மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை!

தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை!

குரங்கணி தீ விபத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தீவிபத்தில் சிக்கி மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அனுமதியின்றி மலையேறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

குரங்கணி தீ விபத்தில் தொடர்புடைய வன அலுவலர் ஜெயசிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

மலையேறியவர்களில் சிலர், அனுமதி வாங்கிய இடத்துக்கு மட்டுமல்லாமல் வேறு இடங்களுக்குச் சென்றதாகத் தெரியவந்துள்ளது. எந்தப் பகுதியில் ஏறி எந்தப் பகுதியில் இறங்க வேண்டும் என்பது தெரியாமல் சென்றுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது வேதனைக்குரியது. குறிப்பாக இளம் வயது பெண்கள் மலையேறியுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர்கள் தங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏனென்றால் இவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் வந்ததாக கூறுகின்றனர். அதாவது இவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

வார விடுமுறை நாட்களில் அதிகளவில் இதுபோன்று மக்கள் மலையேற வருவதாகவும், அதில் பலர் குடிபோதையில் இருப்பார்கள் என்றும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிகரெட் பற்றவைத்து வனத்தில் வீசிவிட்டால் அது தங்களையும், வனத்தையும் அழித்துவிடும் என்ற ஆபத்தை உணராமல் செயல்படுகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேரை அழைத்துச் சென்ற ஒருங்கிணைப்பாளர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தனிப்படைபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், வனத்துறையினரின் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக பிரபு கூறியுள்ளார். எனினும் பிரபுவிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னை பாலவாக்கத்தில் உள்ள டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் ஜியாட் என்பவரை குரங்கணி போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். அவர் வேறெங்கும் தப்பிக்க முயற்சி செய்யாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon