மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

கோடைக்காலம்: தோல் மருத்துவர் அறிவுரை!

கோடைக்காலம்: தோல் மருத்துவர் அறிவுரை!

கோடைக் காலத்தில் ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தோல் மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே சுமுக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, தோல் மருத்துவத் துறை தலைவர் மருத்துவர் யு.ஆர்.தனலெட்சுமி தலைமையில் நேற்று(மார்ச் 27) நடைபெற்றது. இதில், அத்துறையைச் சார்ந்த 12 மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த மருத்துவர்கள் உரிய அறிவுரைகளையும் வழங்கினர்.

தோல் பிரச்சினைகளுக்கான தீர்வு

வெயில் காலத்தில் ஏற்படும் தோல் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றித் தெரிவிக்குமாறு பொதுமக்கள் பலர் மருத்துவரிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்து, மருத்துவர் யு.ஆர்.தனலெட்சுமி தெரிவித்தது:

"கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் வேர்க்குரு, சிறிய கட்டிகள், அரிப்பு, தேமல், சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் சோர்வு மற்றும் மயக்கமும் ஏற்படலாம். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல்வறண்டு எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழக்கத்தைவிட அதிகளவு தண்ணீர் பருகவேண்டும். காலை, மாலை இருவேளையும் கட்டாயம் குளிக்கவேண்டும். குளித்த ஈரத்தோடு ஆடை அணியாமல், உடலை நன்கு துவட்டிய பிறகே ஆடை அணிய வேண்டும். மெல்லிய, மிதமான வண்ணங்கள் கொண்ட தளர்வான பருத்தி(காட்டன்) ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். அவை தளர்வானதாக, காற்றுபுகும் வகையில் இருக்க வேண்டும். ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது.

பச்சிளம் குழந்தைகள், சிறுவர்களைக் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வெயிலில் அழைத்துச் செல்லக்கூடாது. அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்களும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் ஆகிய நீர்பானங்கள் அதிகம் பருக வேண்டும். மேலும் அம்மை வந்தால் வீட்டில் இருப்பதை விட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்" என்று மருத்துவர் யு.ஆர்.தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது