மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

உஷா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு!

உஷா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு!

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து இறந்த உஷாவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது கணவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சாவூர் பாபநாசத்தைச் சேர்ந்த ராஜா, சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ”நான் தனியார் வங்கியில் பணிபுரிகிறேன். நானும்,என் மனைவி உஷாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நானும், மனைவியும் மார்ச் 7ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றோம். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். போலீஸார் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் வாகனத்தை நிறுத்தினேன். அவரிடம் உரிய ஆவணங்களைக் காட்டினேன்.

வாகனத்தை எடுத்தபோது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜர் மோசமான வார்த்தைகளால் திட்டி வாகனத்தை பல முறை எட்டி உதைத்தார். அப்போது, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவி உஷா கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, போலீஸார் சாதாரண பிரிவுகளில் ஆய்வாளர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து திருச்சியில் 3,000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதுமட்டுமில்லாமல், அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர்.

என் மனைவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு பாய்லர் பிளான்ட் காவல் நிலையத்தில் இருந்து குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரும் திருச்சி மாநகர் காவல் பிரிவுக்கு உட்பட்டவர்கள்தான். ஆய்வாளர் காமராஜைக் காப்பாற்றும் நோக்கத்தில் போலீசார் செயல்படுகின்றனர். மருத்துவர்களைப் பயன்படுத்தி என் மனைவி தொடர்பாக அவதூறு தகவல்களைப் பரப்பிவருகின்றனர். இந்த வழக்கை போலீஸார் விசாரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால், என் மனைவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த உஷா கர்ப்பிணி அல்ல என்றும், ராஜா மது அருந்தியிருந்ததாகவும் குறிப்பிட்ட மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon