மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 மா 2018

எந்திரன் படத்தைத் திரையிட மறுத்த கரூர் சிண்டிகேட் சாதித்தது என்ன?

எந்திரன் படத்தைத் திரையிட மறுத்த கரூர் சிண்டிகேட் சாதித்தது என்ன?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 24

இராமானுஜம்

தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1,100 தியேட்டர்கள். இதில் திருச்சி விநியோகப் பகுதியில் செயல்படும் திரையரங்குகள் 113 மட்டுமே. திருச்சி ஏரியாவில் திரைப்படங்கள் திரையிடுவதும், அதற்கு முன்தொகை என்ன என்பதையும் தீர்மானிக்கும் சக்திமிக்கவர்களாக இருப்பவர்கள் குறிப்பிட்ட சிலரே. திருச்சி ஏரியாவுக்குப் புதிய திரைப்படங்களை வியாபாரம் செய்ய எண்ணற்ற சிறிய, பெரிய விநியோகஸ்தர்கள் செயல்பட்ட இந்த ஏரியாவில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே விநியோகஸ்தர்களாக உள்ளனர்.

113 தியேட்டர்களும் தனிநபர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு காரணம். இரண்டாவது திருச்சி ஏரியாவில் ஒரு திரையரங்கு ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை மினிமம் கேரண்டியில் படங்களை ஒப்பந்தம் செய்யும் வசதி இருந்தது. தமிழகத்தில் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்திக்கொண்டிருந்த பிரமிட் சாய்மீரா திடீரென சரிவைச் சந்தித்தபோது தனியார் திரையரங்குகள் நிலைகுலைந்து போனது. விநியோகஸ்தர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது.

தங்களுக்கு வேண்டிய தியேட்டர்களுக்குப் பெரிய படம், மற்ற தியேட்டர்களுக்குச் சின்ன படங்கள், எம்.ஜி அடிப்படையில் மட்டுமே புதிய படங்கள் என்ற நெருக்கடியான சூழலைச் சந்தித்தது திரையரங்குகள். மினிமம் கேரண்டியில் படங்களைத் திரையிட்ட தியேட்டர்கள் தொடர் நஷ்டங்களைச் சந்தித்து வந்தன. நஷ்டத்தில் இருந்து, விநியோகஸ்தர்களின் ஆதிக்கத்திலிருந்து தங்களைத் தொழில் ரீதியாகப் பாதுகாத்துக்கொள்ள கரூர் நகரில் உள்ள ஏழு திரையரங்குகள் ஒன்றுபட்டு ஒரு முடிவுக்கு வந்தன.

புதிதாக வருகின்ற படங்களை இனிமேல் எம்.ஜி அடிப்படையில் திரையிடுவதில்லை. எந்த தியேட்டரில் என்ன படம் என்பதை ஒரு நபரே தீர்மானிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தங்கள் திரையரங்கில் புதிய படங்களைத் திரையிட ஒப்பந்தம் செய்யக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டை ஏழு திரையரங்க முதலாளிகளும் கடைப்பிடித்தனர்.

முதல் கட்டமாக விநியோகஸ்தர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட தியேட்டர்கள், எந்த தியேட்டரில் என்ன படம் என்பதைத் தீர்மானிக்கும் நிலையை உறுதிப்படுத்தினார்கள். விநியோகஸ்தர்கள் தங்கள் படங்களின் போட்டோ கார்டுகளை முதலில் கொடுக்க வேண்டும், சீனியாரிட்டி அடிப்படையில் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நடைமுறையைத் தமிழகத்தில் முதன்முறையாக கரூரில் அமல்படுத்தினார்கள்.

ஒரு படம் எத்தனை தியேட்டர்களில் திரையிட்டாலும் ஒரே அட்வான்ஸ் அத்தொகையை ஏழு தியேட்டர்களின் ஒருங்கிணைப்பாளர் தீர்மானிப்பார். விநியோகஸ்தர் கேட்கும் அட்வான்ஸ் வழங்க மாட்டார்கள். இந்த நடைமுறையை மாற்ற திருச்சி திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கடுமையான முயற்சி மற்றும் நடவடிக்கைகளை எடுத்துப் பார்த்தது.

கரூர் தியேட்டர் உரிமையாளர்கள் ‘படம் கொடுக்க முடியாதா? பரவாயில்லை. தியேட்டரை மூடி வைப்போம்’ என்றனர் விநியோகஸ்தர்கள் சங்கத்திடம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ரஜினிகாந்த் நடித்த எந்திரன் எம்.ஜி கொடுத்தால் படம் என்றார்கள். எந்திரன் படமே வேண்டாம் என நிராகரித்தனர். தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கரூர் தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சி, ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கரூர் தியேட்டர் உரிமையாளர்களின் ஒற்றுமை ‘சிண்டிகேட்’ எனத் திரைப்பட விநியோகத் துறையில் அப்போது பயத்துடன் உச்சரிக்கப்பட்டது.

எந்திரன் படம் திரையிடாததால் சுமார் ரூ.75 லட்சம் வர்த்தகத்தை சிண்டிகேட்டில் இடம்பெற்ற ஏழு திரையரங்குகளும் தியாகம் செய்ததன் பலனை அடுத்து வந்த காலத்தில் அறுவடை செய்யத் தொடங்கினர். புதிய, பழைய படங்களை தியேட்டர்களில் திரையிட முன்தொகை சிண்டிகேட் விரும்பினால் மட்டுமே தரும், படம் ஓடி முடிந்த பின் மொத்த வசூல், தியேட்டருக்குக் குறைந்தபட்ச வாடகைக் கிடைத்தால் விநியோகஸ்தருக்கு 50-50 என்ற முறையில் கொடுக்கப்படும். குறைந்தபட்ச வாடகைக்குக் கூட வசூல் ஆகவில்லை என்றால், படத்தின் விநியோகஸ்தருக்கு கருணைத் தொகையாக ஏதாவது கொடுக்கப்படும்.

தங்களை எட்டி மிதித்தவர்களை ஏளனத்தோடு பார்த்தது கரூர் சிண்டிகேட். பலம் பொருந்திய திருச்சி திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கரூரில் ஓர் ஆணியையும் அடிக்க முடியாமல் அடங்கிப்போனது. நல்ல நோக்கத்துக்காகத் தமிழகத்தில் முதலில் தொடங்கப்பட்ட கரூர் சிண்டிகேட் இன்றைக்குப் பலருக்கு முன்னுதாரணமாகிப் போனது.

கத்தி மருத்துவரிடம் இருந்தால் நோயாளியைக் காப்பாற்ற பயன்படும். கொலைகாரன் கையில் இருந்தால் உயிரைக் கொல்ல உபயோகப்படும் அல்லவா? கரூர் சிண்டிகேட் என்கிற கத்தி யாரிடம் இருக்கிறது?

நாளை காலை 7 மணிக்கு...

வேலூர் சிண்டிகேட் கொள்ளை பற்றி ஆதாரங்களுடன் நாளை மறுநாள்... (இது ட்ரெய்லர்)

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வெள்ளி 23 மா 2018