மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்குமாறு கோரி, நாளை (மார்ச் 16) மக்களவையில் பிரதமர் மோடியின் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. இதனை ஆதரிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களிடமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு திரட்டிவருகிறது. இந்தத் தீர்மானத்தை, தெலுங்கு தேசம் கட்சி ஆதரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி வைத்து வெற்றி கண்டது பாஜக. அதோடு, சட்டமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி பெருவெற்றி பெற்றது. ஆனாலும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 9 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றது. அதேபோல, சட்டமன்றத்திலும் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியது. மேலும், மாநிலங்களவையிலும் இக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு அணி மாறிவிட்டனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 5ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னரே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டத்தில் இறங்கினர். இக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில் ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார். ஏப்ரல் 5ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை தங்களது கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அதற்குப் பலன் ஏதும் கிடைக்காவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவித்திருந்தார் ஜெகன்மோகன்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை மீது நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது இதற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பா ரெட்டி மக்களவைச் செயலாளருக்குக் கடிதம் அளித்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி சுப்பா ரெட்டியும் விஜய்சாய் ரெட்டியும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உட்படப் பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினர்.

ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், பாஜக அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அக்கட்சி ஆதரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமராவதி நகரத்தில் இன்று நடந்த தெலுங்கு தேசம் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த முடிவை அறிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் முடியவுள்ள நிலையில், ஆந்திரா மாநிலம் தொடர்பான கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon