மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: தற்கொலைக்கு ஆளாகும் திருப்பூர் ஜவுளித் துறையினர்!

சிறப்புக் கட்டுரை: தற்கொலைக்கு ஆளாகும் திருப்பூர் ஜவுளித் துறையினர்!

ராஜசேகரன்

திருப்பூர், இந்தியாவின் முன்னணி உற்பத்தி நகரங்களில் ஒன்று. இங்கு, தொழில்புரிபவர்களிடம் கடின உழைப்பு, லட்சியம், தொழில்முனைதல் போன்றவை இயல்பாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் உதாரணம்தான் 31 வயது நிரம்பிய சுகந்தி. இரண்டு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் அங்கேரிபாளையத்தின் வேங்கமேட்டில் இவர் சுயமாக ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஒன்றைச் சிறிதாகத் தொடங்கியபோது, அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால், இவரது மொபைல்போனுக்கு ரீசார்ஜ் செய்யக்கூட ஒருநாள் பணம் இல்லாமல் போகும் என்று இவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆம், அவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டு மார்ச் 12ஆம் தேதி இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இன்று அவர் உயிரோடு இல்லை.

பல்வேறு வெற்றிக் கதையை திருப்பூர் நகரம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால், சுகந்தி போன்றவர்கள் சிலரின் துயரக் கதைகளும் திருப்பூரிடம் உள்ளன. தொழில் நொடிந்துபோனதால் சுகந்தியைப் போல பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அங்கு கடந்த ஆறு மாதங்களில் பின்னலாடைத் துறையில் நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த சமூகப் பொருளாதார நிலையில் பின்தங்கிய பலர் அங்கு உள்ளனர். தமிழகத்தில் அதிக தற்கொலைகளைக் கொண்ட மாவட்டமாக திருப்பூர் எப்போதுமே முன்னிலை வகித்து வருகிறது.

2008ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே திருப்பூர் ஜவுளித் துறையானது, சர்வதேசப் பொருளாதார நெருக்கடி, நூல் விலை உயர்வு, சாய ஆலைகள் மூடல், தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகிறது. “இப்போது சர்வதேச அளவில் போட்டி, தொழில் மந்தநிலை, பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற காரணிகளால் இத்துறையினரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது” என்கிறார் எஸ்.கோவிந்தப்பன். இவர் தென்னிந்திய உள்ளாடைகள் உற்பத்திச் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

வெளிநாடுகளுக்கான திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியும் வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளால் நலிவடைந்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் குறையும்பட்சத்தில், சிறு நிறுவனங்களின் நிலையும் பாதிப்புக்குள்ளாகும். சுகந்திக்கும் அதே நிலைதான் நேர்ந்தது. சிறு நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்குவதிலும் வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் மிகவும் கறாராக இருக்கின்றன. சுகந்தி இறந்தவுடன் கைச்செலவுக்காகக் கடன் வாங்கச் சென்ற அவரது கணவர் வெறும் கையோடுதான் திரும்பியிருக்கிறார். இதுதான் திருப்பூர் ஜவுளித் துறையின் சிறு தொழிலாளர்கள் நிலை.

திருப்பூரின் சங்கரண்டாம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டசாமி சென்ற ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ஆர்டர் எதுவும் கிடைக்காததால் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாக இக்கட்டான சூழலே அவர் தற்கொலை செய்ததற்கான காரணம். அவரை இழந்து வாடும் அவரது மனைவி ஸ்ரீவித்யா, அவர்களின் அவல நிலையில் அரசுத் திட்டங்களைத் தூற்றுகிறார். “திருப்பூர் எப்போதுமே நம்பிக்கையையே தந்து வந்தது. ஆனால், தொழிலில் ஏற்படும் நஷ்டத்திலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போது குறைந்துவிட்டதால் அந்த நம்பிக்கை இப்போது இறந்துவிட்டது” என்று ஸ்ரீவித்யா குமுறுகிறார்.

“ஜிஎஸ்டி அமலானபோது அமெரிக்க டாலர் மற்றும் யூரோவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியதிலிருந்தே திருப்பூரில் ஏற்றுமதி ஆர்டர்கள் குறையத் தொடங்கிவிட்டது. சர்வதேச அளவில் நிறைய போட்டிகளைச் சந்தித்துவந்த திருப்பூர் ஜவுளித் துறை இதனால் இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை ஜிஎஸ்டி அமலான பிறகு குறைந்துவிடும் என்று அரசு உறுதியளித்தது. ஆனால், அது குறையவே இல்லை” என்று புகார் கூறுகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான டி.ஆர்.விஜயகுமார்.

ஜவுளித் துறையினருக்குக் கிடைக்கப்பெறும் ஊக்கத்தொகை மற்றும் ஜிஎஸ்டி விதிமுறைகளும் ஜவுளித் துறையின் சிறு உற்பத்தியாளர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக அதிகளவில் கடன் பெற்ற சிறு நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான எம்.பி.முத்துரத்தினம் கூறுகிறார்.

இத்துறையினருக்கான ஜிஎஸ்டி ரிட்டன், ஊக்கத்தொகை உட்பட சுமார் ரூ.1,900 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் அரசிடமே முடங்கியுள்ளதாக இத்துறையினர் புகார் கூறுகின்றனர். ஆனால், “இதே அரசு வங்கிகள் ஜவுளித் துறையினரிடம் கடனை வசூலிப்பதில் இரக்கமில்லாமல் செயல்படுவதைக் கண்டுகொள்ளாமலும், அதைத் தடுக்காமலும் இருக்கிறது” என்று விஜயகுமார் கூறுவது நியாயம்தானே?

திருப்பூரில் தொழில் நஷ்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்வோரைத் தடுக்கவும், அவர்களின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணவும், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில், மனோதத்துவ நிபுணர் ஒருவரும், வழக்குரைஞர் ஒருவரும், ஓய்வுபெற்ற தேசிய வங்கியாளர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர் என்கிறார் அதன் நிர்வாகி ஆர்.அண்ணாதுரை. இக்குழுவின் உறுப்பினரான திருஞானம் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சுமார் 10 தொழில்முனைவோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என்கிறார்.

நிறுவனங்கள் ஜவுளி லோடுகளை அனுப்பும்போது அவற்றுக்கு 100 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், அந்தச் சரக்கை வாங்குபவர் அதற்கான முழுத் தொகையையும் செலுத்த ஐந்து மாதங்கள் வரையில் அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகைக்கான முழுச் சுமையையும் அந்த நிறுவனமே ஏற்கிறது. “இந்த நடைமுறைதான் பல வருடங்களாக இருந்து வந்தது. ஆனால், தற்போது வரி வசூல் கடுமையாகியுள்ளது. ஜவுளிக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் மறைமுகமாக நாங்கள் 13 சதவிகிதம் வரையில் வரியாகச் செலுத்துகிறோம். இது சிறு தொழிலாளர்களுக்கும் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கே.எஸ்.பாபுஜி கூறுகிறார். இவர் தென்னிந்திய காலர் சட்டைகள் மற்றும் உள்ளாடை சிறு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ளார்.

2017ஆம் ஆண்டின் மத்தியிலிருந்தே ஜவுளி ஏற்றுமதி நலியத் தொடங்கிவிட்டது. எனவே, இத்துறையினரை மீட்க அரசு தரப்பிலிருந்து வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரான ராஜா எம்.சண்முகம் கூறுகையில், “நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்துகிறது. ஆனால், சிறு நிறுவனங்கள் துறையினருக்குப் போதிய ஆதரவு வழங்க இந்த அரசு தவறிவிட்டது” என்கிறார்.

திருப்பூரில் 8,000 ஜவுளி சார்ந்த நிறுவனங்களும், ரூ.10 கோடிக்கும் மேல் முதலீட்டுடன் 40 பெரு நிறுவனங்களும், 1 லட்சம் இடம்பெயர்ந்தோர் உட்பட 8 லட்சம் தொழிலாளர்களும் இருக்கின்றனர். 2016-17 நிலவரப்படி, திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி விற்றுமுதல் ரூ.26,000 கோடி. அதேபோல, உள்நாட்டு விற்றுமுதல் ரூ.18,000 கோடி. இதுபோல, இந்தியாவின் தொழில் துறையின் முதுகெலும்பாகத் திகழும் திருப்பூரில், தொழில் நொடிந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையினரைக் காக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழில்: செந்தில் குமரன்

புதன், 21 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon