மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஆக்‌ஷன் களத்தில் சசிகுமார்

ஆக்‌ஷன் களத்தில் சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் அசுரவதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கொடிவீரன் படத்தையடுத்து சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது படத்தின் மூலம் கவனம்பெற்ற எம்.மருதுபாண்டியனுடன் இணைந்தார் சசிகுமார். அசுரவதம் என்ற பெயரில் உருவான இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் 3 மணியளவில் வெளியிட்டுள்ளார்.

சசிகுமார் ஜோடியாக நந்திதா நடித்திருக்கிறார். ஆனால் முன்பு வெளியான டீசர் மற்றும் தற்போது வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் அவர் சம்பந்தபட்ட காட்சிகள் இடம்பெறவில்லை. மாறாக சசிகுமார் மற்றும் கிடாரி படத்தின் மூலம் கவனம்பெற்ற எழுத்தாளர் வசுமித்ர ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.

யாரென்றே யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு நபர் தன்னைப் பின்தொடர்வதும், போனில் பேசி பயம்காட்டுவதுமாக தொடரும் பயமுறுத்தலால் மன உளைச்சலுக்குள்ளாகிறார் வசுமித்ர. அந்த பயமுறுத்தலின் முடிவில் சசிகுமார்தான் தன்னை பயமுறுத்தியவர் எனத் தெரியவர, அவரிடமே ‘யாருடா நீ...’ எனக் கேட்கிறார். ‘நான் யாருன்னு உன் பொண்டாட்டியை கேளு’ என சசிகுமார் பதிலளிக்கும் விதமாக இந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே ஏற்கனவே வசுமித்ரவால் சசிகுமாருக்கு ஏதோ துன்பம் நேர்ந்திருக்கிறது. அதற்காக பழிவாங்குவதற்காகத்தான் சசிகுமார் வசுமித்ரவைப் பின்தொடர்கிறார் எனக் கருதமுடிகிறது. சென்டிமென்ட் கதைக் களத்தில் இறங்காமல் முழுக்க ஆக்‌ஷன் களத்தில் இறங்கியிருக்கிறார் சசிகுமார்.

சசிகுமார், வசுமித்ர கூட்டணியில் உருவான ‘கிடாரி’ வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வெற்றி அசுரவதத்திலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

அசுரவதம் ட்ரெய்லர்

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon