மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கார்த்தி வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்!

கார்த்தி வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்!

கார்த்தி சிதம்பரத்தை மத்திய அமலாக்கத்துறை கைது செய்வதற்கு வரும் 26ஆம் தேதி வரை தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், கார்த்திக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் குறித்த விசாரணை இனி உச்ச நீதிமன்றத்திலேயே நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. இதையடுத்து அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ கஸ்டடி விசாரணைக்குப் பின் இப்போது கார்த்தி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அதுபற்றி கார்த்தியிடம் விசாரணை நடத்த அவருக்கு ஏற்கனவே மத்திய அரசின் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதிலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், தனக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கார்த்தி. ஆனால் இதுபற்றி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த அதன்படி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் கார்த்தி.

டெல்லி கோர்ட்டு மனுவை விசாரித்து வருகிற 20-ந்தேதிவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இன்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் கபில்சிபல் ஆஜராக இயலவில்லை என்று காரணம் சொல்லி, கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை 22ஆம் தேதிவரை மேலும் 2 நாட்களுக்கு நீடித்து நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ். மேத்தா உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் கைது தடை உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய 26ஆம் தேதி வரை தடை விதித்தனர். மேலும், டெல்லி ஐகோர்ட்டில் உள்ள வழக்கை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என தெரிவித்தனர். 26 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon