மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழகத்துக்குத்தான் குறைந்த நிதி கிடைத்துள்ளதாக நிதித் துறைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் இன்று(மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது, “நிதிப் பற்றாக்குறை வரும் ஆண்டில் 44, 481 கோடி ரூபாயாக இருக்கும். நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்யும்போது மாநிலத்தின் 10 முக்கியப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதன்மைத் துறைகளுக்கு கூடுதல் திட்டங்களை வழங்கியுள்ளோம். புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி தளங்கள் அமைத்தல், கால்நடைத் துறையில் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது. விவசாயத் துறையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவற்றுக்கு வழங்கிவந்த ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் இளைஞர்களுக்கு வரும் நிதியாண்டில் திறன் அதிகரித்தல் பயிற்சியளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான வீடுகளுக்கு ரூ. 4,995 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் சூழல் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், “வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தை தாண்டக்கூடும் என எதிர்பார்க்கிறோம். வரி வருவாயில் வளர்ச்சி காணப்படுகிறது. இந்த நிலை தொடரும். கூடுதல் நிதி சுமையை கூடுதல் நிதி ஆதாரங்கள் மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

"மத்திய அரசிடம் இருந்து 2 வகையான வருவாய் நமக்குக் கிடைக்கிறது. அதில் ஒன்று வரி வருவாய் பகிர்வு. சில குறியீடுகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு 14ஆவது நிதிக் குழுவில் கிடைத்த பங்கு குறைக்கப்பட்டுள்ளது. 20 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிய நிதி 32 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், இதனால் தமிழகத்துக்கு கூடுதல் நிதி எதுவும் கிடைக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் குறைவான நிதி கிடைத்துள்ளது. சராசரிக்கும் கீழே தமிழகம் உள்ளது. எனவே சிறப்பு மானியம் வழங்க வேண்டும் அல்லது திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரி வருகிறோம். இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon