மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது அமைப்பின் பெயரை அறிவித்ததோடு, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.

ஆர்.கே. நகர் எம்எல்ஏவான டிடிவி. தினகரனுக்குக் குக்கர் சின்னத்தையும், அவர் கேட்கும் கட்சியின் பெயரையும் ஒதுக்கும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து புது கட்சியைத் தொடங்க தினகரன் முடிவு செய்தார்.

மதுரை மேலூரில் மார்ச் 15ஆம் தேதி கட்சியின் பெயர் அறிவிப்பு மற்றும் கொடி அறிமுகப்படுத்தும் விழா நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 14) டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் தொடங்கப்போவது புதிய அமைப்புதானே தவிர கட்சி அல்ல; அதிமுகவைக் கைப்பற்றுவதே நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய அமைப்பின் பெயர் அறிவிப்பு விழாவை முன்னிட்டு தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் மேலூரில் இன்று குவிந்தனர். 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்துச் செல்ல தனது வாகனத்தில் விழா அரங்கிற்கு தினகரன் வந்தார்.

விழா நடைபெற்ற இடத்தில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரன் உருவம் இடம்பெற்ற பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் தமிழக சட்டப்பேரவையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை இதே மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைத் தினகரன் நடத்தினார். அப்போது அவருக்குக் கூடிய கூட்டத்தைக் கண்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. ஆனால் இன்று காலையே நிகழ்ச்சி நடைபெறுவதால் அந்தளவு கூட்டம் வருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையும் விஞ்சும் அளவுக்கு இன்று மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

சுமார் 2 மணிநேர பயணத்துக்குப் பின்னர் காலை 9.50 மணியளவில் தினகரன் மேடைக்கு வந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, செந்தமிழன், கலைராஜன், பெங்களூரு புகழேந்தி உட்பட பலர் மேடையில் இருந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல், தினகரனுக்கு வீரவேலை வழங்கினார். மேடையில் பேசிய அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைத் திட்டித் தீர்க்க, இறுதியில் மைக்கைப் பிடித்தார் தினகரன்.

“துரோகிகள் பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன் கொடுத்த மனுவால் கடந்த ஆண்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அஇஅதிமுக பெயரில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டேன். ஆனால் நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பில் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் அணிக்கு வழங்குவதாகவும் அஇஅதிமுக என்ற பெயரை நாம் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறியது. இதையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும், உதயசூரியனை டெபாசிட் இழக்கச் செய்தோம். இரட்டை இலை தப்பித் தவறி பிழைத்தது” என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

பெயர் இல்லாமல் செயல்பட்ட நாம் இன்றுமுதல் பெயரோடு செயல்பட்டு துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்போம் என்று குறிப்பிட்ட அவர், “நமது இயக்கத்தின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்று மூன்று முறை கூறி அறிவித்தார். அதன் பின்னர் அமமுகவின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் உருவமும் இடம்பெற்றிருந்தது.

பின்னர் தனது பேச்சைத் தொடர்ந்த தினகரன், “இந்தக் கொடியை வடிவமைத்தவர், தஞ்சையில் ஒரு வட்டச் செயலாளராகப் பணியாற்றும் வெங்கட்ரமணி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இனி நாம் செயல்படுவோம். எந்தத் தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெறுவோம். துரோகிகளிடம் சிக்கியுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்கும்வரை குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். இரட்டை இலையையும், அதிமுகவையும் நிச்சயம் நாம் மீட்டெடுப்போம்” என்றார். “கூட்டுறவுச் சங்கத் தேர்தலாக இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் இந்தப் பெயரில்தான் போட்டியிடுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“இன்று முதல் நமது இயக்கத்தில் உறுப்பினர் சேர்ப்பதற்கான பணி துவங்க உள்ளது. இதுவரை எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு உறுப்பினர்களை நமது இயக்கத்தில் சேர்க்க வேண்டும். இளைஞர்கள், தாய்மார்கள் என அனைவரின் ஆதரவும் நமக்கு உள்ளது. அவர்கள் அனைவரையும் நீங்கள் தேனீக்கள் போல் செயல்பட்டு நமது இயக்கத்தில் சேர்க்க வேண்டும்” என்று நிர்வாகிகளுக்குக் கோரிக்கை வைத்து தனது உரையைத் தினகரன் முடித்தார்.

இறுதியாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த 100 அடி கம்பத்தில் அமமுகவின் கொடியைத் தினகரன் ஏற்றிவைத்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon