மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

மகிழ்ச்சியில் பின்தங்கிய இந்தியா!

மகிழ்ச்சியில் பின்தங்கிய இந்தியா!

மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 133ஆவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு (வளங்குன்றா வளர்ச்சிக்கான தீர்வுகளுக்கான கட்டமைப்பு) 2018ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக 156 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், ஊழல் இல்லாமை, தாராள மனப்பான்மை, சுதந்திரம் போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் நேற்று (மார்ச் 14) வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டு ஃபின்லாந்து 5ஆவது இடத்தில் இருந்தது. தற்போது முதலிடத்தில் உள்ளது.

ஃபின்லாந்து மக்கள்தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்றும், பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு, நல்ல பள்ளிகள் மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவை அங்கு சிறப்பாக உள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பத்து இடங்களில் ஃபின்லாந்துக்கு அடுத்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியா 133ஆவது இடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டு, இந்தியா 122ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியா 118 ஆவது இடத்திலும், 2015ஆம் ஆண்டு 117ஆவது இடத்திலும் இருந்தது. மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளின் இடம்: பாகிஸ்தான் 75, பூடான் 97, நேபாளம் 101 , வங்காள தேசம் 115, இலங்கை 116.

புருண்டி (156), மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (155), தெற்கு சூடான் (154), தன்சானியா (153), ஏமன் (152) ஆகிய நாடுகள் இவ்விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon