மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

தலைமை நீதிபதிக்கு எதிராக காங். கையெழுத்து வேட்டை!

தலைமை நீதிபதிக்கு எதிராக காங். கையெழுத்து வேட்டை!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதிநீக்கம் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. இன்று (மார்ச் 28) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று கூறி, கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். மூத்த நீதிபதிகளுக்கு உரிய வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்றும், நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதிருப்தி நீதிபதிகளைச் சந்தித்துப் பேசினார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. ஆனால், நீதிமன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறி, மத்திய பாஜக அரசு இந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 9ஆம் தேதியன்று லோயா மரண வழக்கு சுதந்திரமாக விசாரணை செய்யப்பட வேண்டுமென்று கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தன எதிர்க்கட்சிகள். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 114 எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது, ராம்நாத் கோவிந்த்திடம் சிபிஐ அல்லாத சுதந்திரமான சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டுமென்று தெரிவித்தார் ராகுல். அதைப் பரிசீலனை செய்வதாகக் குடியரசுத் தலைவர் உறுதியளித்தார். மேலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் அதிருப்தி தெரிவித்தன எதிர்க்கட்சிகள்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென, நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 28) அக்கட்சி கண்டனத் தீர்மானம் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இன்று இல்லாவிடில், வரும் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி நிறைவடைவதற்குள் இதைக் கொண்டுவரும் என்று தெரிகிறது. நீதித் துறை நிர்வாகத்தில் அதிருப்தி, லோயா மரண வழக்கு விசாரணை, மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை தீபக் மிஸ்ரா மீது காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நடத்திய கையெழுத்து வேட்டையில் தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசு மீது நேற்று (மார்ச் 27) நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், மக்களவையில் ஏற்பட்ட அமளியின் காரணமாக அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். அதிமுக எம்.பிக்களே தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதாகவும், பாஜகவின் மறைமுக ஆதரவுடன் இதை நிறைவேற்றுவதாகவும் குற்றம்சாட்டியது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைக் குறிவைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்த பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இப்படியொரு கண்டனத் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சி கொண்டுவரவுள்ளது. நீதிமன்றத்தின் துணையுடன் பாஜக பல முடிவுகளை அமல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon