மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

ஃபேஸ்புக்கைக் கைவிடும் திரைப்பிரபலங்கள்!

ஃபேஸ்புக்கைக் கைவிடும் திரைப்பிரபலங்கள்!

ஃபேஸ்புக் நம்பகத்தன்மையை இழந்துள்ளது என்ற செய்தியின் எதிரொலியாகத் தன் ஃபேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளார் பாலிவுட் நடிகரும் இயக்குநருமான பர்ஹான் அக்தர்.

சமூக வலைதளமான ஃபேஸ்புக், உலகின் பல்வேறு தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக செயல்பட்டுவருகிறது. சமீபத்தில் ஃபேஸ்புக் பயனர் ஒருவர் பயனர்களின் அழைப்பு விவரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்த தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தால் அவர்களது கவனத்திற்கு அப்பாற்பட்டு எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் கடந்த அமெரிக்க தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் தற்போதுள்ள அதிபர் டிரம்பிற்கு உதவியதாகச் செய்திகள் வெளிவந்தன. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் மதிப்பை இழந்துவருகிறது. ஃபேஸ்புக்கின் அலட்சியமான இதர செயலிகளின் அனுமதியே இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஃபேஸ்புக் கணக்கை வைத்து இதர நிறுவனங்களின் செயலியுடன் ஃபேஸ்புக்கை இணைத்துக்கொள்ளலாம்; அவ்வாறு இணையும்போது அவர்களது அனுமதி இல்லாமலே நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் #DeleteFacebook என்ற ஹேஸ்டாக்கை சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். இதனால் பெரும்பாலான ஃபேஸ்புக் பயனர்கள் தங்களது கணக்கை அகற்றினர்.

இந்நிலையில் தற்போது இந்தி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான பர்ஹான் அக்தர், தனது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக அகற்றியுள்ளார். ஃபேஸ்புக்கை நீக்கிய பிறகும் அவரது ஃபேஸ்புக் பக்கம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் தங்களது ஃபேஸ்புக் கணக்கை அகற்ற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon