மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 மா 2018

சிறப்புக் கட்டுரை: ‘சதிர்’ கலை இழந்த வரலாறு!

சிறப்புக் கட்டுரை: ‘சதிர்’ கலை இழந்த வரலாறு!

சிவா

உலகில் உருவான உயிர் எப்படி பல உருமாற்றங்களை அடைந்து மனிதர்களாக, ஒரு வலிமையான உயிரியாகத் தற்போதைய உலகில் கோலோச்சிக்கொண்டு வருகிறதோ, அதுபோலவே கலை உலகமும் பலகட்ட மாறுதல்களை அதன் இருப்பின்போது எதிர்கொண்டு வருகிறது. ஒருகலையின் பொருண்மையென்பது, அது இயங்கும் காலத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் நடைமுறையிலிருந்து அதற்கேற்றாற்போல சிற்சில மாற்றங்களை தனக்குள் கைகொண்டு மேன்மை பெற வேண்டும். ஆனால், இந்த நியதி மறுக்கப்பட்டு அவரவருக்கேற்றாற்போல, அதிகாரத்தில் உள்ளவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றப்பட்டு அதன் அடிப்படை ரசத்திலிருந்து வேறுபட்டு, வெறும் ரசாபாசமாக மக்களிடத்தில் சேர்க்கப்படுவதே தற்போதைய கலையின் வடிவமாக இருக்கிறது.

சதிர், பரதக் கலையின் மூலம்; ஆதி முதல் அந்தம் வரை பெயர்த்தெடுத்து ‘பரதநாட்டியம்’ என மறுகட்டமைக்கப்பட்டிருக்க வேண்டிய சதிர், அது கையிலெடுக்கப்பட்டவர்களால் மறுதலிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதிலும் மேட்டுக்குடிக் கலையாகப் பரிணமித்திருக்கிறது பரதநாட்டியம். ஆனால், அதற்கு உடல்கொடுத்த சதிர், இப்போது தனது உயிரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு அமைதியாக நிற்கிறது. தத்தெடுக்கக் கலைஞன் இல்லை. அர்ப்பணித்து மெய் கொடுக்கச் சிந்தை இல்லை. ஆதரிக்கப் புரவலரும் இல்லை. அதோ விராலிமலை மீதிருக்கும் சண்முகநாதனை நோக்கி ‘முருகா நீ யாரையும் அனுப்ப மாட்டாயா? எனக்களித்த கலையின் வேகத்தை இன்னொருவருக்குக் கடத்தவன்றோ 80 வயதிலும் அழைக்கும் இடமெல்லாம் சென்று ஆடிப்பாடி சதிரின் சிறப்பை, பெருமையை, மாண்பை வெளிக்காட்டிவருகிறேன்’ என்று புலம்பிக்கொண்டிருக்கும் முத்துக்கண்ணம்மாள்தான் சதிர் ஆட்டத்தின் இன்றைய வாழும் ஒரே விளக்கு.

‘தக்ஷிண சித்ரா விருது’ பெற்ற பின் அவர் அரங்கேற்றிய நடனங்களில் வியந்துபோனவர்கள், இன்றைய பரதநாட்டியக் கலைஞர்கள். ‘அம்மா, சதிருக்கும் பரதத்துக்கும் அப்படியென்ன வேறுபாடு?’ எனப் பணிவுடன் விளக்கம் கேட்டதற்கு, “அதெல்லாம் பெருசா ஒண்ணுமில்லை. நீங்களும் நல்லாத்தான் ஆடுறீங்க. ஆனா என்ன, நாங்க பாடிக்கிட்டே ஆடுவோம். நீங்க நட்டுவனார் பாடுனாத்தான் ஆடுவீங்க. நட்டுவனார் இல்லைன்னா ஆட வராது. இப்ப அந்த கேசட் எல்லாம் வந்துடுச்சு. இப்படித்தான் எங்கய்யா பாட்டெல்லாம் எங்களுக்குச் சொல்லிக் குடுத்தப்ப, எதுக்குன்னு கேட்டோம். ‘நான் இருக்க வரைக்கும் நீங்க ஆடலாம். நான் இல்லைன்னா ஆடுறதை விட்டுருவீங்களா. நான் இல்லைன்னாலும் சதிர் ஆடணும்’னு எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரு. சின்னச் சின்ன மாற்றமெல்லாம் பண்ணியிருக்கீங்க. ஆனாலும் நல்லாத்தான் இருக்கு. நீங்க ஆடுவீங்களா? எங்க ஆடுங்க பார்ப்போம்” என்று சொல்லி தன்னை கேள்வி கேட்க வந்தவரையும் சேர்த்து ஆடவைத்தார் முத்துக்கண்ணம்மாள்.

காத்துக்கு நோகாம ஆடணும்

இந்தக் கேள்வி - பதில் நிகழ்வுக்கு முன்பு முத்துக்கண்ணம்மாளின் ஆட்டம் நிகழ்ந்தேறியது. தொடக்கத்தில் சாதாரணமாக ஆடியவர், நேரம் செல்லச் செல்லக் காற்றில் பறக்கும் இறகுபோல ஆடத் தொடங்கினார். வயதின் காரணமாக உடல் மட்டும்தான் ஒத்துழைக்கவில்லையே தவிர, கைகளிலும் கால்களிலும் அந்த நளினம் இன்னும் அப்படியே இருந்தது. அப்போதுதான் ஒரு குறிப்பைச் சொன்னார். “பரதத்தில் இதைப் பெரும்பாலும் எடுத்துட்டாங்க. எந்த இடத்துலயும் வெட்டு வைக்காம, சுத்தி வீசுற காத்துக்கு நோகாம ஆடணும். ஆனால் பரதத்துல இது இருக்காது”என்று கூறியவர் ஆடிய ஆட்டம் 16 வயதில் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனைக்குள் இழுத்துச் செல்லத் தவறவில்லை. அப்போது அங்கு வந்திருந்த இன்னொரு பரதநாட்டிய குழுவினரை அழைத்து ஆடுவதற்குத் தயாரானார் முத்துக்கண்ணம்மாள்.

‘ஆடுவதற்கு ஏற்ற நாட்டிய உடை இல்லை’ என்று குறைபட்டவர்களிடம், ‘ஆடுவதற்கு காலும் உடலும் இருக்கும்போது எதற்கு துணியைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்’ என்று கூறி கும்மியாட்டத்தைத் தொடங்கினார். அந்தக் குழுவினர் மட்டுமல்லாது, ஆட விருப்பப்படுகிறவர்கள் அனைவரையும் அழைத்து ஆடச் சொன்னார். வயதானாலும் சாரீரத்தின் வீரியம் குன்றாத அந்தக் குரலால் ‘தெற்குக்கு ராஜனடா தென்மாதுரை பாண்டியன்டா’ என்று அவர் பாடத் தொடங்கி கும்மியடிக்க, தொடர்ந்து ஆடியவர்கள் அவரைப் பார்த்து அப்படியே ஆடத் தொடங்கினார்கள். இரண்டு சரணம் முடிந்ததும், முத்துக்கண்ணம்மாளின் ஆட்டத்தைக் கண்கொட்டாமல் பார்த்து ஆடத் தொடங்கியவர்கள் பாட மறந்தார்கள். ‘ஏறாத மலைதனிலே, பாராமல் கைகொடுப்பார். பழனிமலை வேலனடி, நானும் பழனிமலை வேலனடி’ என்று பாடியபோது பாடுங்க என்று அவர்களுக்கு ஆடிக்கொண்டே பாட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். ஆனால், அடுத்த சில வரிகளுக்குள்ளாகவே மீண்டும் பாடலை மறந்தவர்களுக்கு, ‘மதுரை.....க்கு நெய்விளக்கே, மாரீ.....யம்மன் தெப்பக்குளம். தெப்ப....க்குளம் பார்க்கவந்த, தேவீ..... எனைரட்சியம்மா.... தனன்னா....ன தானனன்ன....’ என்று எடுத்துக்கொடுத்து மீண்டும் பாட வைத்து முடித்தார்.

அனைவரும் ஆடியதைப் பார்த்து பூரித்துப்போன முத்துக்கண்ணம்மாளின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர் ஆடியவர்கள். கலை என்பது இப்படித்தான், தன்னை அறிந்தவர்கள், அறியாதவர்கள், தெரிந்தவர்கள், தெரிந்துகொள்ளாதவர்கள், புரிந்தவர்கள், புரிந்துகொள்ள முடியாதவர்கள் என அனைவரையும் ஆட்கொண்டதாக இருக்க வேண்டுமல்லவா? அது, அனைவருக்குமானதாக இருக்க வேண்டுமல்லவா? அது தக்ஷிண் சித்ராவின் கர்நாடக இல்லத்தில் அன்றைய மாலையில் சாத்தியப்பட்டுப் போனது.

சதிர் தேய்ந்த வரலாறு

‘ஏகாந்தமாக வளர்ந்த சதிர் கலை பிறகு எப்படித்தான் முடிவுக்கு வந்தது? சதிர் ஆட்டத்தை மூச்சாகக் கொண்டிருந்த கலைஞர்கள் எல்லாம் எங்குதான் சென்றார்கள்? ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்’ என்று முத்துக்கண்ணம்மாளின் கால்களுக்கு ஓய்வளித்துக் கேள்வியைக் கேட்டாலும், அவர் கைகளை ஆடுவதிலிருந்து கட்டுப்படுத்த முடியவில்லை.

சுதந்திர இந்தியாவில் முத்துக்கண்ணம்மாள் பிறந்தபோதுதான் பரதமாக மாற்றப்பட்டிருந்த சதிர் கலைக்கு உயிர் ஜீவனாக விளங்கிய மன்னர் மானியம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியில், அவர்களுக்குக் கட்டுப்பட்டு திரை செலுத்தி தங்களது சமஸ்தானங்களைக் கைக்குள் வைத்திருந்த 560க்கும் மேற்பட்ட அரச குடும்பங்களுக்கு, மன்னர் மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டு அவர்களது ஆட்சிப் பகுதிகள் இந்திய அரசின் கைகளுக்கு மாற்றப்பட்டன. அப்படி மாறிய சமஸ்தானங்களில், முத்துக்கண்ணம்மாள் பிறந்து வளர்ந்த விராலிமலைப் பகுதியை ஆட்சி செய்த புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் சமஸ்தானமும் ஒன்று. அந்த மன்னர் ஆட்சி சென்றதுடன் எல்லாமே முடிவடைந்துவிட்டது என்ற பீடிகையுடனே தனது வரலாற்றைத் தொடங்கினார்.

“எனக்கு ஏழு வயதில் பொட்டுக்கட்டினார்கள். கண்டிப்பாகக் கோயில் சேவகத்தில் ஈடுபட வேண்டும் என்ற கட்டுப்பாடு எல்லாம் இல்லை. யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கிறதோ, ஆட வருகிறதோ அவர்களுக்குப் பொட்டுக்கட்டுவார்கள். எங்கள் ஊரில் இருந்த 200 குடும்பங்களில் நாங்கள் 32 பேர் இருந்தோம். காலை மாலையென நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஐயாவிடம் சென்று கற்றுக்கொள்வேன். பகல் வேளையில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டியதிருந்ததால் அப்போது கற்றுக்கொள்ள முடியாது. எனக்கு எப்போது பள்ளிக்கூடம் முடியும் என ஆவலாக இருக்கும். மற்றபடி பள்ளிக்கூடத்தில் யாரும் கேலி செய்ய மாட்டார்கள். ஏழாவது வரை படித்துவிட்டு முழுநேரமும் கோயில் சேவகத்தில் ஈடுபடத் தொடங்கினேன். காலை, மாலையென இரண்டு வேளைகள் சண்முகநாதரை தரிசித்துவிட்டு கோயில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவோம். கோயிலிலேயே சாப்பாடு கொடுத்துவிடுவார்கள். ஆனால், எங்கள் ஐயா அதையும் யாருக்காவது கொடுத்துவிடுவார். அரிசியில் சரவணபவ என எழுதிவைத்து முருகப் பெருமானுக்குக் கொண்டு செல்வோம். தினமும் கோயிலுக்குச் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டு வருவது மட்டுமே வேலையாக இருக்கும். கோயில் திருவிழாவின்போது எங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். தேர் இழுத்துச் சென்று கோயிலைச் சுற்றிவந்ததும், மூலவரை சந்நிதியில் இறக்கிவிட்ட பின் மண்டபத்தில் ஆட்டம் தொடங்கும்.

அப்படி ஆடும்போது பார்ப்பவர்கள் யாராவது வீட்டுக்கு வந்து பெண் கேட்பார்கள். பெரும்பாலும் எங்கள் சமூகத்துக்குள்ளேயேதான் திருமணங்கள் நடைபெறும். பெண் கேட்டு வருபவரிடம், கோயில் சேவகம் குறித்துத் தெளிவாக விளக்கி அதில் எவ்விதத் தலையிடலும் இருக்கக் கூடாது என்று உறுதி வாங்கிய பிறகே திருமணம் ஏற்பாடாகும். திருமணமான பிறகு கணவர் எங்கள் வீட்டிலேயேதான் இருப்பார். என் கணவரெல்லாம் தங்கமானவர். எனக்குச் சமைக்கவே தெரியாது. அவர் அற்புதமாக சமைப்பார். இரண்டு வேளை கோயில் சேவகம் முடிந்ததும் வீட்டில்தான் இருப்போம். அமைதியாக உட்கார்ந்து பேசுவது, நடனம் குறித்து விவாதிப்பது எனப் பொழுது ஓடும். ஒவ்வொரு நல்ல நாளின்போதும் மன்னர் வீட்டிலிருந்து பரிசும் நிலமும் எங்களுக்குக் கொடுக்கப்படும். கோயிலில் கொடுக்கும் உணவு, ஆடியதற்குப் பரிசாகக் கிடைக்கும் பொருட்கள், மன்னர் கொடுத்த நிலம் இவைதான் எங்கள் வாழ்வாதாரமாக இருந்தன.

இந்திரா காந்தி ஆட்சியில் எல்லாவற்றையும் பிடுங்கியபோது எல்லாம் மாறிப்போனது. எங்கள் ராஜா, அவராகவே நேரில் வந்து அனைத்து ஆண்களுக்கும் பதினான்காயிரம் வரை பணமும், எல்லாப் பெண்களுக்கும் நிலமும் எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார். ஊரே சேர்ந்து அழுதது. அவரும் அழுதுகொண்டேதான் சென்றார். அந்தக் காட்சி இப்போதும் கண்ணில் நிற்கிறது. அதன் பிறகு உருவான பஞ்சத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை விற்றுத்தான் வயிற்றைப் பார்த்துக் கொண்டோம். எனக்கு மன்னர் கொடுத்தது இல்லாமல் ஏற்கெனவே நிறைய சொத்து இருந்தது. என் அம்மாயி அம்மணி அம்மாள் நிறைய நிலம் சேர்த்து வைத்திருந்தார். எனவே, என்னால் கொஞ்சம் அதிகமாக தாக்குப்பிடிக்க முடிந்தது. அதுவும் கரைந்துபோனதும், வெளியூர் கச்சேரிகளுக்குச் செல்லத் தொடங்கினோம். விராலிமலை முருகன் கோயிலில் இருந்த 32 பேரில் பலர் வெளியூருக்கு வந்து ஆட சம்மதிக்கவில்லை. கோயிலில் ஆடியதுடன் முடிந்துவிட்டது என இருந்துவிட்டார்கள். சிலர் மட்டும் பல ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினோம். அப்போது கே.பி.சுந்தராம்பாளின் தம்பி கனகு எங்களை அழைத்து கொடுமுடியில் ஆடச் சொன்னார். அப்போதுதான் நான் அவரைப் பார்த்தேன். எங்களுடன்தான் அதிக நேரத்தைச் செலவிடுவார். என் தந்தை ராமச்சந்திர நட்டுவனாரிடம் பேசிக்கொண்டிருப்பார். ‘நீங்க நல்லா பாடுறீங்கம்மா’ என்று அவர் சொன்னபோது, ‘நீங்க பாடுறதுக்கு முன்னாடி நாங்கள்லாம் நிக்க முடியுமாய்யா’ என்று அவர் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. என் ஐயாவிடம் வந்து கற்றுக்கொண்டு சென்றவர்கள் அதிகம். ஆனால், அவர் யாரிடமும் எதுவும் கேட்டு வாங்கியதில்லை. தானாகக் கொடுத்தாலும் வேறு யாருக்காவது கொடுக்கலாமா என்பதை யோசித்த பிறகே, தான் வைத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி யோசிப்பார்.

ஒருமுறை அவரைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருந்தோம். பல மணிநேரம் கழித்து வந்தவர், ‘பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வந்திருந்தார். நமது விராலிமலைக் குறவஞ்சி குறித்து விளக்கிவிட்டு வந்தேன்’ என்று கூறினார். ஆனால், பத்மா சுப்பிரமணியம் அரங்கேற்றிய விராலிமலை குறவஞ்சியில் என் தந்தைக்கு உரிய பெயர் வழங்கப்படவில்லை. அவரது பாடலில் இடம்பெற்றிருப்பது முழு விராலிமலை குறவஞ்சி பாடலல்ல. சில வரிகளை மட்டுமே என் தந்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார். முழு பாடலும் அவர் அரங்கேற்றியதைவிட சிறப்பாக இருக்கும். இந்த உண்மையை அறிந்தவர்கள் எங்களை அழைத்தே ஆட வைப்பார்கள். அப்படி எங்கள் திறமை தெரியாமல் அழைத்து, பிறகு புரிந்துகொண்டவர்களும் உண்டு.

வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணம்

ஒருமுறை கொச்சினுக்கு ஆடச் சென்றிருந்தபோது ‘நொட்டீஸ்வரம்’ ஆடத் தெரியுமா என்று கேட்டுக் கேலி செய்தார்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருமே, அதுபோலவேதான். ‘உங்களுக்கு எத்தனை மொழியில் நொட்டீஸ்வரம் வேண்டும்?’ எனக் கேட்டு நாங்களே பாடி ஆடினோம். அதைக் கண்டு பலே பலே என அனைவரும் பாராட்டியது என் வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம்.

அதுபோலவே மிகப் பெரிய ஒன்று இருக்கிறது. அது, மகாத்மா காந்தியிடம் பெற்ற ஆசீர்வாதம். அவரைத் தொட்டுப் பார்த்ததும் அப்போதுதான். தலையில் கைவைத்து ‘மகராசியாய் இரும்மா’ என்று வாழ்த்தினார்.

இப்படியெல்லாம் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை சதிர் ஆட்டம் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டபோது முடிந்தது. ஒரு மகன் இல்லாமல் போய் விட்டார். மகளையும் இன்னொரு மகனையும் படிக்க வைத்தேன். இப்போது எல்லோருமே ஒன்றாகத்தான் இருக்கிறோம். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவிப் பணம்தான் வளரவே இல்லை. மன்னர் இருந்தபோது நன்றாக இருந்த எங்களுக்கு இந்நிலையை ஏற்படுத்தியது அரசாங்கம்தான். அவர்களே நலிவடைய வைத்துவிட்டு, நலிவடைந்த கலைஞர்கள் என்று ஒரு பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அந்தப் பணம் அதிகரிக்கவே இல்லை. மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வருகிறது. அதை வைத்து என்ன செய்வது?”

கலையின் அடிப்படை கொண்டாட்டம். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை கலைகளால் சூழப்பட்டது. அவற்றை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் பார்க்கும் அணுகுமுறை இந்த நூற்றாண்டில்தான் புழக்கத்தில் இருக்கிறது. இதே கலைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை தன்பால்கொண்டு, பல நூறு தலைமுறைகளைத் தாண்டியும் நிலைத்து நின்று அறிவூட்டக்கூடியது. அப்படி பரம்பரைகள் பல கடந்து சதிர் ஆட்டத்தைக் கற்றுணர்ந்து, தேர்ச்சி பெற்று ஒரு ஜாம்பவானாக மாறி ‘சதிர்’ ஆட்டத்தின் அடையாளமாக நின்று கொண்டிருக்கும் முத்துக்கண்ணம்மாளுக்குப் பணப் பிரச்சினை இருக்கலாம். ஆனால், நடனமாடத் தொடங்கியதும் அவருக்குள் புகுந்த சந்தோஷம்; அனைவரையும் அரவணைத்த பாங்கு; ஒளிவுமறைவின்றி தனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்த மேன்மை ஆகியவற்றை ஒரு தேர்ந்த கலைஞனன்றி வேறொருவராலும் பகிர்ந்துணர முடியாது.

முத்துக்கண்ணம்மாள் இப்போதும் அந்த விராலிமலை சண்முகநாதனை தினமும் கீழே நின்று வணங்கிக்கொண்டே தனது கலைக்குத் தினமும் நன்றி கூறிக்கொண்டிருக்கிறார். சதிர் ஆட்டத்தை அவரிடமிருந்து கையேந்திப் பெறப்போவது யார்? கலையரசிகளின் வாழ்வியலோடு இணைந்துவிட்ட சதிரை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்போவது யார்?

இந்தக் கேள்விகளுடன் எதிர்காலம் எக்காளமிட்டு நம்முன் ஆடிக்கொண்டிருக்கிறது.

சதிர் சிறக்கிறது, சதிர் கலைஞர்கள் தேய்கிறார்கள்

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

4 நிமிட வாசிப்பு

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

வியாழன் 22 மா 2018