஓடும் அச்சன்கோவில் – பம்பை நதிகளை வைப்பாற்றுடன் இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற மனுவின் சாரம்.

கேரளத்தில் ஆறுகளில் நீர்வளம் 2,500 டி.எம்.சி. அதிகம். இதில் கேரளம் பயன்படுத்துவது வெறும் 600 டி.எம்.சி.தான். மீதி கடலுக்குச் செல்கிறது. அதில் 400 டி.எம்.சி.யை தமிழகத்துக் கொடுக்க மறுக்கிறது. இது என்ன நியாயம்? இதில் பல நீர்ப் பிடிப்புப் பகுதிகள் தமிழக எல்லையையொட்டி உள்ளன. தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்துவருகிறது.

பாழடிக்கப்பட்ட ஏரி, குளங்கள்

1947இல் நாடு விடுதலை பெற்றபோது தமிழகத்தில் 60,000 ஏரி, குளங்கள், நீர் நிலைகள் இருந்தன. சுயநலப் போக்கோடு இந்தக் குளங்களை சமூக விரோதிகள் கபளீகரம் செய்துவிட்டனர். இதில் பாதி நீர்நிலைகளே தற்போது உள்ளன. தமிழக அரசு பொதுப் பணித் துறை ஒப்புக்குப் பராமரித்துவரும் ஏரிகள் 39,202 எனக் கணக்கில் உள்ளது. 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் அப்போது அமைந்திருந்தன. உள்ளாட்சி அமைப்புகள் 20,413 ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளைத் தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கின்றன.

ஆனால் இவை யாவும் கணக்கில் மட்டுமே உள்ளதே அன்றி ஆயக்காட்டுதாரர்கள் பயன்படுத்தும் அளவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குடிமராமத்துப் பணிகளும், கடந்த 40 ஆண்டுகளில் சரியாக நடத்தப்படவில்லை. இயற்கை வழங்கிய நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இதற்கான மேலாண்மைக் கொள்கையும் இன்றைக்குள்ள சூழ்நிலையில் வகுக்க வேண்டுமென்றும் மூன்று மாதத்திற்கு முன்னால் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினேன். தமிழக அரசு அந்தக் கடிதத்தின்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இதைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று உரிய ஆணையைப் பெறச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல்போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக்கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் 18,789 பொதுப்பணித் துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற கணக்கில் தமிழக நீர்நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாயச் சாகுபடி நிலங்களும் குறைந்துகொண்டேவருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இருக்கின்ற நீர் நிலைகளைத் தூர் வாராமல் மதகுகளைச் சரிவரப் பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதைத் தடுக்காமல் இருந்ததால் நீர் நிலைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலைக் கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன. நீர் நிலைகளைச் சரிவரப் பாதுகாக்காமலும் ஆயக்கட்டு நலன்களைப் புறந்தள்ளியதாலும் இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

மன்னராட்சியில்கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும் நீர்நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டன. இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக்கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நதிகள் என்றைக்கும் நிரந்தரமானவை. தாயை வணங்குவதைப் போல நதிகளை வணங்கிப் பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படைக் கடமையாகும்.

1965-2000க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த 37 சதவிகித குளத்து நீர்ப் பாசனங்கள் அழிந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,402 ஏரிகள். இதில் பல ஏரிகள் காணாமல் போய்விட்டன.

பயன்படா நீரும் தேவை அதிகரிப்பும்

இந்தியாவில் ஓடும் நதிகளின் நீர்வளத்தில் 20 சதவிகிதம் மட்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. மீதம் 80 சதவிகிதமும் கடலில் வீணாகக் கலக்கிறது. அதில் நாற்பது சதவிகித நீரை முறையாகப் பயன்படுத்தினால் சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது நதிகள் இணைப்பு நிபுணர்களின் வாதம்.

தேசிய நதிகளை இணைப்பதன் மூலம் பாசன வசதி பெருகும், உள்நாட்டில் மீன்பிடித் தொழில் மேம்படும், நீர்வழிப் பயண வசதி ஏற்படும், குடிநீர் வசதி, நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இவற்றின் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

உலக மக்கள்தொகையில் 17 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். நீர் வளத்தில் 4 விழுக்காடு, உலக நிலப்பரப்பில் 2.6 விழுக்காடு மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமானது. நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஆகியவற்றால் நீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் குறைவு ஆகியவற்றால் நீர் வளம் குறைந்து வருகிறது. நீரைத் தனியாருக்குத் தாரை வார்க்கவும் கொள்கைகள் வகுக்கப்பட்டுவருகின்றன.

நீர் மேலாண்மை என்னும் அருமருந்து

இனிமேலாவது நீர் மேலாண்மையை விழிப்புணர்வோடு அணுகி நாம் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சினைகளால் உலகப் போர் ஏற்படும் என்று பலர் சொல்கின்றனர். தமிழகத்தில் அறிந்தும் அறியாமலும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்தால்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.

ஐ.நா. மன்றத்தின் அறிக்கை, தமிழகம் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நதிநீருக்காக அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. தாமிரபரணி நதி மட்டும் தமிழகத்தின் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது. மற்ற அனைத்து நதிகளும் அண்டை மாநிலங்களை நம்பிதான் உள்ளன. இப்படியான நிலையில் நீர்ப் பாதுகாப்பு மேலாண்மையைக் காக்கப் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். நாளை தளபதி தலைமையில் அமையவிருக்கின்ற கழக ஆட்சியில் இதை சரிவர மேற்கொள்ள மாநிலத்தில் நீர்வளத் துறை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கிச் சரியான அமைச்சரின் தலைமையில் இயங்க வேண்டுமென்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

சிறப்புப் பார்வை: தமிழக நதிநீர் எதிர்கொண்டுள்ள அபாயங்கள்!

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon