மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தூங்கிய மாணவனை வகுப்பறையில் பூட்டிய ஆசிரியர்!

தூங்கிய மாணவனை வகுப்பறையில் பூட்டிய ஆசிரியர்!

புதுச்சேரியைச் சேர்ந்த திருக்கனூர் அருகே பி.எஸ்.பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் செல்லப்பன் என்பவரது பத்து வயது மகன் வேல்முருகன் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று காலை வேல்முருகன் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், மாலையில் பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. வேல்முருகன் மற்ற மாணவர்களுடன் விளையாடச் சென்றிருக்கலாம் என்று கருதி பெற்றோர்கள் அவரைத் தேடவில்லை.

மாலை 5.30 மணியளவில் அந்தப் பள்ளி வகுப்பறையில் இருந்து அலறல் சத்தம் வந்துள்ளது. இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் பள்ளிக்கு வந்து பார்த்தனர். அப்போது மாணவன் வேல்முருகன் பூட்டிய வகுப்பறையில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வேல்முருகன் வகுப்பறையில் தூங்கிக்கொண்டிருந்ததை அறியாமல் பள்ளி ஆசிரியர் வகுப்பறையைப் பூட்டி சென்றது தெரியவந்தது.

இதுபற்றிப் பொதுமக்கள் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து வகுப்பறையின் பூட்டை உடைத்து மாணவனை மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த மாணவனின் பெற்றோரும் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

வேல்முருகன் நேற்று மதியம் காதுவலி என்று ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் கடைசி பெஞ்சில் படுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மாணவன் தூங்கியதை கவனிக்காத ஆசிரியர் மாலையில் பள்ளியைப் பூட்டிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஆசிரியரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவர் தவறுதலாக உள்ளே வைத்துப் பூட்டப்பட்டார். பின்னர் இதற்குக் காரணமான ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon