மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 மா 2018

யார் படம் வாங்க சொன்னது?: மிரட்டிய சேலம் சிண்டிகேட்!

யார் படம் வாங்க சொன்னது?:  மிரட்டிய சேலம் சிண்டிகேட்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 20

இராமானுஜம்

தமிழ் சினிமா வியாபாரத்தில் செங்கல்பட்டு, கோவை, மதுரை விநியோகப் பகுதிகளுக்கு அடுத்து வருவாய் கிடைத்துவந்த பகுதி சேலம். தயாரிப்பாளர்களுக்கு எம்.ஜி அல்லது அவுட்ரேட் முறையில் 2005 வரை படங்கள் வியாபாரம் ஆனது. படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு வாங்கிய விலைக்கு எம்.ஜி அல்லது அட்வான்ஸ் தியேட்டரில் இருந்து கிடைத்து வந்தன.

திரையரங்குகளை ஒன்றுசேர்த்து சிண்டிகேட் அமைப்பு சேலம் ஏரியா சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பின் படங்கள் வாங்க விநியோகஸ்தர்கள் யோசிக்க தொடங்கினர். அரசியல்வாதிகளின் பாதுகாப்பு வளையத்தில் இயங்கிவந்த DNC சிட்பண்ட் நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்க தொடங்கினார்கள். இவர்களிடம் கடன் வாங்கி படம் வாங்கியவர் சிண்டிகேட் தியேட்டர்களுக்குப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே போன்று சென்னையில் TNT தியேட்டர் உரிமையாளர் ராஜா மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் வேலையைச் செய்தார்கள்.

ஃபைனான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யும்போது DNC சொல்பவர்களுக்கே படம் கிடைத்தது அல்லது நேரடி ரிலீசுக்குத் தயாரிப்பாளர் தயாராகும்போது சிண்டிகேட் தியேட்டர்களுக்கு படம் கிடைத்துவிடும்.

இது தொழில்முறையில் நியாயமான செயல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது என்றாலும் சேலம் சினிமா வியாபாரத்தையும் திரையிடலையும் கைப்பற்றுவதற்காக ஃபைனான்ஸ், தியேட்டர் சிண்டிகேட் என்கிற துருப்பு சீட்டை வைத்துக் குறுக்கு வழியில் நடத்திய அத்துமீறல்கள் அதிகம். இதனால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அதிகம். அதைவிடத் தமிழ் சினிமா வியாபாரத்துக்கு மிகப் பெரும் வருவாய் இழப்பு.

இளங்கோ தலைமையில் இயங்கும் சிண்டிகேட் தியேட்டர்களில் படம் திரையிட கொடுத்த அட்வான்ஸ் தொகை அளவு வசூல் ஆகவில்லை என்றால் விநியோகஸ்தர் பாக்கி பணத்தை திருப்பித் தர வேண்டும். அல்லது அடுத்து புதிய படங்கள் வெளியாகிறபோது அத்தொகை அட்ஜஸ்ட் செய்யப்படும். இல்லை என்றால் விநியோகஸ்தர் சங்கத்தில் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்மீது சங்கத்தில் புகார் செய்ய வேண்டும்.

இதில் எந்த நடைமுறையும் இளங்கோ - ராஜா - புருஷோத்தமன் தரப்பு கடைப்பிடிக்க மாட்டார்கள். மொத்த திரையரங்கு உரிமையாளர்களும் அதிகாலையில் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் வீட்டுக்குள் நடு நாயகமாக அமர்ந்து விடுவார்கள். “உன்னை எல்லாம் எவன்டா படம் வாங்க சொன்னது. உன்னை மாதிரி எவனும் வாங்காமல் இருந்தா படத்தைத் தயாரிப்பாளர் எங்ககிட்ட நேரடியா கொடுக்கப் போறான். நீயெல்லாம் படம் வாங்கலைன்னு எவன்டா அழுதான்? பாக்கியை இப்பவே செட்டில் செய். இல்லை சொத்தை எழுதிக் கொடு” என்பார்கள்.

தெருவில், குடும்ப உறுப்பினர்கள் முன் அவமானத்தால் கூனிக்குறுகி பிரச்சினையில் இருந்து விடுபட சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டி வரும். இது எதுவும் இல்லாதவர்களைத் தங்கள் அரசியல் பலம் அதன் மூலம் கிடைக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்தை நடத்துவார்கள்.

அப்படித்தான் அரூர் நகரைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவரைப் பாக்கி பணத்துக்காகக் காவல் நிலையத்தில் ஜட்டியுடன் அமர வைத்தார்கள். (விநியோகஸ்தரின் கெளரவம் கருதி பெயர் குறிப்பிடவில்லை) அந்த அவமானம் தாங்காமல் சில மாதங்களில் உடல்நலக் குறைவால் இறந்து போனார்.

இவற்றையெல்லாம் கடந்து இனியவேல், கஜேந்திரன், ஓம்சக்தி கணேஷ், ஜோதிமுருகன், செல்வராஜ், சேலம் பரமசிவம், ப்ரியம் பட தயாரிப்பாளர் அசோக் சாம்ராட், 7G சிவா போன்ற விநியோகஸ்தர்கள் சேலம் ஏரியா திரைப்பட விநியோக உரிமை வியாபாரம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், எவராலும் லாபகரமாகத் தொழில் செய்ய முடியவில்லை. காரணம் சேலத்தின் மொத்த வசூலில் 50% சிண்டிகேட் தியேட்டர் இருக்கும் ஊர்கள் மூலம் வரவேண்டியது.

ரஜினி படம் முதல் எந்த நடிகர் நடித்த படமாக இருந்தாலும் அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் அளவுக்கு வசூல் ஆனதாகக் கணக்கு கொடுப்பார்கள். விளக்கம் கேட்டால் அடுத்து வாங்கும் படத்துக்கு தியேட்டர் தர மாட்டார்கள். அப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டு அஜீத் படத்தை வாங்கிய விநியோகஸ்தரிடமிருந்து ரிலீஸுக்கு மறுநாள் படத்தின் உரிமையை வேறு விநியோகஸ்தருக்கு மாற்றிக் கொடுத்தால் தான் தியேட்டர் கொடுப்போம் என தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்து உரிமை மாற்றிக் கொடுக்கப்பட்ட அராஜகத்தை அரங்கேற்றியது சிண்டிகேட் தரப்பு.

புதிய படங்களின் சேலம் விநியோக உரிமைகளைக் கையகப்படுத்தும் முயற்சிக்குத் தடையாக இருந்த முன்னணி விநியோகஸ்தர்கள் இருவருக்கு சிண்டிகேட் கொடுத்த நெருக்கடி எப்படிப்பட்டது? சிண்டிகேட் ஆதிக்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரமா, சாபமா?

நாளை காலை 7 மணிக்கு...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 19 மா 2018