மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் கலைக் கண்காட்சி சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெற்றுவருகிறது. ஓவியம், சிற்பம், ஆடியோ, வீடியோ எனப் பல்வேறு மீடியங்களில் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். மார்ச் 24ஆம்தேதி தொடங்கியுள்ள இந்தக் கண்காட்சி 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கொச்சின் பினாலே என்ற அமைப்பின் மூலம் கொச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள முக்கியமான ஓவியர்களின் சிறந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுவருகின்றன. இதில் ஸ்டூடன்ட்ஸ் பினாலே என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு கவின் கலைக் கல்லூரிகளில் 15 பொறுப்பாளர்கள் மூலம் மாணவர்களை குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் படைப்புகளை உருவாக்கச் செய்து அதை காட்சிக்கு வைப்பதாகும். 2016-17ஆம் ஆண்டிற்கான ஸ்டூடன்ட்ஸ் பினாலேயில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களும், சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து (33 பேர்) அமைத்த கண்காட்சி முதல் பரிசை வென்றது. இவர்களைப் பயிற்றுவித்த ஓவியர் கிருஷ்ணப்ரியா சிறந்த பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொச்சியில் நடைபெற்ற அந்தக் கண்காட்சி தற்போது சென்னையில் நடைபெற்றுவருகிறது.

“கலை என்பது தனித்த ஒரு விஷயம் அல்ல; உழைக்கும் மக்களின் படைப்புகள் பிரதியெடுத்தலாக இருந்தாலும் அதுவும் கலை உருவாக்கம்தான். சென்னை கவின் கலைக் கல்லூரியின் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்வது கண்காட்சியின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. மாணவர்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் தொழில்களைக் கவனித்து அவர்களோடு உரையாடி இந்தப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். அதைத் தவிர நாங்கள் கொடுத்த சில பயிற்சிகளின் மூலம் சில படைப்புகளை உருவாக்கியுள்ளனர்” என கண்காட்சியின் பொறுப்பாளரான கிருஷ்ணப்ரியா சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியின்போது கூறினார்.

கண்காட்சிக்கான தலைப்பு பல்வேறு விஷயங்களை அடக்கியதாக இருக்கிறது. சென்னைக்கு இருக்கும் பல்வேறு அடையாளங்களில் ஒன்றாக தேவி பிரசாத் ராய் சௌத்ரி வடிவமைத்த உழைப்பாளர் சிலையும் உள்ளது. அந்த சிலையை வடிவமைத்த ராய் சௌத்ரி சென்னை கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். கல்லூரி வளாகத்தில் அந்த சிலையை உருவாக்கியதாகவும் கல்லூரியின் காவலரும் மாணவர் ஒருவரும் அதற்கு மாடலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் இப்போது உழைப்பாளர்கள் சிலையை உருவாக்கினால் அது எந்த மாதிரியாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

“சென்னை கவின் கலைக் கல்லூரி முதலில் தொழிற்பள்ளியாகவே ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் சென்னை நகரில் பெரும்பாலான கட்டிடங்களை எழுப்பத் தேவையான கலைஞர்களை இங்கிருந்தே பெற்றனர். பொதுப்பணித் துறையின் நீட்சியாகவே அப்போது இந்தப் பள்ளி பார்க்கப்பட்டது” என மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தனது உரையில் குறிப்பிட்டார்.

அடிப்படையில் சென்னை கவின் கலைக் கல்லூரி தொழிலாளர்களுக்கான பள்ளியாக இருந்து நுண்கலைக்கான கல்லூரியாக பரிமாணம் அடைந்ததால் உழைக்கும் தொழிலாளர்களை அவர்களது உழைப்பைப் பேசும் விதமாக கண்காட்சி இருக்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் குடும்பத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாடம் சந்திக்கும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடி அவர்களது உழைப்பைக் கலைப்படைப்பாக மாற்றியுள்ளனர். நெசவாளர், தேவராட்டக் கலைஞர், கல் உடைப்போர், செங்கல் சூளையில் வேலை செய்வோர், துப்புரவுத் தொழிலாளி, ஒப்பாரி பாடும் கலைஞர், டீ மாஸ்டர், பேருந்து நடத்துநர், மளிகைக் கடைக்காரர், சலவைத் தொழிலாளி உள்ளிட்டோரை சந்தித்து அந்த அனுபவத்தை கலைப் படைப்புகளாக மாற்றி காட்சிக்கு வைத்துள்ளனர்.

“கவின் கலைக் கல்லூரியில் அருங்காட்சியகம் பல வருடங்களாக பூட்டப்பட்டுள்ளது. அதில் எந்த மாதிரியான கலைப் படைப்புகள் இருந்தன என்பது குறித்து பல்வேறு கதைகள் நிலவுகின்றன. அந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டால் அதில் மாணவர்களின் எந்த மாதிரியான படைப்புகள் இடம்பெறும் என்பதைக் கூறும் விதமாகவும் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் கல்லூரியின் அடையாளமான தொழிலாளர்களின் உழைப்பைக் கலைப்படைப்பாக்க முடிவெடுத்தோம்” என ஓவியர் கிருஷ்ணப்ரியா தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் சென்னை கவின் கலைக் கல்லூரியின் வரலாறு குறித்து பேசினார். “அபீந்திரநாத் தாகூர், நந்தலால் போஸுக்கும் காந்திக்கும் இருந்த நட்புக்கும் பெரியாருக்கும் தனபாலுக்கும் உள்ள நட்புக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது” என்று குறிப்பிட்ட அவர், “காந்தி சொன்ன காதியும் சுயமரியாதை இயக்கத்தின் கைத்தறியும் இரு முக்கியப் பார்வைகளை முன்வைத்தன. தனிநபரின் சுயதேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்வதை காதி கூறுகிறது. இதன் அடிநாதமாக தனிநபரே உள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கம் முன்னெடுக்கும் கைத்தறியின் அடிநாதமாக சமூகம் இருக்கிறது. பலரது பங்களிப்பு இதில் வருவதால் சிறப்பானதாகவும் அழகியலுடனும் இருக்கும் எனக் கூறப்பட்டது. எனவேதான் காதியைவிட கைத்தறிக் கண்காட்சி விற்பனையகத்தில் அதிக பொருள்களும் வகைகளும் இடம்பெறுகின்றன. இதை முரணாகப் பார்க்கவேண்டியதில்லை. இரு வேறு கருத்துக்களாகப் பார்க்கலாம். சென்னை கவின் கலைக் கல்லூரி இதில் சுயமரியாதை இயக்கத்தின் பாணியைப் பின்பற்றியது” என்று விளக்கினார்.

கிருஷ்ணப்ரியா, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் சென்னை கவின் கலைக் கல்லூரியில் மூடப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை மீண்டும் திறந்துவைக்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

(கண்காட்சியில் இடம்பெற்ற மாணவர்களின் படைப்புகள் மற்றும் அவர்களது அனுபவங்கள் நாளை காலை 7 மணி பதிப்பில்)

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon