மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 11 ஆக 2020

சண்டே சக்சஸ் ஸ்டோரி: எம்.பி.ராமச்சந்திரன் (உஜாலா)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: எம்.பி.ராமச்சந்திரன் (உஜாலா)

பிரகாசு

இந்தியாவின் புகழ்பெற்ற சலவைப் பொருள் நிறுவனமான ஜோதி லேபரட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

சிறு வயதிலிருந்தே ராமச்சந்திரனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கமிருந்துள்ளது. இந்தப் பழக்கம் அவருடைய தந்தையிடமிருந்து அவருக்கு வந்துள்ளது. அது என்ன பழக்கமென்றால், ‘எப்போதும் வெள்ளை நிற ஆடைகளை அணிவது.’ இதனால் ஆடைகளை எப்போதும் வெண்மையாக வைத்திருக்க ஃபாப்ரிக் ஒய்ட்னர் முறையை இவரே வீட்டில் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த முயற்சிதான் உஜாலா நிறுவனத்தின் உருவாக்கத்துக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஆடைகளுக்குச் சலவை செய்தல் என்பது லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாக இருந்தது. இந்தியர்களின் ஆடை பழக்கத்தை பொறுத்தவரையில் வெண்ணிற ஆடைகளுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது. பெரும்பாலான கிராமப்புற ஆண்கள் வெண்ணிற ஆடைகள் அணிவதைப் பெருமையாகவும் கருதுகின்றனர். இதுபோன்ற சிறப்பான ஒரு சந்தை வாய்ப்பு நிலவும் சூழலில் ஒவ்வொரு முறையும் வெளியில் கொடுத்து சலவை செய்வது என்பது எல்லோருக்கும் இயலாததாக இருந்தது.

இந்தச் சூழலில்தான் 1983ஆம் ஆண்டில் மும்பையிலிருந்து கேரளாவின் திரிசூருக்குத் திரும்பினார் ராமச்சந்திரன். அங்கு கணக்காளராகப் பணிபுரிந்த காலத்தில் சேமித்து வைத்திருந்த 5,000 ரூபாய் தொகையுடன் திரிசூருக்கு அவர் திரும்பியிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு ஜோதி லேபரேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ஜோதி என்பது இவருடைய மகளின் பெயராகும். முதன்முதலாக 1,000 உஜாலா பாட்டில்களுக்கு மலப்புரத்தில் இருந்து ஆர்டர் கிடைத்தது. இந்த ஆர்டர் இவருக்கு உந்துதலை அளித்தது. 40,000 ரூபாய் முதலீட்டுடன்தான் ஜோதி லேபரட்டீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் உஜாலா தயாரிக்கப்பட்டு வெளியாகிறது.

சிறு குடிசைத் தொழிலாக தொடங்கப்பட்ட உஜாலா நிறுவனம் இன்று சர்வதேச அளவில் 17 நாடுகளில் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக உஜாலா உருவானது. இன்று வருவாய் ஈட்டுவதிலும், சந்தையிலும் மிகப்பெரிய பிராண்டாக உஜாலா உருவாகியுள்ளது. தொடக்கத்தில் உஜாலா நிறுவனம் தொடங்கப்பட்டபோது வெறும் ஐந்து பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இன்று உஜாலாவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 5,000 பேரைத் தாண்டியுள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ள உஜாலா இன்று, வெண்ணிற ஆடைகளுக்கான சலவை தண்ணீர் தயாரிப்பு மட்டுமின்றி, கொசுவத்திகள், சோப்புகள், சலவை பொருள்கள் போன்ற பல பொருள்களையும் தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ரூ.40 கோடி முதலீட்டில் சலவைத் தொழிலும் ஈடுபட்டுள்ளது.

சலவைப் பொருள்கள் சந்தையைப் பொறுத்தவரையில் கிராமப்புற சந்தைகளைப் பெரும்பான்மையாக உஜாலா ஆட்கொண்டுள்ளது. இன்று கிராமப்புறத்தைப் பொறுத்தவரையில் 70 சதவிகித சந்தைப் பங்கை உஜாலா கொண்டுள்ளது. உஜாலாவின் போட்டி நிறுவனமான ஹெங்கல் உஜாலாவுக்கு நேர்மாறாக நகர்ப்புறங்களை முக்கியச் சந்தையாக கொண்டிருந்தது. பின்னர் ரூ.400 கோடியில் ஹெங்கல் நிறுவனத்தின் 50.97 சதவிகித பங்கை ஜோதி லேபரட்டீஸ் கையகப்படுத்தியது. இதன்மூலம் ஹெங்கல் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதுமிருந்த 28 உற்பத்தி ஆலைகள் உஜாலா வசமானது. இருப்பினும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் உஜாலாவுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

உஜாலாவைப் பொறுத்தவரையில் விற்பனைக்காக நிறுவனத்தை விரிவுபடுத்துவது என்பது மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வரையில் இந்நிறுவனம் இந்திய சந்தைகளில் 72 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 66 வயதான ராமச்சந்திரனின் கடும் உழைப்பினால் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக சலவைப் பொருள்கள் சந்தையில் சர்வதேச அளவில் சிறந்த நிறுவனமாக உஜாலா கோலோச்சி வருகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் ஜோதி லேபரட்டீஸ் திகழ்கிறது.

2010ஆம் ஆண்டு கணக்குப்படி இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.16.98 கோடியாகும். நிகர வருவாய் மதிப்பு ரூ.80 கோடியாகும். இந்நிறுவனத்தின் விற்பனைத் தொகுப்பில் உஜாலா மட்டும் 46 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது. இந்தியச் சந்தைகளில் முக்கிய சலவை சோப்பாக விளங்கும் ‘எக்சோ’ இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் முக்கிய ஒன்றாகும். தன்னுடைய சொந்த தேவைக்காக, வீட்டில் கையாண்ட சிறு முயற்சிகள் ராமச்சந்திரனின் திறமைகளால் பில்லியன்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ராமச்சந்திரன், தொழில்முனைவோருக்கு சிறந்த வழிகாட்டியே.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி: சபீனா சோப்ரா (யாத்ரா.காம்)

ஞாயிறு, 18 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon