மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

அப்போ ஏர்செல், இப்போ ஏர்டெல்!

அப்போ ஏர்செல், இப்போ ஏர்டெல்!

ஏர்செல் சேவையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து போன் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

செல்போன் டவர்களுக்கு வாடகைக்கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு சமீபத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரியது. இதையடுத்து அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடஃபோன் போன்ற வேறு நெட்வொர்க்குகளை நாடத் தொடங்கினர். இந்த நிலையில், தற்போது ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

இந்தப் பாதிப்பு குறித்து ஏர்டெல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையின் சில இடங்களில் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். தற்போது அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. சிக்னல் கிடைக்காதவர்கள், தங்களது செல்போனை ஒருமுறை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யவும்” என்று கேட்டுக்கொண்டது.

ஜியோவின் வரவால் போட்டியைச் சமாளிக்க முடியாமல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ஏர்செல் திவாலானதாக அறிவித்தது. இதனையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் தற்போது மற்ற நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு வேறு நிறுவனங்களுக்கு மாற எம்என்பி எனப்படும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி எண்ணை பழைய தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்க வேண்டும். ஆனால், ஏர்செல் சேவை முடங்கியதால் பத்து நாள்களுக்கு மேலாகியும் எம்என்பி எண்ணைப் பெற முடியாமல் அவதியடைந்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் எம்என்பி கேட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவலகம் முன்பு நேற்று ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. பின்னர் அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon