மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

ஸ்மித்துக்கும் வார்னருக்கும் வாழ்நாள் தடை?

ஸ்மித்துக்கும் வார்னருக்கும் வாழ்நாள் தடை?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டை அடுத்து ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடந்துவரும் மூன்றாவது டெஸ்டின் மூன்றாவது நாளன்று, பந்தைச் சேதப்படுத்தியதாக ஆஸி அணியின் தொடக்க மட்டையாளர் கேமரூன் பென்கிராஃப்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வீடியோ பதிவின் மூலம் ஐயம் திரிபு அறத் தெளிவான இந்தக் குற்றச்சாட்டில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என அணித் தலைமை ஒப்புக்கொண்டது. இதையடுத்து, பென்கிராஃப்ட்டுக்கு மூன்று தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கேப்டன் ஸ்மித் ஒரு டெஸ்ட்டில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதைவிடவும் மிகவும் கடுமையான தண்டனையை வழங்கவிருப்பதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட், நடந்த சம்பவத்துக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களிடத்தில் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார். ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தையும் வார்னரையும் உடனடியாகப் பதவி விலகுமாறு உத்தரவிட்டது. நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும் முன்பு இருவரும் பதவி விலகினார்கள். விக்கெட் கீப்பர் டிம் பைனே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய வாரியம் இதுகுறித்த புலன் விசாரணையை நடத்தவிருக்கிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்மித்துக்கும் வார்னருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆஸி கிரிக்கெட் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் போட்டிகளில் இருவரும் ஆட அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

இதற்கிடையில், மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியின் நான்காவது நாளான இன்று 430 ரன் எடுத்தால் வெற்றி என்னும் நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸி அணி, 39.4 ஓவர்களில் 107 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. தென்னாப்பிரிக்கா 322 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டு என்னும் அதிர்ச்சி தந்த வலியை மேலும் கூட்டும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தோல்வி அமைந்துள்ளது. இந்தத் தொடருடன் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள மோர்னி மோர்க்கல் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென்னாப்பிரிக்கா மாபெரும் வித்தியாசத்தில் வெற்றிபெற வழி வகுத்தார்.

ஞாயிறு, 25 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon