மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

சிறப்புக் கட்டுரை: கம்பீரக் குரல்களின் நாயகர்கள்!

சிறப்புக் கட்டுரை: கம்பீரக் குரல்களின் நாயகர்கள்!

தினேஷ் பாரதி

டி.எம்.சௌந்தரராஜன் – சீர்காழி எஸ். கோவிந்தராஜன் நினைவாக…

ஒரே துறையைச் சார்ந்தவர்கள் இறக்கும் தேதியில் ஒருவர் பிறப்பது அரிது. அரசியல் துறையில் இது போன்ற அரிய சம்பவம் நடந்திருக்கிறது. காந்தி பிறந்த தேதியன்று காமராஜர் இறந்திருக்கிறார். அப்படிப்பட்ட அரியதொரு நிகழ்வு பாட்டுத் துறையிலும் நடந்திருக்கிறது.

கணீரென்ற தம் கம்பீரமான குரலாலும் தெள்ளத் தெளிவான உச்சரிப்பாலும் மக்களிடையே பிரபலமான டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த தினமும், சீர்காழி எஸ். கோவிந்தராஜனின் இறந்த தேதியும் ஒரே நாளில் அமைந்திருக்கிறது. மார்ச் 24ஆம் தேதியான இன்று டிஎம்எஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் அதே நேரத்தில் சீர்காழியையும் நினைவுகூரும் தினமாக இந்த நாள் அமைந்திருக்கிறது.

பேருண்மையை அறிவிக்கும் குரல்

டிஎம்எஸும் சீர்காழியும் கர்னாடக இசையில் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். கர்னாடக இசை மேடைகளில் பின்னவருக்குக் கிடைத்த வரவேற்பும் வெற்றியும் முன்னவருக்குக் கிடைக்கவிலை. ஆனால், திரைத் துறையில் முன்னவர் பெற்ற இடத்தைப் பின்னவர் பெறவில்லை. என்றாலும் இருவருமே தமது இசைத் திறனாலும் குரல் வளத்தாலும் ரசிகர்கள் மனங்களில் நிரந்தர இடம்பெற்றிருக்கிறார்கள்.

சீர்காழியின் குரல் கோயில் மணியோசையின் கம்பீரத்தைக் கொண்டது. பூமி அதிர முழங்கும் போர் முரசைப் போன்று பேருண்மைகளையும் ஆழமான தத்துவங்களையும் அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கக்கூடியது. ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும், தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத ஒலிச்சித்திரமாக்கியவர் சீர்காழி.

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று கர்ணனுக்காக உருகிய குரலும் அவருடையதுதான். இந்தப் பாடல்களின் ஆதாரமான தன்மை சீர்காழியின் குரலால் எப்படி வலுப்பெற்றிருக்கிறது என்பதை இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்கையில் புரியும்.

திரைப் பாடலின் வித்தகர்

டிஎம்எஸ்ஸைத் திரைப் பாடலின் வித்தகர் என்றுதான் சொல்ல வேண்டும். கம்பீரம், வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி, கிராமிய மணம் என மனித வாழ்வின் சகல மனோநிலைகளுக்கான பாடல்களுக்கும் தன் குரலின் மூலம் உரமேற்றியவர் டிஎம்எஸ். பல விதமான உணர்ச்சிகளுக்கு ஏற்ப அவர் குரல் உயர்ந்தும் தாழ்ந்தும், உருகியும் குழைந்தும், நெளிந்தும் அழுதும் பல விதமான ஜாலங்களைக் காட்டும்.

யார் தருவார் இந்த அரியாசனம்

பாட்டும் நானே பாவமும் நானே

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆகிய பாடல்களில் கம்பீரம் காட்டும் டிஎம்எஸ்,

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

மெல்ல மெல்ல அருகில் வந்து

தொட்டால் பூ மலரும்

ஆகிய பாடல்களில் காதல் ரசத்தைப் பிழிந்து தருகிறார்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

சட்டி சுட்டதடா

போனால் போகட்டும் போடா

ஆகிய பாடல்களில் தத்துவம் பேசும் இவரது குரல்,

உன் கண்ணில் நீர் வழிந்தால்

சோதனை மேல் சோதனை

போன்ற பாடல்களில் கண்ணீரை ஒலியாக மாற்றித் தருகிறது.

கட்டோடு குழலாட ஆட

தாழையாம் பூ முடிச்சி

ஆகிய பாடல்களில் தெம்மாங்கு பாடும் இவர் குரல்,

வெள்ளிநிலா முற்றத்திலே

எனத் தாலாட்டும் பாடுகிறது.

ஓராயிரம் பார்வையிலே

முதலான சில பாடல்களில் சோகத்தின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுகிறது.

தனித்துவத்தால் முத்திரை பதித்த சீர்காழி

சௌந்தரராஜனின் வகைமை இல்லையென்றாலும் சீர்காழியின் குரல் தனித்துவமானது. கேட்டதும் சிலிர்க்கவைப்பது.

அமுதும் தேனும் எதற்கு

தேவன் கோயில் மணியோசை

எங்கிருந்தோ வந்தான்

ஓடம் நதியினிலே

ஆகிய பாடல்களைக் கேட்டவர்களால் வாழ்நாளில் அவற்றை மறக்கவே முடியாது. திரை இசைப் பாடல்களுக்குப் பாத்திரங்களோடும் படத்தின் சம்பவங்களோடும் பொருந்திப் போக வேண்டிய தன்மை வேண்டும். பெரும்பாலான பாடகர்கள் அதைக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறார்கள். சீர்காழியோ திரையில் தன்னுடைய தனித்துவமான குரலை, தனித்துவமான முத்திரையிடன் ஒலிக்கச்செய்வார். அது திரைப்படத்தின் பின்புலத்தைத் தாண்டிச் செல்லும் இசைப் பயணமாகவே பெரும்பாலும் இருக்கும். இதனால்தான், சீர்காழியின் பெரும்பாலான பாடல்களில், படத்தைவிடவும், நடிகர்களைவிடவும் சீர்காழியின் முத்திரையே நம் மனதில் தங்கியிருக்கிறது. இந்தப் படத்தில் சீர்காழியின் பாட்டு என்பதைவிட, சீர்காழியின் பாட்டு இந்தப் படத்தில் என்று அடையாளம் சொல்லும் விதத்தில்தான் அவருடைய பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. அதுதான் அவருடைய தனித்தன்மை.

சீர்காழியின் குரலில் சுருதி சுத்தம், சாரீர வளம், பாவம் போன்ற இசையின் அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்படும். பாடலைப் பாடும்போது வல்லினம், மெல்லினம் அறிந்து பாடுதல், பக்கவாத்தியங்களுக்கு மேல் குரல் ரீங்காரம் செய்த முறைமை போன்றவை சிறப்பாக இருக்கும். கே.பி.சுந்தரம்பாளுக்கு அடுத்ததாக ஒலிபெருக்கியே தேவையில்லை என்று சொல்லத்தக்க குரல் வளம் சீர்காழியினுடையது. திரையிசையின் மெல்லிசைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளாமல் செவ்வியல் இசையின் கனத்தைத் திரைக்கு அளித்து அதன் மதிப்பைக் கூட்டிய சாதனையாளர் சீர்காழி.

பக்திப் பாடல்களில் கோலோச்சிய அளவுக்கு திரைப் பாடல்களில் சீர்காழியால் ஜொலிக்க முடியவில்லை. தமிழ்த் திரைப்படங்கள் காதல் என்னும் உணர்வில் ஊறியவை. சீர்காழியின் கம்பீரம் காதலையும் தத்துவமாக மாற்றிவிடும். இதனால்தான் திரை இசைப் பாடல்களில் அவரால் பிறரைப் போல ஜொலிக்க முடியவில்லை. ஆனால், தனக்கான பாடல் என்று வரும்போது – அதாவது, கம்பீரம், தத்துவம், உருக்கம் – அதில் தனக்கு இணை யாரும் இல்லை என்பதைக் காட்டிவிடுவார்.

குரலில் பிரதிபலிக்கும் முகங்கள்

சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ். எஸ். ராஜேந்திரன், நாகேஷ் எனப் பல நடிகர்களுக்கு ஏற்றபடி குரலில் மாற்றங்களைச் செய்யும் வித்தை டி.எம்எஸின் தனித்தன்மைகளில் ஒன்று. தன் குரலின் மூலம் நடிகர்களின் முகத்தை ரசிகர்களின் மனதில் நிறுத்தக்கூடியவர் டி.எம்எஸ். இரு துருவங்களான எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் இவர் பாடிய பாடல்களே இதற்குச் சான்று.

டிஎம்எஸ்ஸின் பாடலைக் கேட்கும்போது நடிகர்கள் பிம்பம் மனதில் எழும். ஆனால் சீர்காழியின் பாடலைக் கேட்கும்போது சீர்காழியே நம் மனக்கண்ணில் தெரிவார்.

நடிப்பிலும் பதித்த முத்திரை

இளம் வயதில் இருவரும் நாடகங்களில் நடித்திருந்ததால் சினிமாவிலும் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எப்படி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றால் சிவாஜியின் முகம் நினைவுக்கு வருகிறதோ அதுபோல பட்டினத்தார், அருணகிரிநாதர் என்று சொல்லும்போது டிஎம்எஸின் முகம் வருமளவுக்கு தனது நடிப்பைத் திறனை வெளிப்படுத்தியிருப்பார்.

அது போலவே அகத்தியர் என்கிற குறுமுனிவர் இப்படித்தான் இருந்திருப்பாரோ எனச் சீர்காழியைக் காட்டும்படியாக அகத்தியரின் உணர்வைத் தன் நடிப்பில் வடித்திருப்பார் சீர்காழி. அதே போல் ராஜராஜ சோழனில் நம்பியாண்டார் நம்பியாக நடித்து அவருடைய தோற்றத்தையும் நினைவில் நிறுத்தினார்.

திரையிசை அல்லாத பாடல்கள்

திரைப்படங்களைத் தாண்டி, பக்திப் பாடல்களின் வாயிலாகவும் இருவரும் மக்களிடம் மிக நெருங்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். டிஎம்எஸ்ஸின் பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை என்றாலும் பக்திப் பாடல்கள் என்றால் சீர்காழி தான் என்று சொல்லுமளவுக்கு அவர் பாடிய பாடல்கள் ஏராளம். அவற்றில் வெளிப்படும் பக்தி உணர்வும் அலாதியானது. டிஎம்எஸ் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்னும் பாடலும், ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்கிற சீர்காழியின் பாடலும் பக்திப் பாடல்களில் இவர்களின் அடையாளத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.

ஈகோ இல்லாத கலைஞர்கள்

டிஎம்எஸ்எஸும் சீர்காழியும் எந்த விதமான ஈகோவுமின்றிப் பல பாடல்களை இணைந்து பாடிச் சிறப்பித்திருக்கிறார்கள்.

காசிக்குப் போகும் சந்யாசி

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்

நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற

திருச்செந்தூரின் கடலோரத்தில்

வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்

கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்

ஆயிரம் கரங்கள் நீட்டி

இப்படிப் பல பாடல்களைச் சொல்லலாம். இசை அறிவும் தனித்துவமான குரலும் கொண்ட இருவரும் இணைந்து பாடிய இந்தப் பாடல்கள் அனைத்துமே மறக்க முடியாத இசை அனுபவங்களாக மாறியிருப்பதில் வியப்பென்ன!

வெற்றித் திலகங்கள்

இவர்கள் இணைந்து பாடிய பாடல்களில் ஒரு பாடல் மிகவும் சுவாரஸ்யமானது. அகத்தியர் படத்தில் வரும் ‘வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்’ என்கிற பாடல் படக் காட்சியின்படி போட்டியாகப் பாடும் பாடல். படத்துக்காக என்று மட்டுமல்லாமல், நிஜத்திலும் இருவருக்குமான போட்டி என்று சொல்லுமளவுக்கு இருவரும் விட்டுக் கொடுக்காமல் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.

இந்தப் படத்தில் ராவணனாக ஆர்.எஸ்.மனோகரும், அகத்தியராக சீர்காழியும் நடித்திருப்பார்கள். இருவருக்குமான போட்டிப் பாடலில் மனோகருக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்திருப்பார். அகத்தியராக நடித்த சீர்காழி தனக்குத் தானே பாடியிருப்பார். இந்தப் போட்டியில் ராவணன் தோற்பதே கதை. தான் தோற்பதாகப் பாடுவதை டிஎம்எஸ்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுவதுண்டு. எனவே, பாடலில் தோல்வி என்பதற்குப் பதில் வீணை அறுந்துவிடுவதால் தோல்வி என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜன் காட்சியை மாற்றி அமைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால், டிஎம்எஸ், சீர்காழி ஆகிய இருவருமே திரை இசையில் நிகரற்ற வெற்றியைப் பெற்றவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சனி, 24 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon