மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

லாலு: 4வது வழக்கில் இன்று தீர்ப்பு!

லாலு: 4வது வழக்கில் இன்று தீர்ப்பு!

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான தம்கா கருவூல மோசடி வழக்கில், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்குகிறது.

பிகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த 1991-96 காலகட்டத்தில், கால்நடைத் தீவன ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டின எதிர்க்கட்சிகள். லாலுவின் ஆட்சிக்கு முன்பாகவும், இந்த ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தியது சிபிஐ.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மூன்று வழக்குகளில் இதுவரை தீர்ப்பு வழங்கியுள்ளது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம். 2013ஆம் ஆண்டு முதல் வழக்குக்கான தீர்ப்பில், லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் காரணமாக, 11 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் லாலுவினால் ஈடுபட முடியாமல் போனது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று இரண்டாவது வழக்கில், அவருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 24ஆம் தேதியன்று, மூன்றாவது வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் லாலு.

இந்த நிலையில், இன்று தம்கா கருவூல மோசடி வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. போலி ரசீதுகள் மூலமாக, 1995-96ஆம் ஆண்டுகளில் இந்த கருவூலத்தில் 3.72 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

லாலு தவிர, பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா, ஜகதீஷ் சர்மா, ஆர்.கே.ராணா, வித்யாசாகர் நிஷாத் உட்பட 31 பேர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். தற்போது பிகார் மாநில தலைமைச்செயலாளராக இருக்கும் அஞ்சனி குமார் சிங்கை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிபிஐக்கு அனுமதி வழங்கியிருந்தார் நீதிபதி சிவபால் சிங்.

நேற்று (மார்ச் 14) ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜகனாபாத் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம் வெற்றி பெற்ற நிலையில், இன்று இந்த தீர்ப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிர்ஸா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் லாலு.

5வதாக உள்ள தொரண்டா கருவூல மோசடி வழக்கிலும், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon