மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

ரயில் ஓட்டுநருக்கு அடி:ரயிலை கைப்பற்றிய பொதுமக்கள்!

ரயில் ஓட்டுநருக்கு அடி:ரயிலை கைப்பற்றிய பொதுமக்கள்!

செங்கல்பட்டு - தாம்பரம் பாதையில் இயங்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதைக் கண்டித்து, கூடுவாஞ்சேரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில், தினமும் 9.00, 9.15, 9.45 மணியளவில் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளிலிருந்து பயணப்படும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த மின்சார ரயில் சேவை அத்தியாவசியமானதும் அவசியமானதும். கடந்த ஒரு மாதமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் தாமதமாக வருவதால், பணிக்குச் செல்வோரும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி ரயில்வே துறையில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தொடர்ந்து ரயில் சேவை தாமதமாக இயக்கப்படுவதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் இன்று காலை 9.30 மணியளவில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ரயில் ஓட்டுநருக்கும் மறியலில் ஈடுபட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஓட்டுநர் சில பயணிகளால் தாக்கப்பட்டார். இதனால், இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுப்பட்டு ரயில்கள் இயக்கம் தடைபட்டது.

ரயில் மறியல் போராட்டம் நீடிப்பதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மேல்மருவத்தூர், சோழன், செங்கோட்டை மின்சார ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்களுக்காகக் காத்திருந்த பயணிகள், பொறுமையை இழந்து பேருந்து நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் காவல்துறையினருக்கும் பயணிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ரயில் மறியல் தொடர்கிறது. செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில் விரைவு ரயில்கள் முறைபடுதப்பட்டதிலிருந்து இது போன்ற மறியல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த வருடம் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மறிக்கப்பட்டு பயணிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அளவுக்கு போராட்டம் முற்றியது. ஆனாலும் அப்போது சொல்லப்பட்ட சமாதானங்கள் ஏதும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே இப்போது கூடுவாஞ்சேரியில் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கான சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கியின்றனர்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon