மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

Avengers Infinity War: ஒரு கலைக் கொலை!

Avengers Infinity War: ஒரு கலைக் கொலை!

மார்வெல் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ திரைப்படத்தை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆங்கிலப் படமாக இருந்தாலும், தமிழகத்தில் மார்வெல் படங்களுக்குத் தனி மார்க்கெட் இருக்கிறது. அதிலும், இம்முறை ரஜினியின் ‘காலா’ திரைப்படத்துடன் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாவதால் இதன் மவுசு கொஞ்சம் அதிகம். இப்படியெல்லாம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படத்தின் ‘தமிழ் டிரெய்லர்’ ரசிகர்களை எந்தளவுக்கு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொண்டு, தற்போது வெளியாகியிருக்கும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் - தமிழ் டிரெய்லரைப் பார்த்தால் மிஞ்சுவது சோகம் மட்டுமே.

ஆங்கிலப் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் தனித்துவமே அதில் இடம்பெறும் வசனங்கள் தான். ‘என்ன வசனமே புரியல’ என்று கேட்டால், ‘வசனமா முக்கியம் படத்தைப் பாரு’ என்று ஆங்கிலப் படங்களைப் பார்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. சப்-டைட்டிலில் ஓடிக்கொண்டிருக்கும் ஆங்கில வார்த்தைகளைப் படித்துக்கொண்டே, கதையின் ஓட்டத்தையும் விட்டுவிடாமல் படம் பார்க்கும் கலையை கச்சிதமாகக் கற்றுக்கொண்டுவிட்டனர் தமிழக ஹாலிவுட் ரசிகர்கள். ஆனாலும், தமிழில் டப் செய்து வெளியிடும்போது படம் பார்க்கும் இலகுவான சூழலே டப்பிங் படங்களுக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தின. அந்த வகையில் முதல் பாகத்தில் அழுத்தமான குரல்களாலும், ஹாலிவுட் தர இசையின் மீட்டரிலேயே அமைந்த ஒலிக் கலப்பினாலும் மக்கள் மனம் கவர்ந்த அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது ஏற்கமுடியாதது.

டப்பிங் திரைப்படம் என்றாலும், கதையின் தாக்கம் மற்றும் தன்மை ஆகியவற்றை முன்வைத்து வசனங்களை எழுதுவது இவற்றின் அடிப்படை சாராம்சம். ஆனால், அதைக் கடைப்பிடிக்காமல் ‘அந்தாளுக்கு ஒரு கேடயத்தைக் கொடு’ என்று வசனம் எழுதுவதற்கு எப்படி கைவருகிறது என்பது புரியவில்லை.

1990களில் தமிழகத்தைக் கலக்கிய ஜாக்கி சான் திரைப்படங்களின் யுக்தி இது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், திரைப்படம் பார்க்கும் அனுபவத்தில் முன்னேறிக்கொண்டே செல்லும் ஒரு இனத்துக்கு இப்படிப்பட்ட வசனங்களைக் கொடுப்பதன் மூலம் திரைப்படத் துறை அல்லது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் திறன் ஆகியவற்றை பின்னோக்கி இழுப்பதற்கான ஒரு செயலாகவே இதனைப் பார்க்கவேண்டியதிருக்கிறது.

'Evacuate the City' என்று ஆங்கில டிரெய்லரில் இடம்பெற்ற வசனத்தை ‘நகரத்தை வெளியேற்றுங்க’ என்று மொழிப்பெயர்ப்பு செய்திருக்கிறார்கள். இதைத்தான் அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் அல்ட்ரான் செய்தது. பிறகு ஏன் திரும்ப செய்யச் சொல்கிறார்கள் என்று பார்த்தால், ‘நகரத்தை(அதிலிருக்கும் மக்களை) வெளியேற்றுங்கள்’ என்று சொன்னதைத்தான் இப்படி மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதைவிட முக்கியமான ஒரு வசனம் இருக்கிறது.

‘Dread it. Run from it. Destiny still arrives’ என்ற வசனத்தை ‘பயப்படு. அதைவிட்டு ஓடு. தீர்ப்பு கிடைச்சே தீரும்’ என்று மாற்றியிருக்கிறார்கள். உலகத்தை அழித்து அதனிடமிருந்து சிலவற்றை எடுக்க வரும் தானோஸுக்கு அறிமுகமாக அமைந்திருக்கிறது இந்த வசனம். கதைப்படி ‘பயந்தாலும், வணங்கினாலும், அதனிடமிருந்து ஓடினாலும் விதி உன்னை வந்து சேரும்’ என அந்த வசனத்தை அமைத்திருக்கிறார்கள். தானோஸ் என்ற பராக்கிரம வில்லனுக்கு அறிமுகமாய் அமைந்திருக்கும் இந்த வசனத்தை, நேரடியாக தானோஸின் பெயரைச் சொல்லியே எழுதியிருக்கலாம் அல்லவா? ஆனால், ஆங்கிலத்தில் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இதைத்தான் பொது சினிமாவுக்கான வசனங்கள் என்கிறார்கள். இந்த வசனத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து, உலகில் எந்த இடத்தில் பொருத்தினாலும் அது நெருடலின்றி பொருந்தும். ஆனால், இங்கு தமிழில் எழுதிய வசனம் அதற்கான இடத்திலேயே பொருந்தவில்லையே.

ஒருவரது பெயர், கையெழுத்தாக மாறுவதையே வளர்ச்சி என்கிறார்கள். அதுபோல, ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் உலகப்பொதுவாக மாறும்போது அது ‘Quotes'(சிந்தனை) எனப்படுகிறது. திரைப்படங்களில் இடம்பெறும் வசனங்களை, சிந்தனைகளாகத் தொகுக்கும் செயலை வேலையாகவே செய்யும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இது, அந்த வசனத்தை எழுதிய எழுத்தாளருக்குக் கிடைக்கும் கௌரவம் அல்லது அங்கீகாரம். அவெஞ்சர்ஸ் 2 திரைப்படத்தைப் பொறுத்தவரை, அதன் 80 சதவிகிதத்துக்கும் மேலான வசனங்கள் அப்படி மேன்மைப்படுத்தப்பட்டவை.

‘ஒன்றாக இருப்போம்’ என்று ஸ்டீவ் ரோகர்ஸ் சொல்லும்போது ‘நாம் தோற்றுவிடுவோம்’ என டோனி ஸ்டார்க் குறிப்பிடுவார். அதற்கு ஸ்டீவ் ‘அப்போது, அதையும் நாம் ஒற்றுமையுடனே செய்வோம்’ என்று இரண்டாவது டிரெய்லரில் இடம்பெறும் காட்சியில் குறிப்பிடுவார். இதையெல்லாம் படத்தில் எப்படி மாற்றியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதிலும் கடைசியாக ‘நீங்கெல்லாம் யாருன்னு சொல்றீங்களா?’ என்று தோர் பேசும் காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். சண்டையின் இடையே வந்துசேர்ந்த கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் ஹீரோக்களை தோர் விசாரிப்பதாக இருக்கும் இந்தக் காட்சியில், மூச்சு வாங்கிக்கொண்டே அவர் அந்த வசனத்தைப் பேசுவார். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் ‘நீங்கெல்லாம் யாரு’ என்று தோருக்குக் குரல் கொடுத்தவர் பேசியிருப்பது மது போதையில் ஒருவர் பேசுவது போலவே இருக்கிறது.

இவ்வளவு குறைகளையும் இப்போது எதற்கு விவாதிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் தமிழ் டிரெய்லரில் இருக்கும் இந்தக் குறைகளை மார்வெல் ஸ்டூடியோஸின் உயர் அதிகாரிகளுக்கு யாராவது தெரிவிக்கும் பட்சத்தில், அடுத்த மார்வெல் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டால் இழப்பு ரசிகர்களுக்குத்தான். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த டிரெய்லரின் தன்மை இருக்கிறது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் தமிழ் டிரெய்லர்

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon