மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

அன்னா ஹசாரே: தொடரும் போராட்டம்!

அன்னா ஹசாரே: தொடரும் போராட்டம்!

லோக்பால், லோக் ஆயுக்தா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று (மார்ச் 27) உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

2011ஆம் ஆண்டு ஜன் லோக்பால் அமைப்பை உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே நடத்திய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாபெரும் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து லோக்பால் அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு லோக்பால். இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே கைவிட்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து உதயமானதுதான் ஆம் ஆத்மி கட்சி.

2014 லோக்சபா தேர்தலில் பாஜகவும் மத்தியில் ஆட்சி அமைத்தால் லோக்பால் அமைப்பு கொண்டு வருவோம் என உறுதியளித்தது. ஆனால் ஆட்சியைக் கைப்பற்றி நான்காண்டுகள் ஆன நிலையிலும் லோக்பால் உருவாக்கப்படவில்லை. இதைக் கண்டித்து கடந்த 23ஆம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற போராட்டத்தை அன்னா ஹசாரே மீண்டும் தொடங்கியுள்ளார். இதனால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் நேற்று ஹசாரேவைச் சந்தித்து அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே, அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ராலேகான் சித்தி கிராம மக்கள் சிலர், அங்குள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று ஹசாரேயின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செவ்வாய், 27 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon