மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு!

பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு!

பட்டு உற்பத்தியில் இந்தியா இன்னும் நான்கு ஆண்டுகளில் தன்னிறைவு அடையும் என்று பட்டு வாரியத்தின் இணைச் செயலாளர் கேகே.செட்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (மார்ச் 14) பிசினஸ் லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தியா தரமான பட்டினை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை அடுத்த 3-4 ஆண்டுகளில் சரியாகும். 2022ஆம் ஆண்டில் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெறும். இந்தியாவில் ஆண்டின் இரண்டு பருவத்திலும் தரமான பட்டு உற்பத்தி அதிகரித்து வருகிறது. கச்சா பட்டின் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உயர்ந்த தரத்திலான பட்டு உற்பத்தி வளர்ச்சி 12 முதல் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தரமான பட்டு இறக்குமதி 2013-14ஆம் நிதியாண்டில் 2,559 டன்னாக இருந்தது. இது 2016-17 நிதியாண்டில் 5,266 டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயத்தில் 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தரமான பட்டு உற்பத்தி 6,200 டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் தரமான பட்டு உற்பத்தியை 12,000 டன்னாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட காலத்திற்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருக்காது. நாட்டின் ஒட்டுமொத்த கச்சா பட்டு உற்பத்தி 2016-17ஆம் நிதியாண்டில் 30,348 டன்னாக அதிகரித்துள்ளது. 2013-14ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த கச்சா பட்டு உற்பத்தி 26,480 டன்னாக மட்டுமே இருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் மொத்த கச்சா பட்டு உற்பத்தியை 33,000 டன்னாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கச்சா பட்டு உற்பத்தியை 45,000 டன்னாக அதிகரிக்க மத்திய பட்டு வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது" என்றார்.

இந்தியா 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 3,700 டன் அளவிலான தரமான பட்டைச் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. 2013-14ஆம் நிதியாண்டில் இதன் அளவு 7,000 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon