மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 மா 2018

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடியும் விவசாயிகள் போராட்டமும்!

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடியும் விவசாயிகள் போராட்டமும்!

ஆரத்தி கிருஷ்ணன்

எதனால் இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி அண்மையில் மும்பையில் விவசாயிகள் நடத்திய பேரணிக்குப் பிறகு பரவலாக எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாகவே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய பங்காக விவசாயம் இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விவசாயிகளின் வாக்குகள் என்பதும் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானது. மானியங்கள், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள், வேளாண் நிதி, அதேபோல மாநில அரசின் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இதிலிருந்து, இந்தத் திட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவையாக இல்லை என்பது தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் வேளாண் நெருக்கடி பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வறட்சியால் போதிய தண்ணீரின்றி பயிர்கள் வாடியதற்காகப் போராட்டம் நடத்தினர். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மான்சூர் முதல் சேலம் வரை தங்கள் வேளாண் உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படவில்லை என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். தக்காளி, திராட்சை, வெங்காயம் மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களை சாலைகளில் கொட்டி போராட்டம் நடத்தியதை நாம் கண்டோம். வரலாற்று ரீதியாகவே இந்தியாவில் வேளாண் நெருக்கடி என்பது பருவமழைக் குறைபாட்டால் சாகுபடிக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டே அதிகளவில் நடந்துள்ளது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் உற்பத்தி மிகுந்து, நியாயமான விலை கிடைக்காமல் வருவாய் இழப்பிற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 1998-99 முதல் 2009-10 வரையிலான காலத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 85 மில்லியன் டன்னிலிருந்து 95 மில்லியன் டன்னாக அதிகரித்திருந்தது. அதற்குப் பின்னர் 2002 முதல் 2004 வரை நிலவிய கடுமையான வறட்சியால் உற்பத்தி சுருங்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் அரிசி உற்பத்தி 80 முதல் 90 மில்லியன் டன்னாக இருந்தது.

அதன் பின்னர் மீண்டும் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. 2011-12ஆம் நிதியாண்டில் 105 மில்லியன் டன்னை எட்டியது. தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமாகவே அரிசி உற்பத்தி இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2016-17ஆம் நிதியாண்டில் உற்பத்தி 110 மில்லியன் டன்னை எட்டியது. அதேநேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மொத்த விலை ஆண்டுக்கு 2.4 என்ற விகிதாச்சாரத்தில் அதிகரித்துள்ளது.

இதேபோலத்தான் கோதுமையின் வரலாறும் நீள்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 75 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி 2010-11ஆம் நிதியாண்டில் 94 மில்லியன் டன்னாக அதிகரித்தது. தற்போது ஆண்டுக்கு 97 முதல் 98 டன் வரை கோதுமை உற்பத்தியாகிறது. இது கிட்டத்தட்ட இந்தியாவின் தேவைக்கு இணையானதாக உள்ளது. இந்தியாவின் ஒரு ஆண்டு கோதுமை தேவை 100 மில்லியன் டன்னாகும். கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விநியோகமும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் விலையும் ஆண்டுக்கு 2 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது.

சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் பருப்பு தட்டுப்பாடு அதிகளவில் நீடித்து வந்தது. புரோட்டீன் தேவையை அதிகளவில் அளிக்கும் உணவாகப் பருப்பு இருந்து வருகிறது. ஆனால் விவசாயிகள் திடீரெனப் பருப்பு உற்பத்தியை வெகுவாக அதிகரித்தனர். 2010-11ஆம் நிதியாண்டில் பருப்பு உற்பத்தி ஆண்டுக்கு 14 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. அதற்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து 18 மில்லியன் டன்னை எட்டியது. இந்த உற்பத்தி மேலும் அதிகரித்து 2016-17ஆம் நிதியாண்டில் உச்சபட்சமாக 23 மில்லியன் டன்னை எட்டியது. இது உள்நாட்டுத் தேவைக்கு இணையாக இருப்பதாகவும் அரசு அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் சந்தையில் வரத்து அதிகரித்ததால் அதன் விலை சரிவடையத் தொடங்கியது.

இந்தப் பிரச்சினை மற்ற சில முக்கிய பயிர்களான கரும்பு மற்றும் தேயிலைக்கும் நீடித்தது. விலை வீழ்ச்சியானது பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளர்களையும் பாதித்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் உருளைக்கிழங்கு உற்பத்தி இருமடங்காகவும், தக்காளி உற்பத்தி மும்மடங்காகவும், வெங்காய உற்பத்தி நான்கு மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றைப் பாதுகாக்கும் வசதிகள் போதுமான அளவில் இல்லை. வேளாண் உற்பத்திப் பொருட்களை உள்ளூர் மண்டிகளில் விற்பனை செய்யும் வகையில்தான் மாநில அரசின் சட்டங்கள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் வறட்சி நீடித்த போதிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் வறட்சி நீடித்த போதிலும் 105 மில்லியன் டன் அரிசியும், 86 மில்லியன் டன் கோதுமையும், 17 மில்லியன் டன் பருப்பும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று மேலே பார்த்தோம். அதேபோல பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டிருந்தது. இதுவும் உற்பத்தி அதிகரித்ததற்கு ஒரு காரணமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கோதுமைக்கு 73 சதவிகிதமும், அரிசிக்கு 108 சதவிகிதமும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு மாநில அரசுகள் போனஸ் தொகை வழங்கி வருகின்றன.

மத்திய அரசு இதுவரை 24 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது. ஆனால் இந்த 24 பயிர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. எடுத்துக்காட்டாக காளான், திராட்சை, வெங்காயம் போன்றவற்றிற்கு மண்டிகளில் உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதேயில்லை. 2017-18ஆம் பருவ ஆண்டில் மத்திய அரசின் கொள்முதல் குறைந்துள்ளது. அரிசி, பருப்பு மற்றும் கோதுமை ஆகியவற்றின் கொள்முதலுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதனால் பருவமழை நன்றாகப் பொழிந்தும் உற்பத்தி அதிகரித்து உபரியாகிறது. அந்த உற்பத்தியைச் சேமித்து வைக்க போதிய திறன் நம்மிடம் இல்லை. இதனால் சந்தையில் விலை வீழ்ச்சியடைகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கீழாக விலை சரிகிறது. விவசாயிகளின் இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சில புதிய கொள்கைகளை வகுக்கத் திட்டமிட்டது. நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டம், தேசிய மின்னணு வேளாண் சந்தை, விவசாய உற்பத்திச் சந்தைக் குழு ஆகியவற்றை ஏற்படுத்தி வேளாண் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தும் திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கியது.

அதேபோல அண்மைக் காலமாக அதிகரித்துவரும் சர்க்கரை, கோதுமை மாவு மற்றும் அரிசி விலையுயர்வு ஆகியவை ஏற்றுமதியையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இதுவும் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறைந்தபட்ச ஏற்றுமதி வரி ஆகியவையும் ஏற்றுமதியை அதிகரிப்பதில் தடையாகவே உள்ளன. இடைத்தரகு முறையும் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பதைத் தடுக்கிறது. இவையெல்லாம் இந்திய விவசாயிகளைப் பூ விழுந்தால் வெற்றி, தலை விழுந்தால் தோல்வி என்று கருதும் நிலைக்குத் தள்ளிவிட்டது. உற்பத்தி அதிகரித்தும் அவற்றுக்கான முறையான சந்தையும், உரிய விலையும் இல்லை. அதை உருவாக்கித் தருவதற்கான போதுமான திட்டங்களும் இந்த அரசிடம் இல்லை.

நன்றி: தி இந்து

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

புதன் 28 மா 2018