மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அமெரிக்காவில் மாணவர்கள் புரட்சி!

அமெரிக்காவில் மாணவர்கள் புரட்சி!

ஜல்லிக்கட்டு புரட்சி போல் அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்கள் மீது வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அமெரிக்க அதிபருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். முதல் கட்டமாக ஒரு நிமிடத்துக்குள் நூற்றுக்கணக்கான குண்டுகளைப் பாய்ச்சும் வகையில் துப்பாக்கிகளின் வேகத்தை அதிகரிக்கும் 'பம்ப் ஸ்டாக்' எனப்படும் கருவியைத் தடைசெய்ய முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

பாதுகாப்புக்காகத் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது கலிபோர்னியாவில், டென்னிஸ் அலெக்சாண்டர் என்ற ஆசிரியர் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொண்டபோது மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7 ஆயிரம் மாணவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1300 மாணவர்கள் உயிரிழக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இனியும் மாணவர்கள் இறப்பைப் பார்க்க முடியாது என்று மாணவர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பிவருகின்றனர். 50க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஒன்றிணைந்த மாணவர்கள் பேரணிகளும் நடத்தினர். அவர்களுடன் மெரினா போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது போல் பொதுமக்களும், பெண்களும் ஒன்றிணைந்து போராடிவருகின்றனர்.

துப்பாக்கி வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணி வந்த மாணவர்கள் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புத்தகங்கள் போதும், துப்பாக்கி வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

துப்பாக்கித் தாக்குதல்களில் சுமார் 7 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறி 7 ஆயிரம் காலணிகள் வெள்ளை மாளிகையின் வெளியே வைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 17 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஃபுளோரிடா பாடசாலையில் 17 நிமிடப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon