மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

நான்கு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்!

நான்கு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்!

வரும் 19ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறியுள்ள சபாநாயகர் தனபால், அன்றைய தினங்களில் பட்ஜெட் மீது பொதுவிவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாசித்து முடித்த பிறகு, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் 3.30மணியளவில் தொடங்கும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் அவரது அறையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 19ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான பொதுவிவாதம் 19, 20, 21ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், 22ஆம் தேதி மானியங்கள் பதிலுரைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய சபாநாயகர் தனபால், " நாளை 16ஆம் தேதி அவை கிடையாது. 17, 18ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை, 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும் கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கும். 20, 21ஆகிய தேதிகளிலும் பொதுவிவாதம் நடைபெறும்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, "22ஆம் தேதி கேள்வி நேரம் இல்லை. அன்றைய தினம் பேரவை முன் பண மானியக் கோரிக்கை, இறுதி துணைநிலை அறிக்கை அளித்தல். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் அன்றைய தினத்தில் மானியக் கோரிக்கை நிதி ஒதுக்க சட்டமுன் வடிவும் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்பண மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற சபாநாயகர் , இறுதியாக அரசின் சட்டமுன் வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon