மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

டெல்லியில் மம்தா முகாம்!

டெல்லியில் மம்தா முகாம்!

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் (மார்ச் 26) முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உட்பட பல தலைவர்களை, நேற்று அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக, பல ஆண்டுகளாகக் குரலெழுப்பி வருகிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கியபோது, நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமெனக் கோரி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள்தான் முதலில் அமளியில் ஈடுபட்டனர். இதன்பின்னரே, காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராகக் குரலெழுப்பியது. இதுபோன்று பல விவகாரங்களில் பாஜக எதிர்ப்பைக் கடைப்பிடித்து வருகிறார் மம்தா.

கடந்த சில நாள்களாக, பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டுமெனக் குரல்கொடுத்து வருகிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். இதற்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தார் மம்தா பானர்ஜி. இதையடுத்து, மார்ச் 19ஆம் தேதியன்று கொல்கத்தாவில் மம்தாவைச் சந்தித்தார் சந்திரசேகர ராவ். அப்போது, இருவரும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அளித்த விருந்தில் மம்தா பங்கேற்கவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த சுதீப் பந்தோபாத்யாய அந்த விருந்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 26) மம்தா டெல்லி சென்றார். நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த மிசா பாரதி உட்பட பலரைச் சந்தித்துப் பேசினார். நேற்று இரவு சரத் பவார் அளித்த விருந்திலும் அவர் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி, வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிக சுவாரஸ்யமாக அமையவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பாஜகவின் பிடியில் அரசுத் துறைகள் சிக்கித்தவிப்பதாகக் கூறினார். “எல்லா அரசுத் துறைகளும் நிறுவனங்களும் பாஜகவினால் பயன்படுத்தப்படுகின்றன; முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. முழுக்க பாஜக மயமாகி வருகின்றன” என்று தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே, பாஜக சமூக வலைதளத் தலைவர் தகவல் வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தற்போதிருக்கும் மோடி தலைமையிலான கூட்டணிக்கும் நிறைய வித்தியாசமுள்ளதாகக் கூறினார்.

இன்று (மார்ச் 28) பாஜகவின் மூத்த தலைவரும் மோடி அதிருப்தியாளருமான யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்துப் பேசவுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும், முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரியையும் சந்திக்கவுள்ளார். இதே போல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் மம்தா.

கடந்த நான்கு மாதங்களில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. பாஜகவுக்கு எதிரான அத்தனை கட்சித் தலைவர்களையும் ஒன்றுதிரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, சோனியா காந்தியையும் சந்திக்க அவர் தயாராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

“ஹர்த்திக் பட்டேல் முதல் அனைவருடனும் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் பாஜகவைத் தவிர வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி வேறில்லை” என்று தெரிவித்துள்ளார். அவரது பேச்சு, மூன்றாம் அணியை வலுவாக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியுடன் இணையும் வகையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்தாவின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “அவர்தான் அடுத்த பிரதமர் என்று சிலர் சொன்னதை நம்பி, தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். உண்மையில், அப்படியொன்று நடக்கவே நடக்காது” என்று கூறியுள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon