மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

அடுத்த வருடம் மார்ச்சுக்குள் தமிழகத்தின் கடன் 3,55,845 கோடி ரூபாயாக இருக்கும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அவர் அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை (மார்ச் 15) சட்டமன்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடையில் வந்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் பிரதமர் சந்திக்காதது, பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்திக் கறுப்பு உடையில் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காலை 10.30மணியளவில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. "தமிழக அரசின் வருமானம் ரூ. 1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி. 31.3. 2019 அன்று தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ 3,55,845 கோடியாக இருக்கும்” என்று தனது பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார்.

பட்ஜெட் உரையில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் பின்வருமாறு:

கடந்த ஆண்டு ரூ.14,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மாநிலப் பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறைக் காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

மானியம், உதவித்தொகை போன்றவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 75,723 கோடி. சம்பளச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ. 52, 171 கோடி.

நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18 இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டங்கள்

நடப்பு ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3000புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.

தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம், மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்கத் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

மொழி வளர்ச்சி

ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதற்கு ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும்.

வேளாண்மை

2018- 19 இல் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும்.

நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.

கல்வி

100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

சத்துணவுத் திட்டத்துக்குச் சமூக நலத் துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நம்புவதாகவும் பன்னீர்செல்வம் தன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடாத அரசுகளைக் கண்டித்தும், பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதை எதிர்த்தும் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பன்னீர்செல்வம் வாழ்த்து பெற்றார். பட்ஜெட் உரை சூட்கேசில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக முதல்வரும் துணை முதல்வரும் ஒன்றாகவே அவைக்கு வருகை புரிந்தனர்.

பட்ஜெட் உரை வாசிப்பு நிறைவடைந்த பிறகு இன்றைய கூட்டம் முடிவடையும், அதன் பிறகு சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் குழு கூடி எத்தனை நாட்கள் அவை நடைபெறும் என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட உள்ளது.

இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon