மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிபிஎஸ்இ : ப்ளஸ் 2 வினாத்தாள் லீக்!

சிபிஎஸ்இ : ப்ளஸ் 2 வினாத்தாள் லீக்!

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு அக்கவுண்டன்சி வினாத்தாள் நேற்று மாலை (மார்ச் 14) வாட்ஸ் அப்பில் வெளியானது.

சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கின. 17,574 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக 4453 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 78 தேர்வு மையங்கள் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மாலை ப்ளஸ் 2 அக்கவுண்டன்சி வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது.

டெல்லி கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா, “ப்ளஸ் 2 அக்கவுண்டன்சி வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த வினாத்தாளும் எனக்கு அனுப்பப்பட்டது. வாட்ஸ் அப்பில் வெளியான அக்கவுண்டன்சி வினாக்களும் உண்மையான வினாத்தாளில் உள்ள வினாக்களும் ஒத்துப் போகிறதா என்பதைக் கல்வி செயலாளர் மற்றும் கல்வி இயக்குநர் ஆராய்ந்தனர். வாட்ஸ் அப்பில் வந்த வினாத்தாளும் உண்மையான வினாத்தாளும் ஒத்துப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தேர்வின் வினாத்தாள் பாதுகாப்பின்றி டெல்லி மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்படுவதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon