மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வோடஃபோன் - ஐடியா விரைவில் இணைவு!

வோடஃபோன் - ஐடியா விரைவில் இணைவு!

ஐடியா மற்றும் வோடஃபோன் நெட்வொர்க் நிறுவனங்கள் இணைவுக்கான ஒப்புதல் பெறும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக நுழைந்த பிறகிலிருந்தே இத்துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜியோ நெட்வொர்க் துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டதால் பிற நிறுவனங்களும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கத் தொடங்கின. இதனால் அந்நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்படத் தொடங்கியது. ஏற்கெனவே கோடிக் கணக்கில் கடன் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே நெட்வொர்க் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜியோவுடன் மோதவும், இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் இணைவு நடவடிக்கையை மேற்கொண்டன. அந்த வகையில் வோடஃபோன் மற்றும் ஐடியா நெட்வொர்க் நிறுவனங்கள் இணைவதற்கான பணி சென்ற ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ஐடியா - வோடஃபோன் இணைவுக்கான ஒப்புதல் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக இந்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளரான அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மார்ச் 27ஆம் தேதி டெல்லியில் இந்திய செல்லுலார் ஆபரேட்டர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இத்தகவலை அவர் வெளியிட்டார். இந்நிறுவனங்களின் இணைவுப் பணி ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்தால் வாடிக்கையாளர் அடிப்படையிலும், வருவாய் அடிப்படையிலும் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாக இப்புதிய நிறுவனம் உருவெடுக்கும். இப்புதிய நிறுவனத்துக்கான தலைவராக குமார் மங்களம் பிர்லாவும், தலைமைச் செயலதிகாரியாக பாலேஷ் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon