மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

காவிரி: தினகரன் இன்று உண்ணாவிரதம்!

காவிரி:  தினகரன் இன்று உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இன்று தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய அரசு அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இடையில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் இறந்துவிட்டதால், திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், "எனது கணவர் இறந்துவிட்டார். ஆனால் இது மக்கள் நலனுக்காக, காவிரி டெல்டா பகுதியின் உரிமைக்காக நடக்கும் போராட்டம். எனவே திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துங்கள் என்று சசிகலா தங்களிடம் கூறினார். எனவே அவரது வேண்டுகோளுக்கிணங்க போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கட்சி ஆரம்பித்த பிறகு நடத்தப்படும் முதல் போராட்டம் என்பதாலும், சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதாலும் தனது பலத்தைக் கட்ட தினகரன் திட்டமிட்டுள்ளார். தஞ்சையிலுள்ள திலகர் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்களுக்‍கு அடிப்படை வசதிகளை செய்துதருதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளும் முடிந்துள்ளன.

இதற்கான ஏற்பாட்டைத் தங்க.தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் செய்துள்ளனர். இன்று காலை 8மணிக்கு தொடங்கும் போராட்டமானது மாலை 5மணிக்கு நிறைவடைகிறது. உண்ணாவிரதத்தை முடித்துவைத்து தினகரன் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து உரையாற்றவுள்ளார்.

முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தபோது அவரை கவனித்துக் கொள்ள சசிகலாவுக்கு ஐந்து நாள் பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது தஞ்சையில் தங்கியுள்ள சசிகலாவை கூட்டணிக் கட்சியினர் சந்தித்து துக்கம் விசாரித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரித்த புகைப்படம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மேலும் வரும் 30ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள நடராஜன் படத்திறப்பு நிகழ்விலும் பல்வேறு தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிற நிலையில், அவர்களும் சசிகலாவை சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 24 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon