மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 மா 2018

விநியோகஸ்தர்களை வேட்டையாடும் புருஷோத்தமன்

விநியோகஸ்தர்களை வேட்டையாடும் புருஷோத்தமன்

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 19

இராமானுஜம்

சிண்டிகேட் - இந்த வார்த்தை தமிழ் சினிமா வட்டாரத்தில் தீண்டத்தகாத வார்த்தையாக, மோசடிக்காரர்களின் முகமூடியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஏரியாவுக்கு 150 விநியோகஸ்தர்கள் தொழில் செய்துவந்த நிலையில் தற்போது 9 விநியோகப் பகுதிக்கும் சேர்த்தே 50 தொழில்முறை விநியோகஸ்தர்களை அடையாளப்படுத்துவது இயலாத காரியம்.

சேலத்தில் திரைப்படத் தொழில் செய்யும் விநியோகஸ்தர்கள் அலுவலகம் அமைந்துள்ள பகுதி ‘சினிமா நகர்’ என அழைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பு, தமிழகத்தில் வேறு எந்த ஏரியாவுக்கும் இல்லை. அப்படிப்பட்ட சேலம் பகுதியில் புதிய படங்களை வாங்கக்கூடிய விநியோகஸ்தர்கள் இல்லாமல் அழிந்துபோனதற்குக் காரணம் பொருளாதார பிரச்சினை இல்லை. தொழில் மந்தம் காரணமில்லை. தர்மபுரி கணேஷ் தியேட்டர் உரிமையாளர் புருஷோத்தமன் உருவாக்கிய சிண்டிகேட் அமைப்புதான். 123 தியேட்டர்கள் இயங்கிவரும் சேலம் பகுதியில் 21 ஊர்களில் உள்ள தியேட்டர்களில் 40க்கும் மேற்பட்டவை இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. தர்மபுரி, ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூர், போன்ற வசூல் சென்டர்கள் இதற்குள் அடங்கி விடுகிறது.

DNC என்கிற சிட்ஃபண்ட் நிறுவனத்தை நடத்துகிற இளங்கோ இயல்பாகச் சாந்தமான குணம்கொண்ட மனிதர். தொழில்முறை ஃபைனான்சியரான இவரை முன் நிறுத்தி, சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி விநியோகஸ்தர்களையும், நேரடியாகப் படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களையும் வேட்டைப் புலியாக கதிகலங்க வைப்பவர் புருஷோத்தமன் என்பவர். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் பிரமாண்ட படங்களுக்கு வியாழக்கிழமை காலையில்தான் எந்தத் தியேட்டர் என்பதை உறுதி செய்ய தரிசனம் தருவாராம். அந்த நேரத்தில் அவர் நீட்டுகிற துண்டு சீட்டில், எந்த தியேட்டரில் என்ன படம் என்பது குறிக்கப்பட்டிருக்குமாம். அதில் ஏதேனும் மாற்றங்கள் சொன்னாலோ, விவாதம் செய்தால் நீட்டிய சீட்டு திரும்பப் பெறப்பட்டு, தியேட்டர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிடுமாம். கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் வாங்கிய விநியோகஸ்தரை சிண்டிகேட் அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் புருஷேத்தமன் அடிமையாக நடத்துவார் என்கிறார்கள் சேலம் விநியோகஸ்தர்கள். பெரிய படங்களுக்கே இந்த நிலை என்றால் பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்கள் நடித்த படங்களுக்கு தியேட்டர் எப்படி கிடைத்திருக்கும்? சினிமாவை வளர்த்தவர்கள் அதிகம் வாழ்ந்த மாங்கனி நகரில் அத்தொழிலை ஆர்வத்துடன் செய்பவர்களை முடக்குபவர்களும் முளைத்து ஆலமர விருட்சமாக இருப்பது விநோதமானது.

படங்கள் இல்லை என்றால் திரையரங்குகள் எப்படி நடத்துவார்கள் எனக் கேட்டால் மொத்தத் திரையரங்கின் வருமானம் ஆரம்ப காலத்தில் மொத்தமாக்கப்பட்டுப் பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் படம் இல்லாத நாள்களில் வருமான இழப்பு வந்தாலும் தாக்குப்பிடிக்க முடிந்தது. 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களை புறக்கணித்துவிட்டு ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்ற ஆணவம், அரசியல் பின்புலம், பணபலம் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் விநியோகஸ்தர்களை வீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதையும் தாக்குப்பிடித்து தொடர்ந்து புதிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் கடனுக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள்.

இந்த நிலை மாறாமல் போனதற்கு காரணம் என்ன?

புருஷோத்தமன் புலி வேட்டைக்குப் பலியான விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் யார்?

நாளை...

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 17 மா 2018