மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

ஃபெப்சி அறிவித்த 50/50 சலுகை!

ஃபெப்சி அறிவித்த 50/50 சலுகை!

தயாரிப்பாளர் சங்கத்தின் காலவரையறையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், “திரைப்படத் துறையை ஒழுங்கமைத்தாலே போதும். எங்களுக்கு வரி விலக்கோ மானியமோ தேவையில்லை” என்று ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்திருக்கிறார்.

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக வெளியாகவிருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் நாளை முதல் (மார்ச் 16) தமிழகத்தில் நடைபெறும் உள்ளூர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு, ட்ரெய்லர், டீசர், இசை வெளியீட்டு நிகழ்வுகள், பத்திரிகையாளர் சந்திப்பு உட்பட திரைத் துறை சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதோடு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றுவரும் படப்பிடிப்புகளும் மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்படவுள்ளதாக அறிவித்து காலவரையரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து தமிழக அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் (மார்ச் 16) தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் மூடப்படும் எனத் திரையரங்கு உரிமையாளர் சங்கமும் அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் போராட்டத்தில் சென்னை திரையரங்குகள் மட்டும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் இன்று பத்திகையாளர்களைச் சந்தித்த ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர் சங்கத்தின் காலவரையரையற்ற போராட்டத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்திக்கிறோம். அதன்படி திரைப்படம் சம்பந்தமான உள்ளூர் படப்பிடிப்புகள் நிகழ்வுகள் நாளை முதல் நடைபெறாது. அதே போல வெளியூர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் 23ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்படவுள்ளன. இதில் தயாரிப்பாளர்கள் நலன் கருதி மட்டுமல்ல, படப்பிடிப்பை நிறுத்திவைப்பதனால் தொழிலாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படுவது உண்மை. குறைந்த காலப் போராட்டம் என்பதனால் இந்த கஷ்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காரணம், இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மூன்று லட்சம் பேர் மறைமுகமாகவும் சினிமாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு வரிவிலக்கோ, மானியமோ தேவையில்லை. திரைப்படத்துறையை ஒழுங்கமைத்தாலே போதும். இதையும் ஒரு தொழிலாக நினைத்து, தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon