மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

பட்ஜெட்: தமிழகத் தலைவர்களின் விமர்சனம்!

பட்ஜெட்: தமிழகத் தலைவர்களின் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழக அரசின் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். ஓபிஎஸ் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தவுடனேயே, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பட்ஜெட் குறித்து தமிழக கட்சித்தலைவர்கள் அளித்த கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின், திமுக:

தமிழகத்தில் மோசமான நிதி நிலைமை காரணமாக, மாநிலத்தில் பல பணிகள் நடைபெறவில்லை. இந்த சூழலில், தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்திருக்கிறது அதிமுக அரசு. ஜிஎஸ்டியால் தமிழகம் பலன் அடைந்துள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளது நகைப்புக்குரியது. மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைகோ, மதிமுக:

எடப்பாடி பழனிசாமி அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான தீர்வு எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திட்டவட்டமான அறிவிப்பு இல்லாதது கண்டனத்துக்கு உரியது.

மத்திய அரசின் அநீதி, மாநில உரிமைகள் பறிப்பு இவற்றை வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் போதிய அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி முற்றாக அழிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஜனவரி 19 ஆம் தேதி மத்திய அரசு ‘குளோபல் டென்டர்’ விட்டுள்ளது. மத்திய அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணைபோயிருப்பது இந்த நிதிநிலை அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

ராமதாஸ், பாமக:

தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல பினாமி அரசால் முடியாது என்பதை, இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இதனால், தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. துவரை, உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும், விழுப்புரம் மாவட்டம் பெலாக்குப்பம் பகுதியில் 450 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும். இதைத் தவிர பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இல்லை.

கரும்பு கொள்முதல் விலை நிர்ணய முறை, அத்திக்கடவு & அவினாசி திட்டம் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு பினாமி அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது. மது மூலமான வருவாய் அதிகரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால், கூடுதலாக மதுக்கடைகளை அரசு திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி முறியடிக்கும்.

திவாலை நோக்கிய பயணத்தில் தமிழகத்தையும் தமிழக மக்களையும், மேலும் சில அடி முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது பினாமி அரசு.

திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்:

ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் மத்திய அரசு சுமார் 1500 கோடி அளவிற்கு பாக்கி வைத்திருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வாதாடிப் பெறுவதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு செய்யவில்லை. ஆனால் ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையின் அளவை தமிழக அரசு குறைத்துள்ளது கண்டனத்துக்குரியது.

காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தும் இதுவரை மத்திய அரசு அதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதைப்பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டிருப்பதும், கடன்சுமை அதிகரித்திருப்பதும், புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதும் தமிழக அரசு நிதி மேலாண்மையில் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது. ஒட்டுமொத்தத்தில், இதுவொரு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

திருநாவுக்கரசர், காங்கிரஸ்:

குடிதண்ணீர், வேலை வாய்ப்பு, ஏரி குளங்களை தூர் வாரி ஆழப்படுத்த நிதி, விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் நிதியுதவி, விவசாயிகளின் வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் ரத்து போன்றவற்றிற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கி, மத்திய அரசிடம் நிதியுதவி பெற நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய தொழில்கள் தொடங்குவோரை ஊக்குவிக்க பெரிய, சிறிய, நடுத்தர தொழில்கள் தொடங்க கடன் மற்றும் மானியத்திற்கு வெறும் 600 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை நிறைவேற்றிட தொலைநோக்கு சிந்தனையற்ற, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத சாதாரண, வாசமற்ற காகித பூவாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

விஜயகாந்த், தேமுதிக:

வருவாயைவிட கடன் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் பல திட்டங்களுக்கு, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்துடைப்பு நாடகமாகவே தெரிகிறது. இந்த பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் கடன்சுமை மென்மேலும் அதிகமடையுமே தவிர, இந்த பட்ஜெட்டால் தமிழகம் வளர்ச்சியடையாது.

இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதை பற்றியோ, மழைநீர் சேகரிப்பு, விவசாயம், நெசவுத்தொழில் மேம்பாட்டிற்கோ, மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகள் அமைப்பதற்கோ, இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிகோ என்ற எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் இந்த பட்ஜெட் அறிவிப்பில் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தையும், கவலையையும் தருகிறது.

ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ்:

அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை, இந்த பட்ஜெட் நிறைவேற்றவில்லை. விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்.

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது உடல்நல பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தகவல்களை வாசித்தார். அவரது உடல்நலம் போலவே, பட்ஜெட்டின் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஓபிஎஸ் கூறியிருப்பது நகைப்பிற்குரியது.

தமிழிசை சவுந்தரராஜன், பாஜக :

தொழில் துறையில் தென்பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுத்த வேண்டும்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon