மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 மா 2018

நாய் இறப்பு: மன்னிப்புக் கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்!

நாய் இறப்பு: மன்னிப்புக் கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்!

தனது விமானத்தில் பயணியின் நாய் இறந்த சம்பவத்திற்காக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

ஹுஸ்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு கேட்லினா ரோப்லிடோ என்ற பெண் தனது மகள் சோபியா மற்றும் செல்ல நாயுடன் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 12) விமானத்தில் பயணம் செய்தார். கேட்லினா நாயைத் தன் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் விமான விதிமுறையின்படி அதற்கு அனுமதி இல்லாததால், பயணிகளின் பைகளை வைக்கும் இடத்தில் நாயையும் வைக்கச் சொல்லி பணிப்பெண் ஒருவர் வற்புறுத்தியிருக்கிறார். மூன்றரை நேரப் பயணத்திற்குப் பிறகு நாய் இறந்து கிடந்ததைக் கண்ட கேட்லினா கதறி அழுதுள்ளார். இதனைப் பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்நிலையில் இந்தத் துயரச் சம்பவம் வருத்தத்துக்குரியது என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் விமானப் பயணச்சீட்டுக் கட்டணம் அவரிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிருகங்களைக் கையாளும் முறை இவ்வாறு சிக்கலில் முடிந்திருப்பது இது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹூஸ்டனிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு பயணம் செய்த விமானம் தரையிறங்கிய போது, லுலு என்ற 5 வயதான நாய் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்ட யுனைடெட் ஏர்லைன்ஸ், லுலு இறந்தது மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறி தனது இரங்கலை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்தது. அதேபோல் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், உலகின் மிகப்பெரிய முயல் என்று நம்பப்படும் சிமோன், லண்டனிலிருந்து சிகாகோவிற்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் மூலம் எடுத்துச் செல்லும்போது இறந்தது குறிப்பிடத்தக்கது. யு.எஸ். விமானங்களில் ஏற்பட்ட விலங்குகளின் இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு யுனைடெட் விமானங்களில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2017 பிப்ரவரி வரையிலான யு.எஸ் விமானங்களில் 136 விலங்குகள் உயிரிழந்ததாகவும், இதில் 53 விலங்குகள் யுனைடெட் விமானங்களில் இறந்துள்ளன என்று போக்குவரத்து துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 15 மா 2018