மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

உபி தோல்வி: மோடி, யோகி முற்றும் மோதல்!

உபி தோல்வி:  மோடி, யோகி முற்றும் மோதல்!

உத்தரப் பிரதேச மாநில இரு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் நேற்று, (மார்ச் 14) பாஜக படுதோல்வி அடைந்தது பற்றி 24 மணி நேரம் ஆகியும் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லை.

பாஜகவுக்கு சாதகமான தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும்போதே ட்விட்டரை திறந்துவிடும் மோடி, இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை.

இதுபற்றி பாஜகவின் உயர் மட்ட வட்டாரங்களில், ‘பிரதமர் மோடிக்கும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் இந்தத் தேர்தல் தோல்விக்குக் காரணம். இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக ஆராய்ந்து வருகிறது’’ என்கிறார்கள்

அவர்களிடம் தொடர்ந்து பேசினோம்.

’’கடந்த வருடம் நடந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இல்லாமலேயே தேர்தலை சந்தித்தது பாஜக. இதற்குக் காரணம் இருக்கிறது. உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்தி அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த நபர் தேசிய அளவிலும் பாஜகவில் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்று கருதினார் மோடி. அதனால் உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் முடிந்து பாஜக வெற்றி பெற்றபோது கூட மோடி, அமித் ஷாவின் முதல்வர் சாய்ஸ் யோகி ஆதித்யநாத் அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புதான் கோரக்நாத் மடத்தின் மூத்த மடாதிபதியாகவும் கோரக்பூரின் பாஜக எம்பியாக 25 வருடங்களாக இருந்து வரும் யோகி ஆதித்யநாத் தை தேர்வு செய்தது. கட்சிக்குள் ஒரு நபர் ஆதிக்கம் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.,செய்த ஏற்பாடுதான் யோகியின் தேர்வு என்று அப்போதே உபி மாநில ஊடகங்களும் தேசிய ஊடகங்களும் எழுதின.

இந்நிலையில்தான் கடந்த மார்ச் 11 ஆம் தேதி நடந்த இரு எம்பி தொகுதி இடைத்தேர்தல்களின் வேட்பாள்ராக யோகி பரிந்துரைத்தவர்கள் நிறுத்தப்படவில்லை. 25 வருடங்களாக கோரக்நாத் மடத்தைச் சேர்ந்தவரே கோரக்பூரின் எம்பியாக இருக்கும் நிலையில், இப்போது நிறுத்தப்பட இருக்கிற வேட்பாளரும் கோரக்நாத் மடத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் யோகி. மேலும் அது கால் நூற்றாண்டாக தான் ஜெயித்த தொகுதி என்பதால் தனது பரிந்துரைக்கு மதிப்பு அளிக்குமாறும் அவர் தலைவர் அமித் ஷாவிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால், அமித் ஷா- மோடி ஆகியோர் யோகி பரிந்துரையை நிராகரித்து, ‘யாரை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக்க முடியும் என்பதை நிரூபிப்போம்’ என்ற எண்ணத்தில் வேட்பாளர்களை முடிவு செய்தனர். எனவே வேட்பாளர் தேர்வின் போதே மோடிக்கும், யோகிக்கும் கருத்து வேறு பாடு முற்றிவிட்டது. இதற்கிடையில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் இணைந்து கொள்ள அதன் வேட்பாளர்கள் மிகவும் பலவீனமானார்கள்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, ‘முதல்வர் யோகியின் பரிந்துரைகளை ஏற்றிருக்கலாமோ என்று கட்சியின் தேசியத் தலைமை யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன் விளைவுதான் அமித் ஷா, மோடி ஆகியோரின் மௌனம். பாஜகவுக்குள் மோடி என்ற ஒற்றை நபரின் ஆதிக்கத்தை யோகி சமயோசிதமாக எதிர்த்து வருகிறார். மாநில பாஜக தலைவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தால்தான் பாஜக வெற்றி பெற முடியும் என்ற செய்தியை இந்த தேர்தல் தோல்வி அமித் ஷாவுக்கு கற்றுக் கொடுத்தால் நல்லது’’ என்று விரிவாகப் பேசினர் டெல்லியில் இருக்கும் முக்கியமான பாஜக பிரமுகர்கள்.

ஆக மோடிக்கும், யோகிக்குமான இடைவெளியை இந்தத் தேர்தல் முடிவுகள் அதிகரித்திருக்கின்றன என்பதே உண்மை.

-ஆரா

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon