மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

தினகரன் தேடிவந்த பின்னணி!

தினகரன் தேடிவந்த பின்னணி!

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் ஓஎன்ஜிசி நிறுவன பணிகளைக் கண்டித்து நேற்று (மார்ச் 27) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தலைவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து ஆதரவளித்தார். மேலும், இனி மக்கள் போராட்டங்களில் அமமுகவும் இணைந்து போராடும் என்றும் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

தினகரன் தேடிவந்த பின்னணி குறித்து நாம் விசாரித்தோம். நடராஜன் காலமானதையடுத்து 15 நாள்கள் பரோலில் வந்துள்ள சசிகலா தஞ்சையில் தங்கியுள்ளார். இதனால் தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் தஞ்சையில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில் அம்மாபேட்டையில் ஒஎன்ஜிசிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் தஞ்சையிலிருக்கும் தினகரனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனே விரைந்து வந்து தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார் தினகரன்.

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். ஆனால், தற்போது கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலின்போது சுயேச்சை என்கிற இமேஜை உடைத்து பலமான கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், தற்போதைய நிலையில் விசிக, மதிமுக, இடதுசாரி இயக்கங்கள் அனைத்தும் திமுகவுடன் தோழமையாக உள்ளன. எனவே, இந்தக் கட்சிகளையும், விவசாய இயக்கங்களையும் தன் பக்கம் இழுத்து பலமான கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கவே இந்தச் சந்திப்பும், ஆதரவும் என்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி தினகரன் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களும் கலந்து கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த யூகத்துக்குத் தனது செய்தியாளர் சந்திப்பிலும் பதிலளித்தார் தினகரன், “காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். டெல்டா மக்கள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஒஎன்ஜிசி மூலம் கியாஸ் எடுப்பது உள்ளிட்ட எதையும் விரும்பவில்லை. இதற்கான போராட்டத்துக்காகத்தான் அனைத்துத் தலைவர்களும் வந்துள்ளனர். அவர்களை கைது செய்யப்பட்டது அறிந்து ஆதரவளிக்க வந்தேன். எங்கள் தொண்டர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் பிரச்சினைகளில் அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் கூட்டணி குறித்தும் வெற்றி குறித்தும் பேசலாம்” என்று தெரிவித்தார்.

‘காவிரி பிரச்சினைக்கும் கர்நாடகத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதே’ என்ற கேள்விக்கு, “தேர்தல் ஆணையம் சம்பந்தமில்லை என்றுதான் கூறும். ஆனால், கர்நாடகத் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால்தான் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக வேறு பெயர்களை சொல்லி மத்திய அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எவ்வித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது” என்று தெரிவித்தவர், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட வேண்டும். இதில் நாம் அரசியல் பார்க்க வேண்டாம். மக்களைப் பாதுகாக்கவே அரசியல் இயக்கங்கள் உள்ளன” என்றும் தெரிவித்தார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon